பசுமையாகவும், எழிலாகவும் காட்சியளிக் கும் நெய்வேலி நகரியத்துக்குப் பின்னால் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரமாயிரம் கூலித் தொழிலாளர்களின் உதிரமும், வியர்வையும் இருக்கிறது. பாதி இந்தியாவுக்கே வெளிச்சம் கொடுத்தாலும் அந்த கூலித் தொழிலாளர்களின் வாழ்வு இருட்டில்தான்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் நெய்வேலி நகரியத்தில், சாலை பராமரிப்புப் பிரிவில் வேலை செய்துவரும் கூலித்தொழிலாளர்களின் ஏ.டி.எம். கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஒப்பந்த முதலாளிகள் வாங்கி வைத்துக்கொண்டு பாதிச் சம்பளத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு, மீதி சம்பளத்தை மட்டுமே தொழிலாளர்களுக்கு வழங்கிவருகின்றனர்.
"ஏன் முழு சம்பளத்தை வழங்கவில்லை?' என்று கேட்டதற்காக 8 தொழிலாளர்களை ஒரு ஆண்டு காலமாக வேலையிருந்து நீக்கி அலைக்கழித்து வருகின்றனர் ஒப்பந்ததாரர்களும், என்.எல்.சி. நகரிய நிர்வாக அதிகாரிகளும். வேலை வழங்கக் கோரியும், தங்களைப்போல் பணியாற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு முழு சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வேலையும் சம்பளமும் இல்லாமல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் அந்த கூலித் தொழிலாளர்கள்.
இதுகுறித்து செடுத்தான்குப்பத்தை சேர்ந்த ஜோதி கூறுகையில், "நான் 20 வருஷத்துக்கு முன்னாடி இந்த வேலைக்கு வந்தேன். அப்ப ரங்கநாதன்ற காண்ட்ராக்டர் இருந்தாரு. டவுன் சிப்புக்குள்ள இருக்கிற எல்லா ரோட்டு நடுவுலயும் இருக்கிற செடிகளை வெட்டி சுத்தப்படுத்துவது, ரோடு ஓரத்துல கிடக்குற குப்பைகளை பொறுக்கு வது, வாய்க்காலில் கிடக்கிற குப்பை குளங்களை சுத்தப்படுத்துவது இப்படி எல்லா வேலையும் செய்வோம்.
20 வருசத்துக்கு முன்னாடி வேலைக்கு வரும்போது சம்பளம் 300 ரூபாய் சொன்னாங்க, ஆனா 75 ரூபாய் கொடுத்தாங்க. அவர்கிட்ட அஞ்சு வருஷம் வேலை பார்த்தேன். அதுக்குப்பிறகு அவ ருடைய மகன் செந்தில் காண்ட்ராக்ட் எடுத்தார். அவர்கிட்ட 15 வருஷமா வேலை பாத்துட்டு இருக்கோம். 75 ரூபாயிலிருந்து இப்ப 300 ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால் 759 ரூபாய் என்.எல்.சி.ல சம்பளம் கொடுக்குறாங்க. பேங்க் பாஸ்புக், ஏ.டி.எம் கார்டு, அடையாள கார்டு எல்லாத்தையும் காண்ட்ராக்டர் வாங்கி வச்சுக்குவாங்க. சம்பளம் வந்ததுன்னா முழு சம்பளத்தை அவங்க எடுத்துக் கிட்டு பாதிதான் எங்களுக்குக் கொடுப்பாங்க.
ஏ.டி.எம் கார்டு, பாஸ்புக் எல்லாம் கேட்டாங்க, நாங்க பாதிப் பேரு ‘கொடுக்க மாட்டோம்னு சொன்னோம். அதனால ‘உங்களுக்கு வேலை இல்ல, போங்கன்னு அனுப்பிட்டாங்க. அப்புறம் நாங்க சி.ஐ.டி.யு.ல போயி எங்களுடைய குறைகளைச் சொன்னோம். அவங்க எங்களுக்காக போராடவந்தாங்க. சி.ஐ.டி.யு. போராட்டம் பண்ண பிறகு கொஞ்ச நாள் வேலை கொடுத்தாங்க. ஆனா மாசத்துல 3 ஷிப்ட், 4 ஷிப்ட்தான் கொடுப்பாங்க. அதனால எங்களோட சம்பளம் மாசம் வெறும் 1000, 1500தான் கிடைக்கும். வேணும்னே கஷ்டமான வேலை கொடுப்பாங்க. பூச்சி, பூரான், பாம்பு இந்த மாதிரி இருக்குற இடத்துல வேல கொடுப்பாங்க. நாய், பூனை செத்துக்கிடக்கும். அதெல்லாம் எடுப்போம். கைக்கு கிளவுஸ், காலுக்கு ஷூகூட கொடுக்கமாட்டாங்க. வெறும் கையாலேயே அதெல்லாம் சுத்தப்படுத்தணும்.
இப்ப ஒரு வருஷமா அந்த வேலையும் கொடுக்கலை. ‘ஏடிஎம் கார்டு, பாஸ்புக் கொடுக் கிறோம். பாதிச் சம்பளம் கொடுத்தாலும் பரவா யில்ல. எங்களுக்கு வேலைகொடுங்க'ன்னு செந்தில் கிட்ட கேட்டோம். ‘சி.ஐ.டி.யு.க்கு போனீங்க இல்ல அங்கேயே போய் வேலை கேளுங்க’னு விரட்டி னார். 15, 20 வருஷமா இந்த என்.எல்.சி டவுன்ஷிப்ல எல்லா வேலையும் செஞ்சிருக்கோம். ஆனா இப்ப ஒரு வருஷமா எந்த வேலையும் கொடுக்காம வேணும்னே எங்களை அலையவிடுறாங்க. எங்க ளுக்கு நிலபுலம் எதுவுமில்ல, வேற வருமானமும் இல்லை. 20 வருசமா இந்த சம்பளத்தை வச்சிதான் குடும்பத்தை நடத்திட்டு இருக்கோம். இப்ப அதுவும் இல்லைன்னா என்ன பண்றது?''’என்கிறார் வேதனையுடன்.
வடக்குமேலூரை சேர்ந்த ராணி நம்மிடம், "15 வருஷமா வேலை பார்க்கிறேன். இந்த விவகாரத் தால எங்களை சொசைட்டில கூட சேர்க்கல, எங்களுக்கு பின்னாடி வந்தவங்கள் லாம்கூட சொசைட்டில சேர்த்திருக்காங்க. எங்களை வேணும்னே வேலையவிட்டு தூக்கிட்டாங்க. அதிகாரிகள்ட்ட போய் சொன்னா காது கொடுத்துக்கூட கேட்கமாட்டறாங்க, நாய விரட்டுற மாதிரி விரட்டுறாங்க. இப்படியே போனா குடும்பத்தோட தற்கொலை பண்றதை தவிர வேற வழியில்ல''’என கலங்குகிறார்.
என்.எல்.சி. சி.ஐ.டி.யு. ஒப்பந்த தொழிற்சங்க சிறப்பு தலைவர் வேல்முருகன் கூறுகையில், “"என்.எல்.சி நிறுவனத்தில் ஏ.எம்.சி(Annual Maintanance Contract) என கூறி, ‘ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம்’ என்ற பெயரில் சாலை பராமரிப்பு, தோட்டக்கலை, வீடு பராமரிப்பு, கட்டட பராமரிப்பு, அலுவலக பராமரிப்பு என பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். என்.எல்.சி நிர்வாகம் இந்த பணிகளை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்குகிறது. அந்த ஒப்பந்ததாரர்கள் கூலித் தொழிலாளர்களை வைத்து வேலைவாங்குகின்றனர்.
பாமர மக்களான இந்த கூலித் தொழிலாளர் கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒப்பந்ததாரர் கள் காட்டுகின்ற இடத்தில் கைரேகை, கையெழுத்து இட்டு அவர்கள் கொடுக்கின்ற சம்பளத்தை வாங்கிச் சென்றனர். அவர்களுடைய சம்பளம் எவ்வளவு என்பதே தெரியாது. சில ஆண்டுகளாக வங்கி மூலமாக சம்பளம் வழங்கப்படுவதால் வங்கி பாஸ் புத்தகம், ஏ.டி.எம்.கார்டு போன்றவற்றை ஒப்பந்ததாரர்கள் வாங்கி வைத்துக்கொண்டு, முழு சம்பளத்தையும் அவர்கள் எடுத்துக்கொண்டு பாதிமட்டுமே கூலித் தொழிலாளர்களுக்கு வழங்குகின்றனர்.
தொழிலாளர்களின் சம்பளத்தில் 12% இ.பி.எஃப். பிடித்தம் செய்யப்படுகிறது. நிர்வாகத் தரப்பிலும் 12% பணம் கட்டவேண்டும். ஆனால் நிர்வாகத் தரப்பில் தருகிற பணத்தையும், தொழிலாளர்கள் சம்பளத்தில் எடுக்கப்படுகின்ற பணத்தையும் ஒப்பந்ததாரர்கள் கட்டுவதில்லை. இந்த அவலநிலைகள் குறித்து என்.எல்.சி. நிர்வாகத் திடம் பலமுறை முறையிட் டும் எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை.
தற்போது சசி சக்தி வேல் என்கிற ஒப்பந்த தாரர் இந்த சாலை பராமரிப்புப் பணியை எடுத்துள்ளார். அவர்களும் இதையே தொடர்கின்ற னர். இந்த அநீதிக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றும் நகரிய நிர்வாகத்தில் உள்ள ஒருசில அதி காரிகளும் உடந்தையாக இருக் கின்றனர். குறிப்பாக ராமன் என்ற துணை பொது மேலாளர் தான் இந்த ஒப்பந்ததாரர்களுக்கு பின்புல மாக உள்ளார். சாலைப் பராமரிப் பில் ஒரு பிரிவான தார் பிளாண்ட்டில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று இந்த ராமனை விஜிலென் ஸும் விசாரித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தண்டனை பெற வேண்டிய அவருக்கு பொது மேலாளராக புரமோஷன் கொடுக்கப்படுகிறது.
எங்களுடன் சேர்ந்து போராடியதற்காக 2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் மாதம் வரை வேலை செய்த நாட்களுக்கு தீபாவளி போனஸ், கருணைத் தொகை வழங்கவும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட இ.பி.எஃப். தொகையை எடுக்கமுடியாமல் நிறுத்திவைத்துள்ளார்கள்.
அந்த 8 தொழிலாளர்களும் கடந்த ஓராண்டு காலமாக வேலை வழங்கக்கோரி சம்பளம் இல்லாமலும் வறுமையில் வாடும் நிலையிலும் போராடிக்கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து புதுச்சேரி மத்திய உதவி தொழிலாளர் நல ஆணையரிடம் தொழில் தாவா எழுப்பப்பட்டு 2 முறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று, 8 தொழிலாளர்களுக்கும் வேலை வழங்கவேண்டும் என எழுத்துமூலம் அறிவுறுத்திய பின்பும் இதுவரை வேலை வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மத்திய தொழிலாளர் நல ஆணையர், என்.எல்.சி. அதிபர் மற்றும் தமிழ்நாடு முதலமைச் சர் ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் என்.எல்.சி நிறுவனமும் உடனடியாக இந்த பிரச் சனையில் கவனம் செலுத்தி வேலைநீக்கம் செய்யப்பட்ட 8 தொழிலாளர் களை வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா பிரிவுகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் அவர் கள் உழைப்புக்கான முழு சம்பளத்தையும் வழங்கவேண் டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால் மாவட்ட அளவில் அனைத்து தொழிற்சங்கங்களையும், மகளிர் அமைப்புகளையும் திரட்டி மிகப்பெரிய அள வில் போராட்டம் நடத்த நேரிடும்'' என்றார்.
என்.எல்.சி. மனிதவளம் மற்றும் தொழில் தொடர்புத்துறை செயல் இயக்குனர் தியாக ராஜனிடம் விளக்கம் கேட்டோம். “"பணிக்கு உண்டான பணியாளர்களுக்கான சம்பளம் சட்ட திட்டங்களுக்குட்பட்டு அவரவர் வங்கிக் கணக்குகளில் போடப்படுகிறது. இவற்றைத்தான் என்.எல்.சி. பார்க்கமுடியும். மற்றபடி போட்ட சம்பளத்தில் ஒப்பந்ததாரர்கள் வாங்கிக்கொள்கிறார் களா? ஏ.டி.எம் கார்டு, பேங்க் பாஸ் புக் வாங்கிக் கொள்கிறார்களா… என்பதெல்லாம் தெரியாது. அவ்வாறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என்.எல்.சி. விஜிலென்ஸ் உள்ளிட்டவற்றிலோ அல்லது தொழிலாளர்நல ஆணையத்திடமோ புகார் செய்யலாம். புகாரின் பெயரில் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.
என்.எல்.சி.யும், தமிழக அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு.