"ஹலோ தலைவரே, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்படப் போகுதாமே.''”
"ஆமாம்பா, அ.தி.மு.க. தரப்பு சட்டமன்றத்தைப் புறக்கணிச்சிப் போராட்டம் நடத்தியும், விவகாரத்தின் சூட்டை அவர்களால் தணிக்க முடியலையே.''”
"உண்மைதாங்க தலைவரே, கொடநாட்டு குற்றவாளிகளோடு அப்போதைய முதல்வர் எடப்பாடி, பேசியதற்கான செல்போன் சிக்னல்கள் சிக்கியதா விசாரணை டீம் சொன்னதுமே, அவர் தரப்பு வெடவெடத்துப் போயிடுச்சி. அந்த விவகாரத்தில் மர்மமான முறையில் இறந்த ஜெ.வின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபாலை, இப்ப போலீஸ் டீம் சீக்ரெட்டா விசாரிச்சிருக்கு. அப்ப அவர், கனகராஜ் வீட்டில் இருந்தப்ப அவரை பைபாஸ் ரோட்டுக்கு வரச்சொல்லி ஒரு போன் வந்தது. அப்படி அங்கே அவரை வரவழைத்து, அவர் டூவீலர் மீது காரை மோதித்தான், அவரைக் கொலை செய்திருக்காங்க. அதனால் சாவதற்கு முன், கனகராஜை பைபாஸுக்கு வரச்சொன்ன கிரிமினல்கள் யாருன்னு செல்போன் நம்பரை டிரேஸ் செய்தா, குற்றவாளிகளை எளிதா மடக்கிடலாம்னு வாக்குமூலம் கொடுத்திருக்காரு.''”
"தனபால் குறிப்பா யார் மீது சந்தேகத்தைக் கிளப்பறாராம்.''”
"எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ன்னு பதறுறாரே, அவர் மீதுதான் சந்தேகத்தைக் கிளப்பறாராம் தயாளன். இதுக்கிடையில், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில், சயானைத் தவிர, சந்தோஷ் சுவாமி, வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரும், சென்னை ஹைகோர்ட்டில் ஒரு அதிரடி மனுவைப் போட்டிருக்காங்க. அதில், இந்த கொலை, கொள்ளை தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடியையும் சசிகலாவையும் விசாரிக்கணும்னு கேட்டிருக்காங்க. இது எடப்பாடி தரப்பை மேலும் திகிலில் ஆழ்த்தியிருக்குதாம். அதனால் அவர் தரப்பு, கொடநாடு பங்களாவில் மரவேலை செய்த சஜீவனின் தம்பி சுனில் மூலம், அவர்களின் வாயை அடைக்க பேரம் பேசுதாம். இதையறிந்த விசாரணை டீம், அடுத்து சஜீவனையும் சுனிலையும் தங்கள் கஸ்டடிக்குக் கொண்டுவந்து விசாரிக்கும் முடிவுக்கு வந்திருக்குதாம். அதனால், சம்மந்தப்பட்ட பெரும்புள்ளிகள், கடும் நெருக்கடியில் சிக்கி இருக்காங்க.''”’
"கே.என்.நேரு துறையின் மானியக் கோரிக்கையின்போது, 6 நகராட்சிகளுக்கு, மாநகராட்சிங்கிற பதவி உயர்வைக் கொடுத்திருக்கே தி.மு.க. அரசு?''”’
"ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் ஏற்கனவே 15 மாநகராட்சிகள் இருக்குது. இந்த நிலையில் புதுசா தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம்னு 3 நகராட்சிகளை தி.மு.க. அரசு, தரம் உயர்த்தி, புதிய மாநகராட்சிகளா உருவாக்கத் போகுதுன்னு நம்ம நக்கீரன்ல ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். அதன்படிதான் இப்ப கூடுதலா 3-ஐ சேர்த்து, புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படுது. இதற்கான அறிவிப்பை 24-ந் தேதி நடந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின் போது, துறை அமைச்சரான நேரு சட்டமன்றத்திலேயே அறிவிச்சிருக்கார். இந்தப் பட்டியல்ல விழுப்புரத்துக்கு பதில், கடலூர் திடீர்ன்னு இடம்பிடிச்சிருக்கு. விழுப்புரத்துக்கு மாநகராட்சியாகும் வாய்ப்பு கிடைக்காததில் மாவட்ட அமைச்சரான பொன்முடிக்கு ஏக வருத்தமாம்.''”’
"உள்ளாட்சித் தேர்தல் வருவதால் புதிய மாநகராட்சிகளுக்கேற்ப வார்டுகளை உருவாக்கணுமே?''”’
"உண்மைதாங்க தலைவரே, சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும், நீதிமன்ற உத்தரவால், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க அரசு இருக்குது. அதனால், புதிய மாநகராட்சிகளுக்கான வரையறைகளையும் ஏற்கனவே தயார் செய்து, அரசின் பார்வைக்கு அது அனுப்பி வச்சிடுச்சி. அதுக்கு, அரசும் முறைப்படி தனது அனுமதியை வழங்கப் போகுது. அதனால் மாநகராட்சி மற்றும் அவற்றுக்கான வார்டுகள் குறித்த எல்லை விபரங்கள் விரைவில் வெளியிடப்படலாம்ன்னு தேர்தல் ஆணையத் தரப்பு சொல்லுது.''”’
"உள்ளாட்சித் தேர்தலுக்கு எல்லாக் கட்சி களும் தயாராகற இந்த நேரத்திலும் கூட, பல மாவட்டங்களுக்கு தனது கட்சிப் பொறுப் பாளர்களை தி.மு.க. நியமிக்கலையே?''”’
"ஆமாங்க தலைவரே, தி.மு.க. பிரமுகர்கள் பலரும் அதே ஆதங்கத்தில் தான் இருக்காங்க. 14 மாவட்டங்களுக்கு இன்னும் தனது பொறுப் பாளர்களை தி.மு.க. நியமிக்கலை. அதனால், அந்தப் பகுதியில் இருக்கும் தி.மு.க.வினர், தேர்தல் வேலைகளை எப்ப ஆரம்பிக்கிறது? எப்படி ஆரம்பிக்கிறது?ன்னு தெரியாம விழிச் சிக்கிட்டு இருக்காங்க. மத்த மாவட்டங்கள்ல ஏற்கனவே அங்கங்க இருக்கும் அமைச்சர்களின் தலைமையில், தேர்தல் பொறுப்பாளர்களை அறிவாலயம் நியமிச்சிச்சிடிச்சி. அதனால் அவங்க கூலா இயங்கிக்கிட்டிருக்காங்க.''”’
"ம்...''”’
"தலைவரே, ஆளுந்தரப்பில் ஒரு சுவாரஸ்யமான தகவலைச் சொல்றேன்... திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து புதிய தாலுகாவாக தொட்டியம் உருவாக்கப்பட்டிருக்கு. அதனால் அந்த புதிய தாலுகாவுக்கு, புதிதாக மாஜிஸ்திரேட் கோர்ட், முனிசிபில் கோர்ட், தனி நீதிமன்றம்ன்னு மூன்று வகையான நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதை அரசின் கவனத்துக்குக் கொண்டுபோங்கன்னு, அந்த தாலுகாவைச் சேர்ந்த தி.மு.க வழக்கறிஞர் சங்கத்தினர், தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான காடுவெட்டி தியாகராஜனிடம் கோரிக்கை வச்சாங்க. அவரோ தன்னோட சொந்த வேலை காரணமா, சட்ட அமைச்சர் புதுக்கோட்டை ரகுபதியிடம் போய் இந்தக் கோரிக்கையை வையுங்கன்னு வழக்கறிஞர் சங்கத்தினரிடம் பொறுப்பத் தட்டிக் கழிச்சிட் டாரு. அதனால அவங்க, மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமா ரகுபதிக்கு வக்கீல்களின் கோரிக்கை போயிருக்கு. இந்த விவரம் மூத்த அமைச்சர் கே.என்.நேருவுக் குப் போக, அவர் காடுவெட்டி தியாகராஜ னிடம், கட்சிக்காரர்கள் குறைகளைக்கூட கேட்க முடியாத அளவுக்கு ஒரு எம்.எல்.ஏ.வா என சத்தம் போட்டுவிட்டு, அவரும் அமைச்சர் ரகுபதியையும் தொடர்புகொண்டு, அவங்க நம்ம ஆளுங்க. பார்த்து செய்யுங்கன்னு சொல்லி யிருக்காரு. ரகுபதியோ இனி எல்லாத்தையும் முதல்வர் பார்த்துக்குவாருன்னு சொல்லியிருக் காராம்.''”’
"அதிகாரிகளில் சிலர், தங்கள் பதவிக்காலம் முடிஞ்சும் கூட, பதவியை நீட்டிக்கணும்னு துடிக்கறாங்களே?''”’
"உண்மைதாங்க தலைவரே, குறிப்பா சொல்லணும்னா, தமிழக கால்நடைப் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் டென்சிங் ஞானராஜின் பதவிக்காலம் இந்த மாதத்தோடு முடிவடையுது. பலவித குற்றச்சாட்டுகள் இவர் மீது இருந்தும் 2 வருட பணி நீட்டிப்பு வேணும்ன்னு, அனைத்து விதமான அஸ்திரங்களையும் ஆட்சியாளர்களிடம் மறைமுகமாக அவர் வீசிக்கிட்டு இருக்கார். அவருக்காக வரிஞ்சிகட்டும் ஒருசில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அவர் மீதான ஊழல் புகார்கள், முதல்வரின் பார்வைக்கு போகாமல் தடுக்கப் பார்த்தாங்க. அதையும் மீறி சில பேராசிரியர்கள், ஞானராஜ் மீதான குற்றச்சாட்டுகளை முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறார்களாம்.''”’
"தமிழக நிறுவனங்களை வஞ்சித்து, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சில அதிகாரிகள் உதவ நினைக்கிறாங்களேப்பா?''”’
"அரசின், தகவல் தொழில் நுட்பத்துறையில் விடப்படும் அனைத்து டெண்டர்களிலும், தமிழக நிறுவனங்கள் எதுவும் உள்ளே நுழையாத அளவுக்கு, வட இந்திய நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே டெண்டரில் கலந்துக்கிற மாதிரி, டெண்டருக்கான வரையறைகள் மாற்றி அமைக்கப்படுது. துறையின் முதன்மைச் செயலாளராக இருக்கும் நீரஜ்மிட்டல் ஐ.ஏ.எஸ்.தான் இதில் மும்முரமா இருக்காராம். இதே பாணியில்தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பாரத் நெட் டெண்டரில் ஊழல்கள் அரங்கேறி, அது அம்பலத்துக்கும் வந்தது. தி.மு.க. ஆட்சிக்கும் இதுபோன்ற கெட்ட பெயரை உண்டாக்கப் பார்க்கறாங்கன்னு, நேர்மையான அதிகாரிகள் கவலைப்படறாங்க.''”’
"நானும் மிகமிக முக்கியமான, வருத்தத்துக்குரிய ஒரு செய்தியை உன் மூலம் பகிர்ந்துக்கறேன். ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போரின்போது, பாஸ்போர்ட் போன்ற நடைமுறைகள் ஏதுமில்லாமல் தமிழகத்துக்கு உயிர்தப்பி வந்த, ஈழ அகதிகள் 78 பேரை, முந்தைய அ.தி.மு.க. அரசு, சிறப்பு முகாம்ங்கிற பேரில் கடந்த 10 வருடங்களுக்கு மேலா சிறையில் அடைச்சி வச்சிருக்கு. இதை முறைப்படி விசாரித்து தண்டனை கொடுத்திருந்தால் கூட, ஆறு மாசம், ஒரு வருசத்தில் விடுதலை ஆகியிருப்பாங்க. ஆனால் அகதிகள் முகாமில் இருக்கும் அவர்களின் குடும்பத்தினரிடம் கூட அனுப்பாமல், பிடித்து வைத்திருக்கிறார்கள். தங்களை விடுவிக்குமாறு போராடிவரும் அவர்கள், கடைசி முயற்சியாக கடந்த வாரம், தங்கள் கழுத்தையும் வயிற்றையும் அறுத்துக் கிட்டு, தற்கொலைப் போராட்டத்தில் ஈடுபட்டாங்க. ஈழம் ஈழம்னு குரல் கொடுத்த எவரும் அவர்களைக் கண்டுக்கலை. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசாவது, தங்கள் மீது இரக்கம் காட்டுமா?ன்னு அவங்க தவிச்சிக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு விரைவில் நல்லது நடக்கட்டும்பா.''”