நாகர்கோயில் களையெடுக்கப்பட்ட சுரேஷ்ராஜன்!

sureshrajan

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகளில் இறங்கியவர்களுக்கு எதிராக சாட்டையைக் கையிலெடுத் திருக்கும் முதல்வர் ஸ்டாலினின் அதிரடிக் களையெடுப்பில் முதல் விக்கெட்டாக வீழ்ந்திருக்கிறார் குமரி மா.செ. சுரேஷ்ராஜன். இது குறித்து தி.மு.க.வினர் கூறும்போது, "நாகர்கோவில் மாவட்டச் செயலாளர் மகேஷுக்கும் சுரேஷ்ராஜனுக் கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். தி.மு.க. மேயருக்கு மகேஷை கொண்டுவராமலிருக்க சுரேஷ்ராஜன் காய்களை நகர்த்தி வந்த நிலையில்..., மனோ தங்கராஜின் முயற்சியால் மகேஷின் பெயரை தலைமை அறிவித்தது. 52 வார்டுகளைக் கொண்ட மாநக ராட்சியில் தி.மு.க கூட்டணி 32 வார்டு களைக் கைப்பற்றியது. பா.ஜ.க., அ.தி.மு.க., சுயேட்சை என ஒன்றுசேர்ந்து 20 இடங்களைப் பிடித்தன. இந்த நிலையில் மேயர் மற்றும் துணைமேயர் தேர்தலில் ஈசியாக வெற்றி பெற்றுவிடலாம் என்றிருந்த நிலையில் பா.ஜ.க. நம்பிக்கையோடு அ.தி.மு.க. மற்றும் சுயேட் சைகளுடன் கூட்டணி யமைத்து போட்டியிலிறங்கி தி.மு.க.வுக்கு கடும் நெருக்கடி யைக் கொடுத்தது. வாக்கெடுப்பில் தி.மு.க.வுக்கு 32 ஓட்டுகளுக்கு பதில் 28 கிடைக்க, பா.ஜ.க.வுக்கு 24 ஓட்டு கிடைத்தது. தி.மு.க.வைச் சேர்ந்த 4 பேர் பா.ஜ.க.வை ஆதரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்த... அந்த கறுப்பு ஆடுகளைக் களையெடுக்கத்தான் முதல்வர் அதிரடியில் இறங்கியுள்ளார்''” என்றனர். இதுகுறித்து மகேஷின் ஆதர வாளர்கள் கூறும்போது, "வார்டில் மகேஷ் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதில் சுரேஷ்ராஜன் உறுதியாக இருந்தார். அதையும் முறியடித்ததால், மேயர் தேர்வில் மகேஷை வீழ்த்திவிட ரகசிய வேட்டையில் ஈடுபட்டார். இந்த நிலையில்தான் சுரேஷ்ராஜனின் தீவிர ஆதரவாளரான 9-ம் வார்டு ராமகிருஷ்ணன் துணைமேயர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மேரி பிரின்சியை எதிர்த்து பா.ஜ.க. ஆதரவுடன் போட்டியிட்டார். அப்போதும் தி.மு.க.வுக்கு 28-ம் ராமகிருஷ்ணனுக்கு 24-ம் என வாக்குகள் கிடைத்தன. சுரேஷ்ராஜனின் ஆதரவாளர்கள் 7 பேர் பா.ஜ.க.வை ஆதரித்துள்ளனர். அதேநேரத்தில் பா.ஜ.க.விலிருந்து 3 பேர் தி.மு.க.வை ஆதரித்ததால் மகேஷ் வெற்றிபெற்றார். அ.தி.மு.க. தளவாய்சுந்தரம், பா.ஜ.க., சுரேஷ்ராஜன் டீம் சேர்ந்து மகேஷுக்கு கடுமையான நெருக்கடியைக் கொடுப்பதாக மேயர் தேர்தலுக்கு முந்தின நாள் இரவு ஸ்டாலினிடமே பேசி அழுதார் மகேஷ். அப்போது "நீங்க வெற்றி பெறுவது உறுதி, நம்பிக்கையோடு இருங்கள்'' என்றிருக்கிறார் ஸ்டாலின். மா.செ. பதவியைப் பறித்ததில் சோர்ந்திருக்கும் சுரேஷ்ராஜனிடம் நாம் பேசியபோது, "என் விளக்கத்தை தளபதியிடம் கூறிவிட்டேன்''’என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

-மணிகண்டன்

Advertisment

dd

Advertisment

ஆம்பூர் மல்லுக்கட்டு! ரத்தானது தேர்தல்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியில் தி.மு.க. 20, அ.தி.மு.க. 5, ம.ம.க. 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, காங்கிரஸ் 1, பா.ஜ.க. 1, சுயேட்சைகள் 4 இடங்களில் வெற்றிபெற்றனர். நகர்மன்றத் தலைவர், நகர்மன்றத் துணைத்தலைவர் பதவிக்கு தி.மு.க.வுக்குள்ளேயே பலத்த போட்டி ஏற்பட்டது. ஆம்பூர் நகரச்செயலாளர் ஆறுமுகம், கழக மாவட்ட சிறுபான்மை அணி நிர்வாகி ஷபீர்அகமதை சேர்மன் வேட்பாளராகப் பரிந்துரைத்தார். ஆம்பூரில் பிரபலமான தனியார் காலணி தொழிற்சாலை உரிமையாளரோ தி.மு.க.வைச் சேர்ந்த ஏஜாஸ் அகமதை சிபாரிசு செய்தார். தி.மு.க. தலைமையும் அவரையே அறிவித்தது. இதை ஏற்க மனமில்லாமல் ஏஜாஸ் அகமதுவுக்கு எதிராக ஷபீர் அகமதுவை போட்டி வேட் பாளராக ந.செ. ஆறுமுகம் தரப் களமிறக்கியது. மறைமுகத் தேர்தலின்போது நகராட்சி அலுவலகத்துக்கு எம்.எல்.ஏ. வில்வநாதன், எம்.பி. கதிர்ஆனந்த் வருகை தந்தனர். அவர்கள் வெளியேற வேண்டு மென தி.மு.க.வில் ஒருதரப்பினர் கோஷங்கள் எழுப்பியதால் அவர்கள் வெளியேறினர். பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியதும், ஷபீர்அஹமது கவுன்சிலரிடம் வாக்கு கேட்க, வாக்குப் பதிவின்போது எப்படி வாக்கு கேட்கலாம் என ஏஜாஸ் அகமது பிரச்சினை செய்தார், அப்போது ஒருவர் மட்டுமே வாக்களித்திருக்க, அந்த இடமே போராட்டக் களமானதால் கலெக்டர் உத்தரவுப்படி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

cc

உதயேந்திரம் குழப்பத்தை உருவாக்கிய அதிமுக!

திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பேரூராட்சியில் தி.மு.க. 8, அ.தி.மு.க. 6, சுயேட்சை ஓரிடத்தில் வெற்றிபெற்றுள்ளனர். தி.மு.க. சார்பில் பேரூராட்சி செயலாளர் செல்வராஜ் தாயார் பூசராணியை சேர்மன் வேட்பாளராக அறிவித்தது தி.மு.க. தலைமை. அதன்படி பூசராணி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து தி.மு.க.வின் 3வது வார்டு கவுன்சிலர் மகேஸ்வரியும் வேட்புமனுத் தாக்கல் செய்து அதிர்ச்சியளித்தார். இதில் பிரச்சினையாக, மகேஸ்வரிக்கு ஆதரவாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் திரண்டனர். விவகாரம் கைகலப்பாக, காவல்துறையினர் தடியடி நடத்தி இருதரப்பையும் விரட்டினர். தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து மகேஸ்வரி, "அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எனக்கு ஆதரவளிப்பதாகக் கூறியதால் வேட்புமனுத் தாக்கல் செய்தேன்'' என்றார். சுயேட்சையோடு, தி.மு.க. தரப்பில் ஒருவரை நம் பக்கமிழுத்தால் சேர்மன் பதவியை எட்டலாமென்ற எண்ணத்தில் முன்னாள் அமைச்சர் வீரமணி, வாணியம்பாடி எம்.எல்.ஏ. செந் தில்குமார் ஆகியோர் களத்தில் இறங்கியதே இந்த விவகாரத்துக் குக் காரணமென்று கூறப்படுகிறது.

cc

ஆரணி கட்சியை விட சாதியே பெரியது! காங்கிரஸ் கவிழ்த்த கதை!

ஆரணி நகர்மன்றத்தில் அ.தி.மு.க. 15, தி.மு.க. 12, ம.தி.மு.க., காங்கிரஸ் தலா 2, வி.சி.க., சுயேட்சை தலா 1 என உள்ளனர். இங்கு நகர்மன்றத் தலைவர் பதவி தி.மு.க.வின் ஆரணி நகரச்செயலாளர் ஏ.சி.மணிக்கும், நகர்மன்றத் துணைத்தலைவர் பதவி சி.பாபுவுக்கும் என முடிவுசெய்து தலைமைக்குத் தெரிவித்தனர். தி.மு.க. தலைமையோ வைஸ் சேர்மன் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கியது. நகர்மன்றத் தலைவர் பதவிக்கு ஏ.சி.மணி, அ.தி.மு.க.வின் பாரி.பாபு இருவரும் போட்டியிட்டதில், மணி 20 வாக்குகளைப் பெற்று வென்றார். இதில் அ.தி.மு.க.வின் இரண்டு ஓட்டும் தி.மு.க.வுக்கு விழுந்தது. துணைத்தலைவருக்கு காங்கிரஸ் கவுன்சிலர் மருதேவி மனு செய்தார். அதை எதிர்த்து பாரி.பாபு மனு செய்தார். இதில், சேர்மன் தேர்தலில் தோற்ற பாரி.பாபு, 18 வாக்குகளைப் பெற்று வென்றார். இதுகுறித்து விசாரித்ததில், இரண்டு கவுன்சிலர்கள் கூடுதல் பலமிருந்தால் வெல்லலாமென்ற எண்ணத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பண பேரத்துடன் களமிறங்க, தி.மு.க. ந.செ. மணி சேர்மன், முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம் மகன் பாபு வைஸ்சேர்மன் என உறுதி செய்யப்பட்டது. வைஸ்சேர்மன் பதவியை காங்கிரசுக்கு தி.மு.க. தலைமை அறிவிக்க, தி.மு.க. ஏ.சி.மணி, அ.தி.மு.க. சேவூர்.ராமச்சந்திரன், பாரி.பாபுவுடன் சாதி ரீதியாகக் கூட்டணி அமைத்து, "உங்க கட்சியிலுள்ள நம்ம சாதி கவுன்சிலர்களை எனக்கு ஓட்டுப்போடச்சொல்லுங்க, எங்க கட்சியில் இருக்கற நம்ம சாதி கவுன்சிலர்களை உங்க வேட்பாளருக்கு ஓட்டுப்போடச்சொல்றன்'' என டீலிங் செய்து, சேர்மன், வைஸ் சேர்மனாகிவிட்டார்கள். இதில் ஏமாற்றப்பட்ட காங்கிரஸ் தி.மு.க. தலைமைக்கு அனைத்து விவரத்தையும் அனுப்பியுள்ளது.

குடியாத்தம் அ.தி.மு.க.வை வெற்றிபெறவைத்த தி.மு.க!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் தி.மு.க. 21, காங்கிரஸ், ம.தி.மு.க. தலா ஓரிடத்திலும், அ.தி.மு.க. 10 இடத்திலும், பா.ஜ.க. ஓரிடத்திலும், சுயேட்சைகள் 2 இடத்திலும் வென்றுள்ளார்கள். சேர்மன் தேர்தலில் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ந.செ சௌந்தர்ராஜன் வெற்றி பெற்றார். துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் விஜயன் -அ.தி.மு.க. பூங்கொடி மோதினர். தி.மு.க.வினர் 6 பேர் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க, இருவரும் 18 வாக்குகள் வாங்கி சமமாக இருந்தனர். இதில் குலுக்கல் முறையில் தேர்வு செய்ததில் அ.தி.மு.க. பூங்கொடிமூர்த்தி வெற்றிபெற்றார். தி.மு.க. நிர்வாகி லாட்டரி கோபாலகிருஷ்ணன் தரப்பினர்தான் உள்ளடி வேலை பார்த்ததாகப் புகாரளிக்கிறார்கள் தி.மு.க.வினர்.