வனத்துறைக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்புமிக்க சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போலி பத்திரப்பதிவு செய்த உயரதிகாரிகளுக்கு தி.மு.க. ஆட்சியிலாவது தண்டனை கிடைக்குமா என்கிற குரல்கள் தமிழக பத்திரப்பதிவுத் துறையில் வலுத்து வருகின்றன.
பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் சுமார் 66 ஏக்கர் நிலத்தை போலி பட்டா மூலம் பதிவு செய்ய, விவகாரம் குறித்து வடசென்னையை சேர்ந்த சிவசூரியன் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
வழக்கை இறுதியாக விசாரித்த நீதிபதி கிருபாகரன், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டும் கடந்த அ.தி.மு.க. அரசும், பத்திரப்பதிவுத் துறையின் அப்போதைய அமைச்சர் கே.சி.வீரமணியும் அதில் அக்கறை காட்டவில்லை. இதன் பின்னணியில் பல கோடிகள் விளையாடியது. குற்றவாளிகள் தப்பித்தனர்.
இதுபற்றி சிவசூரியனிடம் நாம் விசாரித்தபோது, ’"சதுப்பு நிலம்கிறது இயற்கையின் தாயகம். பறவைகளுக்கான பூங்காவனம். மிக அதிகளவில் நீரை உறிஞ்சி பெரும் மழையால் ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்தக்கூடிய இயற்கைப் பாதுகாவலன். அதனால்தான், "சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டும்' என 1985-ல் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது மத்திய அரசு. அந்த வகையில் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 சதுப்பு நிலங்களில் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மிக முக்கியமானது. ஆக்கிரமிப்புகளால் 600 ஏக்கராக சுருங்கிய நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்தது தமிழக அரசு.
இப்படிப்பட்ட சூழலில்தான், "வீரபாண்டிய கட்ட பொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பனுக்கு பிரிட்டிஷ்காரர்களால் ஒதுக்கப்பட்ட நிலம்' என 1858-ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு அரசாணையைக் காட்டி, இந்த சதுப்பு நிலத்தில் 66.70 ஏக்கரை (சர்வே எண்: 657/1ஏ) ராயபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் (ஆவண எண்: 597/2005).
அனைத்து டாகுமெண்டுகளையும் ஆராய்ந்தபோது, அந்த நிலம் பறவைகள் தங்கிச்செல்லும் பள்ளிக்கரணையின் சதுப்பு நிலமாக இருக்கிறது. போலி டாகுமெண்டுகள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை நாடினேன். உரிய நடவடிக்கை எடுக்கச்சொல்லி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடுகிறது உயர்நீதிமன்றம். அதன்பிறகே சி.சி.பி. இன்ஸ்பெக்டர் விஜயலஷ்மி, எஃப்.ஐ.ஆர். போடுகிறார். ஆனாலும் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பிறகு, இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தியிடம் இந்த விவகாரம் வந்தது. பிரிட்டிஷ் அரசால் போடப்பட்ட 1858-ஆம் வருட அரசாணைக்குரிய நிலம் பள்ளிக்கரணை அல்ல, அது சென்ட்ரல் பக்கத்தில் இருப்பதாக அவர்தான் கண்டுபிடித்தார். அரசாணை யையே பொய்யாக தயாரித்து அரசின் சதுப்பு நிலத்தை தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கும்பல் ராயபுரத்தில் பதிவு செய்திருக் கிறது. அதில் சிலரை கைது செய்தது போலீஸ். சிலர் தப்பித்து ஓடினார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளான லட்சுமணன், அழகிரி இருவரும் லட்சக்கணக்கில் செலவு செய்து முன்ஜாமீன் பெற்றார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 3,000 ஏக்கருக்கும் அதிகமாகவே போலி பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். இதற்கான பல ஆவணங்களை சைதாப்பேட்டை சார்பதிவாளர் சிவப்பிரியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
போலி பத்திரப்பதிவு செய்ததாக சார்பதிவாளர்கள் அங்கயற்கண்ணி, சிவசுப்பிரமணியம், கீதா, வெள்ளைச்சாமி, இணை சார்பதிவாளர் ரவீந்திரநாத், ரகுமூர்த்தி என பலரும் இதில் சிக்கினார்கள். சிவசுப்பிரமணியம் மட்டும் கைது செய்யப்பட்டார். அங்கயற்கண்ணி உள்ளிட்டவர்கள் பத்திரப்பதிவுத் துறையின் உயர்ந்த பதவியில் இருந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை அப்போதைய அ.தி.மு.க. அரசு. போலி பத்திரப்பதிவில் தொடர்புடைய அதிகாரிகள் லிஸ்ட்டை தயாரித்த சிவப்பிரியாவுக்கு நெருக்கடி தரப்பட்டும், அவர் நேர்மையாக செயல்பட்டார்.
இதனால் ஆத்திர மடைந்த அதிகாரிகள், சைதாப்பேட்டையிலிருந்து அவசரமாக சிவப்பிரியாவை ட்ரான்ஸ்ஃபர் செய்ய, நீதிபதி ஓப்பன் கோர்ட்டிலேயே கண்டிப்புடன் எச்சரித்தார். அதனால், சிவப்பிரியாவின் இட மாறுதல் உத்தரவை ரத்து செய் தனர். ஆனாலும், சிவப்பிரியா மீதே போலி பத்திரப் பதிவு புகார் கொடுக்க வைத்து, கைது செய்து வஞ்சம் தீர்த்தனர் அதிகாரிகள்''‘என்கிறார் சிவசூரியன்.
இந்த போலி பத்திரப் பதிவு குறித்து, தொடர்புடைய பல்வேறு துறைகளில் நாம் புலனாய்வு செய்தபோது, 700 பக்கங்களுக்கும் அதிகமான ஆவண ஆதாரங்களும், ஏகப் பட்ட அதிர்ச்சித் தகவல்களும் கிடைத்தன.
எட்டப்பனின் வாரிசுகள் என தனலட்சுமி, சந்தானலட்சுமி, ராமாமிர்தம் ஆகிய 3 பெண்களும், "தங்களுக்கு சொந்தமான நிலம்' என்று சொல்லி, அரசுக்கு சொந்தமான பள்ளிக்கரணை கிராமத்தின் சர்வே எண் 657/1ஏ-ல் அடங்கிய 66.70 ஏக்கர் சதுப்பு நிலத்தை, பூமிபாலா அறக்கட்ட ளையின் ட்ரஸ்டி லட்சுமணனுக்கு விற்க முடிவு செய்கிறார்கள். இதற்கான பத்திரப் பதிவை செய்வதற்கு முன்பு, அந்த 3 பெண்களும் லட்சுமணனின் மருமகன் அழகிரிக்கு 13-10-2004-ல் பவர் கொடுக்கின்றனர். அவர் மூலமாக லட்சுமணனின் பெயருக் குப் பதிவு செய்வதுதான் நோக்கம்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்டதால், அங்கு பதிவு செய்ய இவர்கள் சென்ற போது, பத்திரத்தை பார்வை யிட்ட சார்பதிவாளர் சிவசுப்பிர மணியம், "அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் கையகப்படுத்த நினைக்கிறார்கள்' என கண்டறிந்து பதிவு செய்யாமல் நிராகரிக்கிறார். ஆனாலும் இவர்களை விட்டுவிட மனசில்லாமல் அழகிரியிடமும் லட்சுமணனிடமும் ஆலோசிக் கிறார். அப்போது, "சைதாப்பேட் டையில் பதிவு செய்தால் சிக்க லாகிவிடும். ராயபுரத்தின் சார்பதி வாளராக உள்ள அங்கயற்கண்ணி எனக்கு தெரிந்தவர்தான். அங்கு பதிவு செய்துவிடலாம். ஆனால், அந்த பகுதியில் உங்களுக்கு சொத்து இருக்கவேண்டும். அப்படியிருந்தால் அந்த சொத்தை விற்பது போல செய்து, அதனை மீண்டும் உங்களுக்கே பதிவு செய்கிறபோது, பள்ளிக்கரணை சொத்தையும் இணைத்துவிடலாம். அந்த பகுதியில் உங்களுக்கு ஏதேனும் நிலமிருக்கிறதா'' என சிவசுப்பிரமணியம் கேட்க... தண்டையார் பேட்டையில் 453 சதுரஅடி நிலம் இருப்பதாக சொல்கிறார் லட்சுமணன். உடனே அங்கயற்கண்ணியிடம் கலந்து பேசுகின்றனர். பெரிய தொகையில் சில பேரங்களும் முடிவாகின்றன.
இதனையடுத்து, சிவசுப்பிரமணியனும் அங்கயற்கண்ணியும் கொடுத்த யோசனையின் பேரில், தனது பெயரில் தண்டையார்பேட்டை யிலிருக்கும் சர்வே எண்: 3837/1-ல் அடங்கிய 453 சதுர அடி சொத்தினை தனது மருமகன் அழகிரிக்கு பவர் கொடுக்கிறார் லஷ்மணன். இதனை திருவல்லிக்கேணி சார்பதிவாளர் அலுவலகத்தில் 04-11-2004, மாலை 4 முதல் 5 மணிக்கு பதிவு செய்கின்றனர் (பத்திர எண்:514/2004). அதேநாளில் மாலை 6:00 மணிக்கு தண்டையார்பேட்டை சொத்தையும், பள்ளிக்கரணை சொத்தையும் ( சர்வே எண் 657/1ஏ, 66.70 ஏக்கர்) சேர்த்து தனது மாமா லஷ்மணனுக்கு கிரைய பத்திரமாக, ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்கிறார் அழகிரி. அதனை சரிபார்த்து பதிவு செய்து கொடுக்கிறார் சார்பதிவாளர் அங்கயற்கண்ணி.
மேற்கண்ட ஆவணம் எழுதப்பட்ட நாள் 13-10-2004. ஆவணத்தின் பக்கம் 16-ல் உள்ள முத்திரைத்தாள் வாங்கப்பட்ட நாள் 04.11.2004. ஆவணம் எழுதப்பட்ட நாளுக்குப் பிறகு வாங்கப் பட்ட முத்திரைத்தாள் என தெரிந்தும் அதனை பதிவு செய்திருக்கிறார். இதுதவிர, ஆவணத்தின் பக்கங்கள் 3, 5, 11-ல் இடைச்செருகல்களும், பக்கம் 12, 13, 14, 15, 18 ஆகியவற்றில் திருத்தங்களும், பக்கம் 17-ல் அடித்தலும் இருப்பதை அறிந்தும் பதிவு சட்டப்பிரிவு 20-க்கு எதிராக பதிவு செய்கிறார். ஆக, கூட்டுச் சதி மூலம் அரசு நிலத்தை பதிவு செய்திருக்கிறார் அங்கயற்கண்ணி.
அதேபோல, பள்ளிக்கரணை சதுப்பு நில புல எண் 429 மற்றும் 534 அருகே புல எண் 354-க்குரிய 47 சென்ட் நிலம் தனியாருக்கு சொந்தமானது. இந்த புல எண் 354-ஐ பயன்படுத்தி புல எண் 534-க்குரிய அரசின் சதுப்பு நிலத்தில் 7 ஏக்கரை பல்வேறு நபர்களுக்கு போலி பட்டாக்கள் மூலம் பதிவுசெய்து கொடுத்திருக்கிறார் தாம்பரம் சார்பதிவாளராக இருந்த பி.வி.கீதா. அதேபோல, சேலையூர் சார்பதிவாள ராக இருந்த சந்திரனும் 7 ஏக்கர் பதிவு செய்துள் ளார். இதற்காக காட்டப் பட்ட 840, 841, 842 ஆகிய பட்டா எண்கள் அனைத் தும் போலியானவை. அதேபோல சைதாப்பேட்டை மாவட்ட பதிவாளராக இருந்த ரவீந்திரநாத், 216 கோடி மதிப்பிலான 12 ஏக்கரை (சர்வே எண்கள்: 657/3-6, 429/2, டாகுமெண்ட் எண்கள்: 5939/2011, 10547/2011, 802/2012) போலி பட்டாக்கள் மூலம் பதிவு செய்திருக்கிறார்.
இப்படி 202 போலி பட்டாக்கள் மூலமாக வும், பட்டாக்கள் இல்லாமலும், தமிழக வனத் துறைக்கு சொந்தமான சதுப்பு நிலம், சுமார் 3,000 ஏக்கர் சூறையாடப்பட்டிருப்பதை சார்பதிவாளர் சிவப்பிரியாவின் உதவியால் கண்டுபிடிக்கிறார் நீதிபதி கிருபாகரன். இதன் மதிப்பு மட்டும் சுமார் 10,000 கோடி என்கிறார்கள் பதிவுத்துறையினர்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, இந்த விவகாரத்தில் குற்றவாளி களான அங்கயற்கண்ணி பதிவுத்துறையின் கூடுதல் பத்திரவுப் பதிவு தலைவராகவும் (ஏ.ஐ.ஜி.), சென்னை மண்டல சரக உதவி பதிவுத்துறை தலைவராக கீதாவும், மதுரை தெற்கு துணை பதிவுத்துறை தலைவராக ரவீந்திரநாத்தும் உயர் பதவியில் இருக்கின்றனர். திருத்தணி சார்பதிவாளராக சந்திரன் இருக்கிறார். இதில் பதிவுத் துறையில் நடக்கும் குற்றங்களை கண்டறிந்து தடுக்கும் புலனாய்வு பிரிவும் அங்கயற்கண்ணியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டும், பதிவுத்துறை தலைவராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், துறையின் அமைச்சராக இருந்த கே.சி. வீரமணி உத்தரவின் பேரிலும் பல மதிப்பு குறைவு ஆவணங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எல்லாமே வெயிட்டான சமாச்சாரங்கள்.
இதுகுறித்து கருத்தறிய சிவப்பிரியாவை தொடர்புகொண்டபோது, ஃபோனை அட்டெண்ட் பண்ணிய அவரது கணவர், "நீதிமன்றம் உத்தரவிட்டதால் பல ஆவாணங்களை அவர் தாக்கல் செய்தார். இதில் அவர் குற்றம் என்ன இருக்கிறது? ஆனா, அவரையே பொய் வழக்கில் கைது செய்தனர். இதனால் தனது தந்தையை இழந் தார் என் மனைவி. அவரை தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று தொடர்பை துண்டித்துக் கொண்டார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து அங்கயற்கண்ணி யிடம் கேட்டபோது, "ஒரே ஒரு டாகுமெண்ட்தான் பதிவு செய்தேன். அதுவும் திருவண்ணாமலை நில நிர்வாகம் கொடுத்த பட்டா, அந்த டாகுமெண் டோடு இருந்ததால் பதிவு செய்யவேண்டியிருந்தது. இந்த பிரச்சினை கோர்ட்டுக்குப் போனபிறகு பட்டா ரத்து செய்யப்பட்டது. அதனால், அரசு நிலமும் பாதுகாக்கப்பட்டது. இதனை கோர்ட்டி லும் என் பதிலாக தாக்கல் செய்திருக்கிறேன். மற்ற படி எந்த தவறும் நான் செய்யவில்லை'' என்றார்.
அதேபோல, ரவீந்திரநாத்தை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, "சதுப்பு நிலம்ங்கிறது 2012-க்கு பிறகுதான் கவனம் பெற்றது. அதற்கு முன்பு முன்னாள் ராணுவத்தினர் உள்பட பலருக் கும் அரசாங்கமே அந்த நிலத்தை கொடுத்துள்ளது. அதனால் ரீ-சேலுக்காக ஓரிரு டாகுமெண்டுகள் பதிவு செய்யப்பட்டது. மற்றபடி போலி ஆவணங்களின் அடிப்படையில் நான் எந்த தவறையும் செய்யவில்லை. என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது'' என்கிறார்.
கீதாவை தொடர்புகொண்டு கேட்டபோது, "போலி டாகுமெண்ட் எதையும் நான் பதிவு செய்யவில்லை'' என்பதோடு முடித்துக்கொண்டார்.
போலி பத்திரம் மூலம் அரசு நிலத்தை அபகரிக்கத் துணைபோன அதிகாரிகளை, நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்களை கைது செய்யாமல், லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை காப்பாற்றி யிருக்கிறது எடப்பாடி அரசு. இன்றைய அரசு என்ன செய்யப்போகிறது?