அபூ ஆலிம் ரஷாதீ விழுப்புரம்

"வரி செலுத்துவதற்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து நிதி கேட்பது அற்ப சிந்தனை' என்று கூறுகிறாரே பியூஷ்கோயல்?

2012, டிசம்பர் மாதம், அன்றைக்கு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசை நோக்கி, “"60,000 கோடி வரியாகத் தருகிறோம். எங்களுக்கு உரிய நிதி கிடைப்பதற்காக நாங்கள் மத்திய அரசிடம் மடியேந்தி நிற்கவேண்டுமா?'’என்று கேட்டவர் அன்றைய குஜராத் முதல்வர் மோடி. இன்றைக்கு மத்தியில் பிரதமராக இருப்பது அதே மோடி. இப்படியொரு கேள்வியே எழாதபடிக்கு மாநிலங்களை வைத்துக் கொள்வதை விட்டு, அமைச்சர்களை ஏவி அற்ப சிந்தனை என வசை பாடலாமா?

mm

என்.இளங்கோவன், மயிலாடுதுறை

"நோபல் பரிசுபெறுவதற்கு நான் தகுதி யானவன். ஆனால் எனக்கு கொடுக்கமாட்டார் கள்' என்று கூறுகிறாரே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்?

அடேங்கப்பா, "காஸாவிலிருந்து பாலஸ்தீனியர் களை வெளியேற்றிவிட்டு, அங்கே உலக மக்களைக் குடியேற்றுவேன்' என்று சொன்னதற்காக நோபல் மட்டுமா கொடுக்கவேண்டும்? உலகின் அமைதிக் கான அத்தனை சர்வதேச பரிசுகளையும் அல்லவா ட்ரம்பின் காலடியில் குவிக்கவேண்டும்!

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

"விவசாயிகள் கஷ்டம் தெரியாதவர் ஸ்டாலின்' என பழனிசாமி கூறியிருப்பது குறித்து?

எட்டுவழிச் சாலை திட்ட வழித்தடத்தில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளிடம் கேட்டால் விவசாயிகள் மீதான எடப்பாடியின் பரிவைச் சொல்வார்கள். பரந்தூர் பகுதி மக்கள், காட்பாடியையொட்டி சிப்காட் அமையவிருக்கும் மகிமண்டலம் பகுதி மக்களிடம் கேட்டால் விவசாயிகள் மீதான ஸ்டாலினின் பரிவைச் சொல்வார்கள். எதிர்க்கட்சியாய் இருக்கும்போது இருக்கும் அரசியல்வாதி வேறு. ஆளுங்கட்சியாய் இருக்கும்போது இருக்கும் அரசியல்வாதி வேறு.

வாசுதேவன், பெங்களூரு

துரோகம் சரி, அது என்ன பச்சைத் துரோகம்?

பசுமை என்பது வளம், செழுமையைக் குறிக்கும். ஆக, துரோகத்திலே மிகச் செழுமையான துரோகம் பச்சைத் துரோகம். எதிராளி தனக்குத் துரோகம் இழைப்பான் என எதிர்பார்க்காத நிலையில் செய்யப்பட்ட துரோகம் பச்சைத் துரோகம்.

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

யமுனை அன்னையின் சாபத்தால்தான், ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது என்று கூறியிருக்கிறாரே டெல்லி ஆளுநர் சக்சேனா?

பார்த்துக்கொண்டே இருங்கள். இனி யமுனையில் பாலும் தேனும் பாயப்போகிறது. எதிர்க்கட்சிகள், ஒருங்கிணைந்து ஆளுநர் எதைப் பேசலாம், எதைப் பேசக்கூடாது என ஒரு மசோதா கொண்டுவரப் போராடலாம்.

ஆர்.ராஜ்மோகன், முட்டியூர்

"எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படம் விடுபட்ட விவகாரத்தைப் பற்றி செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வருத்தம்' எனக் குறைகூறும் ஜெயக்குமார், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை இதே ஊடகங்கள் பேசும்போது "ஊடகங்களின் பணி நாட்டுக்கு மிகவும் தேவை' என்று பாராட்டினாரே?

ஜெயக்குமாருக்கு மட்டுமா... எல்லா கட்சி களின் தலைவர்களுக்குமே ஊடகங்கள் தங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மட்டுமே செயல்படவேண்டும், மற்ற விஷயங்களை புறக்கணித்துவிட வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

எச்.மோகன், மன்னார்குடி

"உலகில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட விஷயம்' என்று எதனைக் கூறுவீர்கள்?

உலகில் பிறரிடம் கூறப்படும் விஷயங்களில் கணிசமான பகுதி மற்றவரால் தவறாகத்தான் புரிந்துகொள்ளப்படுகிறது. மிகக் குறைவான விஷயங்கள் மட்டுமே சரியாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அதனால் தனியாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை.

வண்ணைகணேசன், கொளத்தூர்

ஆண்டுக்கு 3,000 செலுத்தினால் அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் கட்டணமின்றி செல்லலாம் என புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே?

அது ஒருபுறம் இருக்கட்டும்... இந்தியாவெங்கும் நடைமுறையில் இருக்கும் சுங்கச்சாவடிகளில், எந்தச் சாவடிகள், எப்போது மூடப்படும், எப்போது குறைந்த கட்டணத்துக்கு மாறும் என்ற பட்டியலை மத்திய அரசு தரவேண்டும். சுங்கச்சாவடிகள் சுரண்டல்சாவடிகளா என்ற சந்தேகம் மெல்ல மெல்ல தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

எஸ். இளையவன், சென்னை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் அணுகுமுறை கடுமையாக இல்லையே ஏன்?

அரசன் தண்டிக்கும்போது, கோலை ஓங்கி வீசுவதுபோல காட்டவேண்டும். ஆனால் மெல்ல அடிக்கவேண்டும் என்பார் வள்ளுவர். இந்த விவகாரத்தில் அரசு, கோலை ஓங்கவே இல்லையே என்பதுதான் பலரின் சந்தேகம். மதுரை மக்கள் ஒற்றுமையாக இருந்து சாதித்ததில் 50 சதவிகிதம்கூட, அந்த வேண் டாத நிகழ்வைத் தடுப்பதற்கு அரசு ஆர்வம் காட்டவில்லை.