டெல்லியில் நுழையத் தடைவிதிக் கிறோம் என்ற பெயரில் ஹரியானா காவலர்களும், சி.ஆர். பி.எஃப் படையினரும் போராட்டக் களத்தில் தூங்கும் விவசாயி களைக் கடத்திச் சென்று, அவர்களது கால்களை முறிப்பதாக விவசாயிகள் குற்றம்சுமத்துகின்றனர்.
இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, ஒன்றிய அரசுடன் மேற்கொண்ட 4-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந் ததையடுத்து மீண்டும் டெல்லியை முற்றுகையிடத் திட்டமிட்டுள்ளனர். பிப்ரவரி 26-ஆம் தேதி ட்ராக்டர் அணிவகுப்பை மேற்கொண்டனர்.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், கடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது அவர்கள் மீது பதியப் பட்ட வழக்குகளை ரத்துசெய்தல், மின்சாரத் திருத்தச் சட்ட மசோதா ரத்து உள்ளிட்ட 12-க்கும் அதிகமான கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு செய்தனர்.
டெல்லியை நோக்கி முன்னேறிய விவசாயிகளை இரும்புக் கரம்கொண்டு அரசு ஒடுக்க முற்பட்டது. ஆயிரக்கணக்கான கண்ணீர்ப் புகைக் குண்டுகள், சில இடங்களில் பிளாஸ் டிக் குண்டுகள் டெல்லியை நோக் கிக் கிளம்பிவந்த விவசாயிகள் மீது பிரயோகிக்கப் பட்டன.
அரசின் இந்த தாக்குதல் நடவடிக்கையில் விவசாயிகள் தரப்பில் பஞ்சாப்பின் குர்தாஸ்பூரைச் சேர்ந்த விவசாயி ஞானசிங் உயிரிழந்தார். பிப்ரவரி 18ஆம் தேதி போராட்டத்தில் கலந்துகொண்ட பாட்டியாலாவைச் சேர்ந்த நரேந்தர் பால் எனும் விவசாயி உயிரிழந்தார். போராட்டம் தொடங்கும் முன்பே இறந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆகிவிட்டது. 3 பேருக்கு பெல்லட் தாக்குதலால் கண் பார்வை பறிபோயிருந்தது.
இந்நிலையில் நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததையடுத்து, பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் டெல்லி நோக்கி பேரணியைத் தொடரப்போவதாக அறிவித்தனர்.
இதனால் டெல்லி எல்லைகளில் போலீசார், துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர். எல்லை முழுவதும் கம்பிவலைகள், இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அத்துமீறி நுழையும் விவசாயிகள் மீது பிரயோகிக்க 30,000 கண்ணீர்ப் புகைக்குண்டுகள் தயார்படுத்தப் பட்டன.
பஞ்சாப் கிஷான் மஸ்தூர் கமிட்டித் தலைவர் சர்வான் சிங், “"எங்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கவேண்டாம். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை அறிவித்து போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள். விவசாயிகளை ஒடுக்கும் அரசாங்கத்தை தேசம் ஒருபோதும் மன்னிக்காது''’என தெரிவித்தார்.
ஹரியானா எல்லையில் இரும்பு சீட்டுகள், தண்ணீர் டேங்குகளுடன் வரும் விவசாயிகளை போலீசார் கைதுசெய்யத் தொடங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஹரியானா பகுதி விவசாய சங்கத் தலைவர் ஒருவர், "பிப்ரவரி 21 அன்று ஹரியானா காவல் துறையினர். சி.ஆர்.பி.எஃப்.பைச் சேர்ந்தவர்கள் சிவில் உடையில் வந்து, போராட்டம் நடந்த இடத்தில் இருந்த இளைஞர்களை "ஜெய் ஸ்ரீராம், ஜெய் மாதா கி' என கூவி தூண்டிவிட முயன்றனர். இதற்கு எங்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். திடீரென்று மதியம் 2 மணியளவில் அங்கு எரிவாயுக் குண்டு வீசப்பட்டது. போராடியவர்கள் மீது நிர்வாகம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன்சிங் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
நிர்வாகம் குறிப்பாக முகத்துக்கு மேல் பெல்லட் குண்டுகளைச் சுடுகிறது. பலர் கண்களிலும் உடற்பகுதிகளிலும் சுடப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் வேலிகளைத் தாண்டிவந்து டிராலிகளில் தூங்கிக்கொண்டிருந்த 12 முதியவர்களைக் சாக்குமூட்டைகளில் போட்டு கடத்திச் சென்றுவிட்டனர். தடுப்புக்கு அந்தப் பக்கம் சென்று அவர்களின் கால்களை உடைப்பதைப் பார்த்தோம். கடத்தப்பட்ட சிர்சாவைச் சேர்ந்த முதியவர் இரண்டு கால்களும் உடைந்த நிலையில் வயல்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு போராட்டக்காரர் ஜக்பீர் கண்களில் பெல்லட் குண்டுகளால் சுடப்பட்டுள்ளார்'' என ஹரியானா எல்லையோர காவலர்கள், பாதுகாப்புப் படையினர்மேல் குற்றம்சாட்டினார். பிப்ரவரி 21லிஆம் தேதி தாக்குதலில் புதிதாக 160 பேர் காயம்பட்டனர்.
போராடும் விவசாயிகளை மட்டுமன்றி, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர் களிடமும் இரக்கமின்றி மூர்க்கமாக நடந்துகொள்கிறது மோடி அரசு. சுப்கரன் சிங் கொல்லப்பட்டதற்கு எதிராக பிப்ரவரி 23-ஆம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்கப்போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்பாக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து 25 மாணவர்கள் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்தனர். கையில் அறிவிப்புப் பலகைகளுடன் அமைதியாக அமர்ந்திருந்த மாணவர்கள் மீது போலீஸ் முன்னறிவிப்பின்றி தாக்குதலைப் பிரயோகித்ததோடு, போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் மாணவிகளையும் முரட்டுத்தனமாகக் கையாண்டு வேனில் அடைத்தது காவல்துறை.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற பேராசிரியை சாரதா தீக்சித்தையும் இதேபோல முரட்டுத்தனமாக வேனுக்குள் தூக்கிவீசியதில் அவர் நினைவிழந்தார். போராட்டக்காரர்கள் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்ட பின்பே காவல்துறை தீக்சித்தை மருத்துவமனையில் அனுமதித்ததாக இச் சம்பவங்களை நேரில் கண்ட டெல்லி பல்கலைக் கழகத்தின் மற்றொரு ஓய்வுபெற்ற துணை பேராசிரியர் நந்திதா நரைன் "தி வயர்' வலைத்தளத்தில் பதிவுசெய்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளுக்கு இணங்காத விவசாயிகளின் கால்களை முறித்து, அடக்கு முறையால் ஒடுக்கும் முடிவுக்கு வந்துவிட்டதோ அரசு?