நடை, உடை அத்தனையும் ஆணைப் போலவே இருக்கும். ஆனால், அவர் பெண். அவர் பெண் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு முழுமையாக ஆணாக மாறி இருக்கும் அவரை, மாஸ்டர் என்று தான் ஊரில் அழைக்கின்றனர். தூத்துக்குடி அருகே இருக்கும் காட்டுநாயக்கன்பட்டி என்கின்ற கிராமம்தான் அவரது இருப்பிடம். அவரை சந்தித்தோம்.
"எல்லோரும் என்னை ஆம்பிளை என்றே நினைப்பார்கள். ஆனால், நான் பெண். இப்ப வயசு 56. என்னோட 20 வயதில் கல்யாணம் முடிந்தது. 15 நாளில் மாரடைப்பில் கணவர் இறந்து போனார். வாழ்க்கையே வெறுத்துப்போய் வெறுமையில் ஒடுங்கிப்போனேன். அப்ப வேற தேதி தள்ளிப் போனது (மாதவிலக்கைத்தான் அப்படி கூறுகிறார்). இது என்னடா கொடுமைன்னு..? நினைக்கும்போது வயித்துல குழந்தை உருவானது தெரிஞ்சது. அப்ப எங்க ஊரில் இருந்து தூத்துக்குடியில் இருக்கிற தொழிற்சாலைக்கு வேலைக்கு போய்ட்டு இருக்கும்போது, லாரி டிரைவர் ஒருத்தர் லாரியை நிறுத்தி பாலியல் தொழிலுக்கு கூப்பிட்டார். நான் சத்தம்போட்டு ஊரைக் கூட்டியதால், அவர் தப்பி ஓடிவிட்டார். அப்பத் தான், இனி எப்படி நாம காலத்தைக் கடத்துவது? என யோசிச்சேன். அதே வேளையில், பெண் பிள்ளையும் பிறந்துச்சு. குழந்தையை சொந்தங்காரங்ககிட்ட கொடுத்திட்டு நேரே திருச்செந்தூர் போனேன். தலைக்கு மொட்டை போட்டேன். கைலி, துண்டுக்கு மாறினேன். சேலை, ஜாக்கெட்டு, பாவாடைக்கு முழுக்கு போட்டாச்சு. அப்ப இருந்து, இப்ப வரைக்கும் இதே கைலி, பனியன், சட்டை, துண்டு தான் என்னுடைய உடையாக மாறிப்போனது." என்றவரிடம்,
"உடை ஓகே.! ஆனா உங்க குரல் கிட்டத்தட்ட ஆண் குரல் மாதிரி இருக்கே.?'' என்றதற்கு, "இயல்பாவே எனக்கு குரல் கொஞ்சம் கரகரப்பான குரல்தான். அதிலும், பீடி குடிச்சா குரல் மாறும்னு அப்ப ஒருத்தர் சொன்னார். அப்ப பீடி குடிக்க ஆரம்பிச்சேன். இப்பவும் புகை பிடிக்கிற பழக்கம் தொடருது. அப்பப்ப தண்ணியும் ஆனா அளவோடதான். என்ன இருந்தாலும் நாம பொம்பளை தானே.?! கூட இருக்கிறவர் நண்பனா இருந்தாலும், போதையில.. என்ன வேணாலும் நடக்கலாம். அதனால லிமிட் தாண்டி போக மாட்டேன்''’என்று புன்னகைக்கிறார்.
"ஆண் வேஷத்திற்கு மாறிய பிறகு அசௌகரியங்கள் ஏதும் இருக்கா.?'' என்றால்,”
"மாத விலக்கு சமயத்தில் கொஞ்சம் சிரமம் இருக்கும். அந்த சமயத்தில் வெளியே போகமாட்டேன். இப்ப மெனோபாஸ் என்பதால் அந்த பிரச்சனை இல்லை. ஒருமுறை கட்டிட வேலைக்கு போய்ட்டு இரவு 11 மணிக்கு மேல வீட்டிற்கு வந்துகிட்டு இருக்கேன். ஒருத்தன் சரியான போதையிலே நிற்கிறான். தலைவரே, தீப்பட்டி கொடுங்கன்னு, என்கிட்ட தீப்பட்டி வாங்கி சிகரெட் வாங்கி பத்தவச்சான். அவனைப் பொறுத்தவரைக்கும் நான் ஆம்பளை. அதுவே நான் சேலை கட்டி வந்தா. என்னை சும்மா விட்டிருப்பானா?. அதனால இந்த உடை தான் நமக்கு சேப்டி. இப்பவும் என்கூட வேலை பார்ப்பவர்களுக்கு நான் பெண் என்பது தெரியும். ஆனால், எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. பஸ்ஸில் போகும்போது நான் ஆம்பளைங்க சீட்ல தான் உட்காருவேன். ஒருமுறை பஸ்ஸில்போகும் போது, லேசாக ஒரு பெண் மீது உரசிவிட்டேன். அந்த பெண் அசிங்க அசிங்கமா திட்டுகிறாள். நான் மனசுக்குள் கடவுளே இது என்ன சோதனைன்னு நினைச்சுக்கிட்டேன். நானும் பொம்பளைன்னு அவகிட்ட சொல்ல முடியலை. இப்பகூட கவர்ன்மென்ட் பஸ்ல பெண்களுக்கு ப்ரீ டிக்கெட். என்கூட வருகிற பொம்பளைங்க எல்லாம் ப்ரீயா வருவாங்க. ஆனா, நான் டிக்கெட் எடுப்பேன். என்ன செய்ய நம்ம நிலைமை அப்படி.!''”
"பெண்ணாகவே இருந்திருக்கலாமோ? என எப்போதாவது யோசிச்சது உண்டா?'' என்று மடக்கினால், சென்னையில் கிட்டத்தட்ட 8 வருஷம் ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்தேன். என்கூட வேலை பார்த்த யாருக்கும் நான் பெண் எனத் தெரியாது. ஒருத்தருக்கு மட்டும் தெரியும். ஆனா, அவர் என்னை தம்பின்னு தான் கூப்பிடுவார். அப்ப இருந்து இப்ப வரைக்கும் என்னை எல்லோரும் மாஸ்டர் என்று தான் கூப்பிடுவார்கள். அதனால், எப்போதும் வருத்தப்பட்டது கிடையாது. எனக்கு பெற்றோர் வச்ச பேர் பேச்சியம்மாள். 21 வயசுல ஆண் வேடம் தரித்த பிறகு, என் பெயர் முத்து என்றாகிப் போனது. இப்ப இந்த ஊருக்கு வந்த பிறகு எல்லோரும் மாஸ்டர்னு கூப்பிடுகிறார்கள்.
இதோ நூறு நாள் வேலைக்கு எல்லோரும் போறாக.. நானும் கிளம்பணும்'' என்று, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு கிளம்பி விட்டார் மாஸ்டர்.!
படங்கள்: விவேக்