போலீசை கண்டால் தவறு செய்யாதவர்களும் பயப்படுவது இயல்பு. ஆனால் தவறு செய்கிற கிரிமினல்களோ போலீசுடன் தோளோடு தோள் தட்டி நிற்பது வேறெங்கயோ இல்லை, தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில் தான்!
இலந்தையடிவிளையைச் சேர்ந்த விஜய்ஆனந்த் என்றால் தெரியாத காக்கிகளே இல்லை என்கிறது காவல்துறை வட்டாரம். அந்தளவுக்கு ஏட்டு முதல் உச்சபட்ச அதிகாரிகள் வரை தனது கைக்குள் வைத்திருக்கும் விஜய்ஆனந்த் மீது, விபச்சார வழக்கு உட்பட 15க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் பல வழக்குகளில் கோர்ட் பிடிவாரண்டிலும் உள்ளார். இவ்வளவு பிரச்சனைக்குரியவ ராக இருந்தபோதிலும், அவர் உயர் அதிகாரிகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, ஒரே காரில் பயணிப்பது, சல்லாப அதிகாரிகளுக்கு சபலத்தைப் போக்குவது எனத் தனது தொழிலையும், நடவடிக்கை களையும் அதிகரித்து வருகிறார் என்கின்றனர் சில நேர்மையான காவலர்கள்.
இந்நிலையில்தான் நாகர் கோவில் ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன் மற்றும் மாவட்ட காவல் துறையின் சட்டம் ஒழுங்கு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சேவியர் பெர்னார்ட் ஆகியோருடன் விஜய்ஆனந்த் சேர்ந்து இருக்கும் போட்டோ சமூக வலைத்தளங்களில் பரவி, காவல் துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு இலவச சட்ட உரிமை பாதுகாப்பு மைய நிறுவனர், வழக்கறிஞர் ஸ்ரீனிவாச பிரசாத், “"விஜய்ஆனந்த் மீது குமரி மாவட் டத்தில் நேசமணி நகர், கோட்டார், ஈத்தாமொழி, இரணியல், ராஜாக்கமங்கலம், சுசீந்திரம், ஆரல்வாய்மொழி காவல் நிலையங்களில் விபச்சாரம், அடிதடி, கொலை மிரட்டல், தற்கொலைக்குத் தூண்டுதல் போன்ற வழக்குகள் உள்ளன. இதில் பல வழக்குகளில் குற்றப்பத்திரி கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது பிடிவாரண்டில் கோர்ட் உத்தரவுப்படி போலீசாரால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் அவர், ஏ.டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டருடன் புகைப்படம் எடுத்து தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன் ஏற்கனவே நாகர்கோவில் டி.எஸ்.பியாக இருக்கும்போதே அவருடன் விஜய்ஆனந்த் நல்ல நெருக்கம். அதேபோல், இன்ஸ்பெக்டர் சேவியர் பெர்னார்ட், வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும்போது அவருக்கு நண்பர். குமரி காவல்துறையில் இவர்கள் மட்டுமல்ல, பல எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்களுடன் நெருக்கமான தொடர்பிலிருந்து அவர்களுக்கானதை செய்து கொடுத்திருக்கிறார். இதனால் அவர் எந்த காவல்நிலையத்துக்குச் சென்றாலும் போலீசார் சல்யூட்டே அடிப்பார்கள்.
இந்த நிலையில். எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், வாரண்ட் குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்திருக்கிறார். அந்த தனிப்படையினரால் விஜய்ஆனந்தை நெருங்க முடியவில்லை. ஏற்கெனவே விபச்சார வழக்கில் விஜய் ஆனந்தை பிடித்து கோட்டார் போலீஸ் நிலையம் கொண்டுவந்த ஒரு மணி நேரத்திலே அவரை விடுவித்ததோடு, அவரைப் பிடித்த தனிப்படையினரை மன்னிப்பு கேட்கவும் வைத்தார் மாவட்டத்தின் அதிகாரிகளில் ஒருவர். அப்படியிருக்கையில். எப்படி போலீசார் அவரைப் பிடிப்பார்கள்?
மாவட்டத்திற்கு எந்த புதிய அதிகாரி வந்தாலும், விஜய்ஆனந்தை அறிமுகப்படுத்தி விடுவார்கள். நமது பக்கத்து மாநிலமான கேரளாவில், கிரிமினல்களோடு தொடர்பிலிருந்த இரண்டு இன்ஸ்பெக்டர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மேலும் சில உயரதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பதோடு ஒரு மாவட்டத்துக் காவலர்கள் கூண்டோடு வேறு மாவட்டத்துக்கு தூக்கியடிக்கப்பட்டனர். அதே போன்ற நடவடிக்கை இங்கும் எடுக்கப்பட வேண்டும். அதேபோல் இதே மாவட்டத்தில் எஸ்.ஐ.யாக வந்து, பதவி உயர்வு பெற்று இங்கேயே தொடர்ந்து பணியாற்றுபவர்களையும் மாறுதல் செய்ய வேண்டும்''’என்றார்.
இதுகுறித்து எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத்திடம் கேட்டபோது, "எந்த குற்றவாளிகளையும் சும்மா விடுவதில்லை. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப் படும்''’என்றார். காவல்துறையினரே கிரிமினல்களின் நண்பர்களாக இருந்தால் சட்டம் எப்படி தன் கடமையைச் செய்யும்?