ஒரு முத்தம் சர்ச்சையாகியிருக்கிறது. அதுவும் தாயும் மகளும் கொடுத்துக்கொண்ட முத்தம். உலக அழகியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யாவின் மகள் ஆராதித்யா. இவருக்கு நவம்பர் 16-ஆம் தேதி 11 வயதானது. அதையொட்டி மகளின் பிறந்த நாளைக் கொண்டாடிய ஐஸ்வர்யா, மகள்மீதான அன்பைத் தெரிவிக்கும் வகையில் உதட்டில் முத்தமிட்டார்.
இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் கலாச்சாரக் காவலர்கள், "மகளாயிருந்தாலும் உதட்டில் எப்படி முத்தமிடலாம்' என சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள். இன்னொரு தரப்பினரோ, "ஒரு தாய் மகளுக்குக் கொடுக்கும் முத்தத்தில்கூட சர்ச்சையைக் கிளப்புகிறார்கள் வேலையற்றவர்கள்' என பதிலடி தந்திருக்கிறார்கள். முத்தத்துக்கு இவ்வளவு முட்டல்மோதலா!
பீகாரில் மயக்க மருந்து செலுத்தாமலே 23 பெண்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பீகாரின் சுகாரியா மாவட்டத்தின் அலௌலி ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. தனியார் கருத்தடை முகாம் ஒன்றால் ஏற்பாடு செய்யப் பட்ட நிகழ்வில் 30 பெண்கள் கலந்துகொண்டிருக் கின்றனர். இவர்களுக்கு மயக்க மருந்து தராமலே நான்கு பேர் கை, கால்களைப் பிடித்துக்கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள, பெண்களிட மிருந்து அலறல் எழுந்திருக்கிறது. இதைக் கேட்டு 7 பெண்கள் தப்பியோடிவிட்டனர். இது புகாராக மாறிய நிலையில்... மாவட்ட மருத்துவ அதிகாரி, “"இது மிகப்பெரிய மருத்துவ அலட்சியம். இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'’என்றிருக்கிறார். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் துணைமுதல்வர் தேஜஸ்வி என்பதால், பா.ஜ.க. கடுமையாக இதனை விமர்சித்து வருகிறது. மருத்துவர்களா? கசாப்புக் கடைக்காரர்களா?
பிரபல இயக்குநர் ஸ்பீல்பெர்க் இயக்கி, டாம் ஹேங்க் நடித்த "தி டெர்மினல்' படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் அமெரிக்கா சில நாடுகளை கறுப்புப் பட்டிய லில் வைத்ததால், விக்டர் நவ்ரோஸ்கியாக வரும் டாம் ஹேங்ஸின் விசா, பாஸ்போர்ட் காலாவதியாகிவிடும். இதனால் அமெரிக்க நாட்டு விமான நிலையத்திலேயே பல ஆண்டுகளைக் கழிக்கநேர்ந்த ஒருவனின் கதையை இயக்கி யிருப்பார் ஸ்பீல்பெர்க். இது ஒரு உண்மைக் கதை. இதன் நாயகன் மெர்கான் கரிமி நசேரி. சில சட்டரீதியான பிரச்சனை களால் நசேரி, பாரிஸின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்திலேயே 1988 முதல் 2006 வரை வசிக்கும்படியானது. நசேரியை பிரெஞ்சு அரசு அகதியாக அங்கீகரித்தது. தனது சொந்த நாடு திரும்பமுடியாத அவர், தன் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் மீண்டும் விமான நிலையத்தின் டெர்மினலிலேயே வசிக்கத் தொடங்கினார். இந்நிலையில் நசேரி, பாரிஸ் விமான நிலையத்தின் 2-வது டெர்மினலில் நவம்பர் 12-ஆம் தேதி நெஞ்சுவலியால் கால மானார். அடப்பாவமே!
பிரச்சினையில் சிக்கியிருக்கிறார் எலான் மஸ்க். ட்விட்டரை வாங்கிய கையோடு பிரபலங்கள், பிரபல நிறுவனங்களின் கணக்குகளின் உண்மைத் தன்மையை அறியப் பயன்படும் ப்ளூ டிக்குக்கு எட்டு டாலர் கட்டணம் அறிவித்தார். எட்டு டாலர் கட்டினால் சாதாரணருக்கும் ப்ளூ டிக் என தாராளம் காட்டி னார். அதுதான் இப்போது சிக்கலாக முடிந்திருக்கிறது. “excited to announce insulin is free now.- என்ற மருந்து நிறுவனம் அறிவிக்க, மளமளவென அதன் சந்தை மதிப்பு சரியத் தொடங்கியது. உண்மையில், அந்த ப்ளூ டிக்கை வாங்கியது உண்மை யான எலி லில்லி நிறுவனமே இல்லை. இந்த விவகாரம் தெரிந்து அதை முடக்குவதற்கு ட்விட்டருக்கு ஆறு மணி நேரம் ஆனது. அதற்குள் வேண் டிய சேதாரம் நடந்துவிட்டது. அசல் எலி லில்லி நிறுவனம் வழக்குத் தொடர்ந்தால் எலான் மஸ்க் பில்லியன் கணக்கில் அபராதம் கட்டவேண்டியிருக் கும். தவிரவும் எட்டு டால ருக்காக உறுதிப்படுத்தாமல் எந்த நிறுவனத்துக்கும் ட்விட்டர், ப்ளூ டிக் கொடுக்கும் என்ற கெட்ட பெயரும் வந்திருக்கிறது. ரெட் டிக் வாங்கிடுச்சே ட்விட்டர்!
ஆங்கிலேயர் காலத்தில் மத்திய தொல்லியல் துறை, கர்நாடக மாநிலம் மைசூரில் தொடங்கப்பட்டது. கல்வெட்டுகளின் நகல் கள், உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் துறை தொடர் பான ஆதாரங்கள் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கே இருப்பதில் 60 சதவிகித கல்வெட்டுப் படி கள் தமிழகத்தைச் சேர்ந்தவை தான். இவை முறையாகப் பாதுகாக்கப்படவில்லை என்ற புகாருடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. எனவே அவற்றை தமிழகத்துக்குக் கொண்டுவந்து பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழக தொல்லியல் துறை அதிகாரி கள் குழு மைசூர் சென்றது. அங்கு 80,000 கல்வெட்டுப் படிகள் இருந்ததாகக் கூறப் பட்ட நிலையில், வெறும் 30,000-க்கு நெருக்கமான வையே இருப்பதாக அறிய வந்தனர். இதையடுத்து அந்த கல்வெட்டுப் படிகள் மின் னணு வடிவில் மாற்றப்பட்டு 13,000 படிகள் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மிச்சத்தையும் சீக்கிரம் கொண்டுவாங்க!
-நாடோடி