எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் தரிசன டிக்கெட் தருவதாக பல லட்சம் ரூபாய் வசூலித்த போலி தேவஸ்தான அதிகாரிகள் கைது செய்யப் பட்டிருக்கிறார்களே?

ஏமாற்றுகிறவர்கள் ஆன்மிகம், மருத்துவம், பொருளாதாரம், அரசியல், அரசு வேலைவாய்ப்பு என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் ஏய்ப்பார்கள். மக்கள்தான் உஷாராக இருந்துகொள்ளவேண்டும். கடவுளுக்கு தன் பக்தர்கள் அனைவரும் ஒன்று தானே! அத்தனை அநியாயங்களையும் செய்துவிட்டு, ஒருவன் காசு செலவழித்து பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் டிக்கெட் வாங்கி சொர்க்கத்துக்குச் செல்லமுடியுமெனில், வாழ்நாள் முழுக்க அறத்துடனும், பக்தியுடனும் வாழ்பவர்களுக்கு என்ன அர்த்தமிருக்கிறது?

வண்ணை கணேசன், கொளத்தூர்

வெளிமாநில அதிகாரிகளைக் கொண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்தவேண்டு மென லண்டன் ரிட்டர்ன் பா.ஜ. தலைவர் கோரிக்கை விடுத்துள்ளாரே?

இங்கே மாநில தேர்தல் அதிகாரிகள், இருந்தாலும் மத்திய தேர்தல் ஆணையமும் என்ன நடக்கிறதென கவனித்துக்கொண்டு தானே இருக்கும். ஒன்றிய அரசின் மீதும் எதிர்க்கட்சிகள் தேர்தல் எந்திரம் முதல் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டுதான் இருக்கின்றன. அதற்காக ஐ.நா.விலிருந்து பார்வையாளர்களைக் கொண்டுவந்துதான் தேர்தல் நடத்தவேண்டு மென்றால் அது சரியாக இருக்குமா?

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

பா.ஜ.க. அ.தி.மு.க. தவிர அனைத்துக் கட்சிகளும் ஆளு நரைக் கண்டித்துள்ளதே?

ஆளுநரைக் கண்டிக்காமல் இருக்கும் நிலையிலேயே வளைத்து வளைத்து வருமான வரித்துறை சோதனை நடத்திக்கொண்டிருக்கிறது. ஆளுநரைக் கண்டிக்கப் போய் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யெல்லாம் வந்துவிட்டால்... கொஞ்சம் சும்மா இருங்க சார்!

அ.யாழினிபர்வதம், சென்னை 78

நான் போட்டியிட்டிருந்தால் ட்ரம்ப்பைத் தோற்கடித்திருப்பேன் என்று ஜோ பைடன் இப்போது சொல்கிறாரே?

இரண்டு தரப்புக்கு இடையில் சண்டை நடந்திருக்கிறது என்று வையுங்கள். அதில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர் சண்டை நடந்த இடத்தில் இல்லாமல் போயிருந்தால், நான் மட்டும் அங்கே இருந்திருந்தா இப்படியெல்லாம் நடக்கவிட்டிருப்பேனா என்பார். அதுபோன்றதுதான் இதுவும். இன்னொரு முறை தேர்தல் நடத்தமாட்டார்கள் என்ற தைரியம்தான்.

வாசுதேவன், பெங்களூரு

அக்டோபர் மாதம் வரை நடிக்கப்போவது இல்லை என்று நடிகர் அஜித் கூறியுள்ளாரே?

இப்போதே அஜித்தின் கடைசிப் படம் வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. இரண்டு குதிரையில் பயணிக்கிறவன் இலக்கைச் சென்றடையமாட்டான் என்றொரு பழமொழி இருக்கிறது.

ப. அஜித், மேட்டுப்பாளையம்

மெட்ரோ நகரங்களில் எப்படி டன் கணக்கில் குப்பை சேர்கிறது?

மெட்ரோ நகரங்களில் மக்கள் தொகை ஒரு கோடி, இரண்டு கோடி என இருக்கிறது. ஒரு குடும்பத்துக்கு நால்வர் எனத் தோராயமாக கணக்கு வைப்போம். ஒரு குடும்பம் சராசரியாக ஒரு நாளைக்கு 500 கிராம் குப்பை போடுகிறது என வையுங்கள். கிட்டத்தட்ட அதற்கே நாளுக்கு 250 கோடி கிலோ குப்பை சேர்ந்துவிடுகிறது. குப்பை கொட்டுவதைவிட அதை அகற்றுவது சிரமமான பணி. அதை உணர்ந்து நாமும் அளவாகக் குப்பை கொட்டவேண்டும்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

உத்திரபிரதேசத்திற்கு 31,039 கோடியும், தமிழகத்திற்கு 7,268 கோடியும் வரிப் பகிர்வு செய்துள்ளதே மத்திய அரசு...?

வரிப் பகிர்வில் உத்தரப்பிரதேசத்துக்கு நெருக்கமாக எந்த மாநிலமும் அருகில் இல்லை. ஒருவேளை பா.ஜ.க. அரசின், ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தங்களை சோதனை செய்து பார்க்கும் சிறப்பு ஆய்வுக்கள மாகவும், அரசியலமைப்பு மீறல்களை நடத்திப்பார்க்கும் இடமாகவும் இருப்ப தால், இந்த ஸ்பெஷல் கவனிப்பாக இருக்கலாம். கணிதச் சூத்திரம் மாதிரி, ஏதாவது ஒரு கணக்கீடை அடிப்படையாக வைத்து மாநிலங் களுக்கு வரிப்பகிர்வு செய்யவேண்டு மென எதிர்க்கட்சிகள் போராட வேண்டும். எந்தக் கட்சி மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும், அதனடிப்படையிலே வரிப்பகிர்வு நடந்தால்தான் இந்த நிலை மாறும்.

mm

ஸ்ரீவித்யா, சிவகங்கை

எல்.அன்.டி. நிறுவனர் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலைபார்க்க சிபாரிசு செய்கிறாரே?

இந்தியாவில் தற்போது அதிகாரப்பூர்வமாக வாரத்துக்கு 48 மணி நேரம்தான் வேலை நேரம். இதை 90 மணி நேரம் ஆக்குவது என்றால் கிட்டத்தட்ட இரு மடங் காக்குவது. ஏற்கெனவே இந்தியாவில் எத்தனையோ கோடிப்பேர் சரியான வேலைவாய்ப்பில்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். வேலை வாய்ப்பின்மை விகிதம் 7, 8 சதவிகிதமென அதிகரித்தபடியே செல்கிறது. நிறைய வேலை இருக்கிறது என்றால், இன்னொரு ஷிப்டில் அவர்களுக்கு வேலை வாய்ப்புத் தரலாம்.