பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வியை எழுப்பியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம் வரை இந்த படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து டீட்டெய்ல் ரிப்போர்ட்டை மத்திய உளவுத்துறை (ஐ.பி.) டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றி கவர்னர் ரவியிடம் அறிக்கை கேட்டிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.
தமிழகத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் சில மாதங்களாக நடக்கும் முக்கிய பிரமுகர்களின் படுகொலைகள் பொதுமக்களை மட்டுமல்ல, அரசியல் கட்சிகளையும் அதிர வைப்பதாக இருக்கின்றன.
கடந்த மே மாதம் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் படுகொலை பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், ஜெயக்குமாரின் படுகொலைக்கான குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் படுகொலையை தற்கொலையாக மாற்ற முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால், சி.பி.சி.ஐ.டி.யின் புலனாய்வு இன்னும் தெளிவான உறுதியான முடிவை நோக்கி நகராமல் இருந்துவருகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்து புலனாய்வு செய்த நிலையில் 3 மாதங்களாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. படுகொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் எழுதி வைத்த கடிதங்களில் பலரின் பெயர்கள் இருந்தும் அவர்களை அழைத்து விசாரிப்பதில் கூட சி.பி.சி.ஐ.டி. வேகம் காட்டவில்லை. ஜெயக்குமாரின் படுகொலை இன்னமும் மர்ம முடிச்சாகவே இருக்கிறது.
இந்தப் படுகொலை சம்பவத்தின் அதிர்ச்சி விலகாத நிலையில், அதே மே மாதம் மூன்றாவது வாரத்தில் நெல்லை பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான தீபக்ராஜா என்பவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். ஒரு ஹோட்டலில் சாப்பிடச் சென்ற அவரை ஒரு கும்பல் கண்மூடித்தனமாக ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தது. தென் மாவட்டங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சி யையும் ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை கைது செய்யாமல் தீபக் ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் ஆவேசப்பட்டார்கள். இந்த படுகொலையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு வாரத்திற்கு பிறகு உடலை பெற்று அடக்கம் செய்தனர் தீபக்ராஜாவின் குடும்பத்தினர்.
கடந்த ஜூலை 3-ந் தேதி. சேலம் மாவட்ட அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகரும் சேலம் மாநகராட்சியின் மண்டலக்குழு முன்னாள் தலைவருமான சண்முகம், இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை மடக்கி, ஒரு கும்பல் கடுமையாகத் தாக்கி கொலை செய்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவராக இருந்தவர் சண்முகம். அவரது படுகொலை சேலம் மாவட்டத்தை அதிரவைத்தது.
இப்படி கடந்த 3 மாதங்களில் மட்டும் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் சில நாட்கள் இடைவெளியில் கொல்லப்பட்ட சம்பவங்களும், தாக்கப்படுகிற சம்பவங்களும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை கவலைக் குரியதாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்ற சூழலில்தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடந்திருக்கிறது.
இந்த படுகொலைக்கு நாங்கள்தான் காரணம் என 8 பேர் சரணடைந்தனர். ஆனால், அவர்களை போலீசார் கைது செய்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தபடி இருக்கின்றனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.
தி.மு.க. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோ ரும் படுகொலை சம்பவத்தில் காவல்துறையை குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இதில் ஒருபடி மேலே சென்று, சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என குற்றம்சாட்டி யிருக்கிறார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, "இந்த படுகொலைக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும்; மாநில காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை; சட்டம் ஒழுங்கு கெட்டுக் கிடக்கிறது' என்றெல்லாம் ஆவேசப் பட்டிருக்கிறார்.
இப்படி தொடர் படுகொலையால் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்கிற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்னிறுத்தி வருவதால், முதல்வர் ஸ்டாலின் அப்செட்டாகியிருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கின்றன என சொல்லப்படும் நிலையில், "இந்த படுகொலை யில் குழு ரீதியான பிரச்சனைகள்தான் இருந் துள்ளன. அரசியல் காரணங்கள் இல்லை' என்கிறார் சென்னை போலீஸ் கமிஷ்னர் சந்தீப்ராய் ரத்தோர்.
சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, "சமீபகாலமாக நடந்துள்ள படுகொலைகள் ஜீரணிக்க முடியாத விசயங்கள்தான். இதில் காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரணத்தை தவிர மற்ற சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதில் சீரியசாக இருக்கிறது போலீஸ். கொலைச் சம்பவங்கள் தி.மு.க. ஆட்சியில் மட்டுமே நடப்பதாகச் சொல்வதும், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறுவதும் அரசியலுக்காக மிகைப்படுத்தப்படுபவை.
சில விசயங்களைச் சுட்டிக்காட்டி, "எச்சரிக்கையாக இருங்கள்; போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டால் சொல்லுங்கள் தரப்படும்' என ஆம்ஸ்ட்ராங்கிடம் போலீஸ் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்தான் "எனக்கு எந்த மிரட்டலும் இல்லை; எனக்கு எதுக்கு போலீஸ் பாதுகாப்பு' என சொல்லிவிட்டார். அவரது மரணம் ஜீரணிக்க முடியாத விசயம்தான். ஆனால், இதை வைத்து மட்டுமே சட்டம் ஒழுங்கு சரியில்லை என சொல்வது ஏற்புடையதல்ல. தி.மு.க. அரசையும் காவல்துறையையும் குற்றம் சாட்ட வேறு எந்த விசயமும் கிடைக்காததால் சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்குகிறார்கள் எதிர்க்கட்சிகள்''’என்று சுட்டிக்காட்டுகிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வட்டாரங்கள்.
சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் இப்படி சொன்னாலும், தி.மு.க. ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த விபரங்களை முழுமையாக சேகரித்து வைத்துக்கொண்டு வருகிறது மத்திய உள்துறை அமைச்சகம்.