இந்தியில் "96'
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் "96'. இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில், "96' திரைப்படம் தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய் சேதுபதி, "ஒரு நடிகராக ரசிகர்களின் ரசனைக்கு ஒத்துப்போகும் கதைகளைச் சொல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். அந்த கதை அதிக ரசிகர்களைச் சென்றடையும்போது அந்த மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிறது. "96' படம் எனக்கு அற்புதமான அனுபவமாக இருந்தது. இப்போது தயாரிப்பாளர் அஜய்கபூர் அந்தப் பயணத்தை இந்தி ரீமேக்கில் தொடரவிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இயக்குநருடன் திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இப்படத்தின் தயாரிப்பாளர், விரைவில் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். தமிழில் "96' படம் சூப்பர் ஹிட் ஆகியிருந்தாலும், கன்னடம், தெலுங்கில் இதன் ரீமேக்கிற்கு கிடைத்த வரவேற்பு சற்று குறைவே. அந்தவகையில், "96' படத்தின் இந்த ராசியை இந்தி பதிப்பு மாற்றியமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எது எப்படியோ, நாலு ஃபைட், ரெண்டு குத்து பாடல்கள் சேர்த்து இந்தப் படத்தின் கதையை வழக்கமான பாலிவுட் மசாலாவாக மாற்றாமல் இருந்தால் சரி.
மாட்டிக்கொண்ட "பேய் மாமா!'
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் பேய் படம்தான் ‘"பேய் மாமா'. மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, கோவை சரளா என, பேய் படத்திற்கென அளவெடுத்துச் செய்த பலர் நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியானது. இணையத்தில் இந்த போஸ்டர் வெளியான சிறிது நேரத்திலேயே, இதன் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது. அதாவது, பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான பூத் (இஐஞஞப) என்ற படத்தின் போஸ்டரை அப்படியே எடுத்து, அதில் விக்கி கௌஷ லின் முகத்திற்குப் பதிலாக யோகிபாபுவின் முகத்தை வைத்து போஸ்டராக வெளியிட் டுள்ளனர் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு. யோகிபாபுவின் போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே இதனைக் கண்டு பிடித்துவிட்ட இணையவாசிகள், "பூத்' படத்தின் ஒரிஜினல் போஸ்டரையும் "பேய் மாமா' பட போஸ்டரையும் ஒப்பிட்டுக் கிண்டல் செய்யத் துவங்கிவிட்டனர். என்னதான் கிண்டல்கள் ஒருபுறம் இருந்தாலும், இதன்மூலம் இப்படத்திற்கு ஒரு நல்ல ஃப்ரீ ப்ரோமோஷன் கிடைத்துவிட்டது என்பதை மறுக்க முடியாது.
அவர் இப்ப பிஸி!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கமர்ஷியல் படங்கள், சிறந்த கதையம்சம் உள்ள படங்கள் என கலந்துகட்டி நடித்துவந்த இவர், அண்மைக் காலங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களின் பக்கம் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். அந்தவகையில், "க.பெ. ரணசிங்கம்', "திட்டம் இரண்டு', "பூமிகா' என இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படங்கள் இவ ருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. தற்போது இவர் "டிரைவர் ஜமுனா', "மோகன்தாஸ்', "தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் தமிழ் ரீமேக், "துருவ நட்சத்திரம்' உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இது தவிர தெலுங்கில் "ரிபப்ளிக்', "பீம்லா நாயக்' போன்ற படங்களிலும் நடித்துவருகிறார். இப்படி பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள் ளது. அதன்படி அவர் எஸ்.ஜே.சூர்யாவின் ‘"மான்ஸ்டர்'’ படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் படத்தில் நடிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
-எம்.கே.