எம்.ஜி.ஆர். - சிவாஜி காலத்தில், சினிமா வால்போஸ்டர்களில் சாணி அடிக்கும் அளவுக்கு, இவ்விருவரின் ரசிகர்களும் வெறுப்புணர்ச்சி கொண்டவர்களாக இருந்தார்கள். சினிமாவிலிருந்து விலகிய எம்.ஜி.ஆர். அரசியலில் உச்சம் தொட்டதும், சிவாஜி ரசிகர்களுக்கு வேகம் காட்ட வேண்டிய வேலை இல்லாமல் போனது. அதே நேரத்தில், எம்.ஜி.ஆர். ரசிகர்கள், திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றியதும், கலைஞர் எதிர்ப்பை சிக்கெனப் பிடித்துக் கொண்டனர்.

rbalaji

எம்.ஜி.ஆரும் கலைஞரும் இயற்கை எய்திய பின்னரும், அந்த எதிர்ப்பு இன்றுவரையிலும் தொடர்கிறது. திமுகவினரும் அதிமுகவினரும் ஒருவரை ஒருவர் எதிரிகளாக கருதும் நிலை ஜெயலலிதா தலைமையில் இருந்த போது மிகவும் தீவிரமானது. அதனால், கட்சி ரீதியாக குடும்பங்களிலும்கூட பிளவு ஏற்பட்டது. திமுகவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் அதிமுகவினர் கலந்துகொண்ட ஒரு புகைப்படம் கிடைத்துவிட்டால் போதும். உடனே, அதிமுக கட்சித் தலைமைக்கு போட்டோ ஆதாரத்துடன் புகார் அனுப்பி விடுவார்கள். அந்த நபர் கட்சியிலிருந்தே கட்டம் கட்டப்படுவார். இதெல்லாம் தெரிந்த சேதிதான்!

விருதுநகர் மாவட்டத்தில், ஒரு காலத்தில் அ.தி.முக. அமைச்சராக இருந்த இன்பத்தமிழன், தனது தந்தையும் தி.மு.க.வில் இணைந்துவிட்ட எம்.ஜி.ஆர்.கால அ.தி.மு.க. தளபதியுமான தாமரைக்கனி இறந்தபோது, ஜெ.வின் உத்தரவால் கொள்ளி வைக்கக்கூட வரமுடியாத அளவுக்கு அரசியல் பகை, தந்தை-மகன் உறவில் ஊடுருவியிருந்தது. எல்லாம் முடிந்தபிறகு மயானத்திற்கு வந்து, ‘தாயை இழந்த ராஜ்கிரண்’ போல தந்தையை இழந்த இன்பத்தமிழன் கண்ணீர் விட்டார்.

Advertisment

rbalaji

அதே விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த அக்கப்போர் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். திமுக-அதிமுக மோதல் என்பதே இல்லாமல், அரசியலில் நாகரிகம்’காத்து வருகிறது இந்த மாவட்டம். இதற்குக் காரணம்- திமுக மா.செ.வான கே.கே. எஸ்.எஸ்.ஆரும், மா.செ.வாக இருந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும், முன்பு ஒரே கட்சியில் (அதிமுக) இருந்தவர்கள் என்பதுதான். அதனால், இருவருக்கும் இடையே அண்டர்ஸ் டேண்டிங்’ இருந்து வருகிறது. இன்னொரு திமுக மா.செ.வான தங்கம் தென்னரசு, கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இடையிலும் இதே அணுகுமுறைதான். கண்ணுக்குத் தெரியாத இந்த நெருக்கம், தேர்தல் சமயத்தில், அட்ஜஸ்ட் மெண்ட்’ ஆக பளிச்சென்று வெளிப்படும். இதெல்லாம் தெரிந்தாலும், வெற்று முனகலோடு இரு கட்சியினரும் அடங்கிவிடுவார்கள். இதற்கெல்லாம், தற்போது சோதனை வந்து விட்டது. இரு தரப்பிலும் சமீபத்தில் வெளிவந்த காரசாரமான அறிக்கைகள், அப்படி ஒரு உஷ்ணத்தை, இந்த மாவட்டத்தில் கிளப்பி யிருக்கின்றன.

விருதுநகர் மா.செ. பொறுப்பிலிருந்து கே.டி. ராஜேந்திரபாலாஜி நீக்கப்பட்டது முதல், அவருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ‘விரிசல்’ ஏற்பட்டுவிட்டதாகவே, அக்கட்சியினர் பேசி வருகின்றனர். ஆனால், ஏதோ ‘மேஜிக்’ நடந்து, எடப்பாடியே கே.டி.ராஜேந்திரபாலாஜியை அழைத்து, திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் எதிராக அறிக்கைவிட வைத்திருக்கிறார். அந்த அறிக்கை டிஐபிஆர் எனப்படும் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

rbalaji

தனது அறிக்கையில், பீகார் வாத்தியாரின் திரைக்கதைக்கு ஏற்ப மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்றும், நிவாரணம் என்ற பெயரில் சென்னையில் கொரோனாவை பரப்பியதே திமுகதான் என்றும், நிவாரணத்துக்காக பாண்டி பஜார் பகுதிகளில் வணிக நிறுவனங்களிட மிருந்து மிரட்டி வசூலித்தார்கள் என்றும் ஒரு பிடிபிடித்துவிட்டு, எடப்பாடி பழனிசாமியை உழவன் வீட்டில் உதித்த ஒப்பில்லா முதல்வர் என்று ஒரேயடியாக புகழ்ந்து தள்ளிவிட்டார், கே.டி.ராஜேந்திரபாலாஜி.

கே.டி.ராஜேந்திரபாலாஜியின் அறிக்கை, திமுக தலைமையை டென்ஷன்’ஆக்கிவிட, பதிலடியாக அறிக்கை தயாரானது. விருதுநகர் மாவட்ட திமுக மா.செ.க்களான கே.கே.எஸ். எஸ்.ஆர். மற்றும் தங்கம் தென்னரசுவின் பெய ரில், அது கூட்டறிக்கையாக வெளியிடப்பட்டது. காரம் தூக்கலாக இருக்க வேண்டும்’என்றே, அந்த அறிக்கையில், "சூரியனைப் பார்த்து ஏதோ ஒன்று குரைத்ததைப்போல’ என்றும், வறட்டுத்தவளை’ என்றும், மூளைச் சிதைவுக்கு உள்ளானவர்’ என்றும், துறை ரீதியாக ராஜேந்திரபாலாஜியின் மைனஸ்களையும் பட்டியலிட்டு, ஒரேயடியாக தாக்கியிருந்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு புளுகுப் புகழாரங் களைச் சூட்டி, இழந்த பதவியை மீட்கத் துடிக்கிறார் என்றதோடு, கொரோனாவால் கொன்றான்’என்ற பட்டத்தை, முதல்வருக்கு மக்களே தந்துவிட்டார்கள்' என்றும், கடுமை யான வார்த்தைகளை, அந்த அறிக்கையில் இடம்பெறச் செய்திருந்தனர்.

இந்த யுத்தத்தால், விருதுநகர் மாவட்ட திமுக - அதிமுக ஒற்றுமை அரசியலை, முதலமைச்சரும், திமுக தலைமையும் வலுவாகவே பிரித்துவிட்டது என்கிறார்கள் இரு கட்சிகளிலும் உள்ள மாவட்டப் புள்ளிகள்.

- ராம்கி