பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த பொறியாளர் பாலமுருகன் மனைவியான ஆசிரியை தீபா, வீ.களத்தூர் அருகே உள்ள வண்ணாரம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை செய்துவந்தார். அதே பள்ளியில் பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் வெங்கடேசன் அறிவியல் ஆசிரியராக வேலை செய்தார். இந்த நிலையில் கடந்த 2023 நவம்பர் 15ஆம் தேதி இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் காணாமல் போனார்கள்.

இதுகுறித்து தீபாவின் கணவர் பாலமுருகன் வீ.களத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல் ஆசிரியர் வெங்கடேசன் மனைவி காயத்ரியும் பெரம்பலூர் காவல் நிலையத்தில் தனது கணவர் வெங்கடேசனை கண்டுபிடித்துத் தருமாறு புகார் அளித்தார். இருவரது புகார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை தேடி வந்தனர்.

mm

இந்த நிலையில் நவம்பர் 30ஆம் தேதி தீபாவின் கார் மட்டும் கோயமுத்தூரில் அனாதையாக நின்றிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தனிப்படை போலீசார் அங்கு சென்று அந்த காரை பரிசோதனை செய்ததில், காருக்குள் ரத்தக் கறை படிந்த சுத்தியும், தீபா அணிந்திருந்த காது தோடுகள் மற்றும் வெங்கடேசன் பயன்படுத்திய இரண்டு செல்போன்கள் ஆகியவை இருந்தன. அந்தக் காரை கைப்பற்றி பெரம்பலூர் கொண்டு வந்த தனிப்படை போலீசார், அதன் பிறகு வெங்கடேசனை தீவிரமாக தேடி வருவதாகக் கூறினர்.

இதற்கிடையில் வெங்கடேசன் மனைவி காயத்ரி, மைத்துனர் பிரபு, நண்பர் ராஜா ஆகி யோர் தலைமறைவாக உள்ள ஆசிரியர் வெங்கடேசனுடன் தொடர்பில் இருப்பதாக கண்டறிந்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த செய்தியை "ஆசிரியை கடத்தலா? கொலையா? -தூங்கும் காவல்துறை!'’ என்ற தலைப்பில் கடந்த ஜனவரி 20-23 தேதியிட்ட நமது நக்கீரன் இதழில் விரிவாகவே எழுதியிருந்தோம்.

இந்த நிலையில் தீபாவின் கணவர் பாலமுருகன் சென்னை உயர்நீதிமன்றத் தில் தனது மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உரிய விளக்கம் அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சென்னையில் பதுங்கியிருந்த ஆசிரியர் வெங்கடேசனை போலீசார் பொறிவைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.

அவரை பெரம்பலூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது பல பகீரூட்டும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. ஆசிரியர் வெங்கடேசன் ஆன்லைன் டிரேடிங் நடத்துவதாகச் சொல்லி, பல்வேறு நபர்களிடமிருந்து பல லட்ச ரூபாய் பணத்தை வாங்கியிருக்கிறாராம். அந்த வரிசையில் ஆசிரியை தீபாவிடமும் பல லட்சம் ரூபாய் கொடுக்கல் வாங்கல் வைத்திருந்தாராம் வெங்கடேசன். இதில் இவர்களுக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டதாம்.

இந்நிலையில்தான் ஆசிரியை தீபாவை, வெங்கடேசன் அவர் காரிலேயே அழைத்துச் சென்று, கொலை செய்தாராம். பின்னர் கேரள மாநிலத்தில் அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் வாக்குமூலம் கொடுத்து அதிரவைத்தி ருக்கிறார். குற்றவாளியான ஆசிரியர் வெங்கடேசன் மீது வீ.களத்தூர் காவல்நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து, நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அவரை அடைத்திருக்கிறார்கள்.

வெங்கடேசன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக ஆசிரியை தீபாவின் உறவினர்கள் கூறுகின்றனர்.

தனக்கும் தீபாவுக்கும் இடையில் பணப் பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனால் பள்ளியில் பலர் முன்னிலையில் தன்னை தீபா அவமானப்படுத்தினார் என்றும், எனவே அவரைக் கொல்லத் திட்டம் தீட்டியதாகவும் வெங்கடேசன் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், பள்ளியிலிருந்து ஆசிரியை தீபாவை பேரையூர் கைகாட்டிக்கு அவரது காரில் வருமாறு வெங்கடேசன் கூறிவிட்டு, தான் மட்டும் தனியாக சென்று தீபாவின் காரில் ஏறியதாகவும் இருவரும் முருக்கன்குடி வனப்பகுதிக்கு சென்றதாகவும் அங்கு வைத்து தீபாவைக் கொலை செய்ததாகவும், பிறகு அவர் உடல் இருந்த காரை பெரம்பலூர் மேம்பாலம் அருகே நிறுத்திவிட்டு, ஒரு ஆட்டோ மூலம் பெரம்பலூர் நகருக்குள் சென்று தீபாவின் நகைகளை விற்றதாகவும், பிறகு பெட்ரோல் வாங்கிக் கொண்டு, பூசத்துறை வெள்ளாற்றின் கரை குப்பை மேட்டில் வைத்து தீபாவின் உடலை தீவைத்து எரித்ததாகவும் சொல்லியிருக்கும் வெங்கடேசன், அந்த காரிலேயே கோயம்புத்தூர் சென்று, அதை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றதாகவும் கூறியிருக் கிறாராம்.

பணப் பிரச்சினை இருக்கும்போது வெங்கடேசன் அழைத்தவுடன், தீபா அவரை நம்பி காரில் சென்றிருப்பாரா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறவர்கள், புதுக்கோட்டை திருமயம் சாலையில் தீபாவின் உடலை முழுதாக உடல் பாகங்கள் மிச்சமில்லாமல் எரித்ததாக வெங்கடேசன் கூறிய இடத்தில், சில எலும்புத் துண்டுகள் கிடைத்ததாகவும் அதை போலீசார் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறுவது எப்படி என்றும் கேட்கிறார்கள். இதுபோல் பல்வேறு சந்தேகங்களை அவர்கள் எழுப்புகின்றனர்.

வெங்கடேசன் மட்டும் தனி ஒருவராக இந்தக் கொலையைச் செய்து, உடலை எடுத்துச் சென்று எரிக்க முடியுமா? அவருக்கு இதில் வேறு யாருடனாவது கூட்டு இருக்கிறதா? என்ற சந்தேகமும் எங்களுக்கு இருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆசிரியை தீபா கொலை விவகாரத்தில் குற்றவாளி பிடிபட்ட நிலையிலும், மர்மங்களும் சந்தேகங்களும் விலகாமலே இருக்கின்றன.

Advertisment

bb