இந்திய வரலாற்றையே திருத்தி எழுதும் விதமாக சமீபத்தில் வெளியா னது கீழடி அகழாய்வின் முடிவு. மற்ற எந்த அகழாய்வுப் பணிகளை விடவும், கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தே தமிழரின் பெருமையை உலகிற்கு உணர்த்தி இருக்கிறது கீழடி. அது சாத்திய மானதில் பலருக்கும் பங்குண்டு. அதில் மிகமுக்கிய மானவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன். கீழடி தொடர் பாக அவர் எழுதிய கட்டுரைகள், தமிழர்களே அறிந்திடாத பல உண்மைகளை எடுத்துச் சொன்னது. அவரைச் சந்தித்து கீழடி அகழாய்வு தொடர்பான சில கேள்விகளை முன்வைத்தோம்...…
கீழடியை "வைகை நதிக்கரை நாகரிகம்' என முதலில் பதிவுசெய்தவர் நீங்கள். தற்போதைய அகழாய்வு முடிவுகளை வைத்தே, இதுதான் தமிழர் நாகரிகம் என்கிற முடிவுக்கு வந்துவிட முடியுமா?
சங்க இலக்கியம் தமிழ்நாட்டில் ஓடுகிற பல நதிகளைப் பற்றிப் பேசு கிறது. அவற்றின் பெயர்கள் மட்டுமே அதில் இடம்பெற்றுள்ள நிலையில், வைகையை மட்டும்தான் தமிழ் வைகை என்கிறது. அப்படியானால், ஏதோ ஒருவகையில் தமிழ் மொழியின், பண்பாட்டின் தாய்நிலமாக வைகை இருந்திருக்க வேண்டும். இந்தியாவி லேயே அதிகபட்சமான கல்வெட்டுகள் கிடைத்தது தமிழ்நாட்டில்தான். தமிழ்நாட்டில் காலத்தால் மிகப்பழமையான பிராமி அல்லது தமிழி கல்வெட்டுகள் 33 இடங் களில் கிடைத்தன. அதில் 24 இடங்கள் வைகை நதிக்கரை. அதிலும் குறிப்பாக கீழடியில் இவ்வளவு பெரிய நகரக் கட்டுமானம் கிடைத்த வேளையில் தான், "வைகை நதிக்கரை நாகரிகம்' என்ற தலைப் பிட்ட கட்டுரைத்தொடரை நான் எழுதினேன்.
இந்த முடிவையே தலையில் தூக்கிக் கொண்டு ஆடுகிறார்கள். இது அவசியமா என்று சிலர் கேட்கிறார்கள்?
கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே பொதுமக்க ளுக்கு இவ்வளவு எழுத்தறிவு இருந்தது கீழடியில் தான். பல இடங்களில் கல்வெட்டுகளில் எழுத்துகள் கிடைத்திருக்கலாம். பானை ஓடுகளில்தான் எளிய மக்களின் எழுத்தறிவு பிரதிபலிக்கிறது. கீழடி பல்வேறு அரசியல் காரணங்களால் உரிய முக்கி யத்துவம் பெறாமல் இருப்பது வருத்தமளிக் கிறது. சங்க இலக்கியம் என்கிற மகத்தான பொக்கிஷத்தைக் கையில் வைத்துக்கொண்டு, அதன் வெளிச்சத்தில் கீழடியின் சான்றுகளைப் பார்க்கவேண்டும். கீழடியின் சான்றுகள்தரும் வெளிச்சத்தைக் கொண்டு, சங்கக் கவிதைகளை வாசிக்கவேண்டும். பல வரலாற்று உண்மைகளுக்கு அது வழிதரும்.
கீழடியில் எந்தவிதமான மத, இறை அடையாளங்களும் கிடைக்கப் பெறவில்லை. வெறும் மூன்று மீட்டர் அளவுக்கு தோண்டிவிட்டு இந்த முடிவுக்கு வரமுடியுமா?
மனிதனால் தொந்தரவு செய்யப் படாத யண்ழ்ஞ்ண்ய் நர்ண்ப் வரைதான் அகழாய்வின்போது தோண்டுவார்கள். ஆகவே தோண்டப்போகும் குழியின் ஆழத்தை அந்த ஆதிநிலம்தான் உறுதிசெய்யும். அப்படித் தோண்டி கிடைத்த பொருட்களை வைத்துதான் கீழடியின் நான்காம்கட்ட முடிவுகள் வெளியாகின. அதற்குமேல் தோண்டிப் பிரயோஜனம் இல்லை.
ஹரியானாவின் ராகிகடியில் கிடைத்த எலும்புக்கூடுகள், திராவிட நாகரிகத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்கிற விவாதம் எழுகிறது. கீழடியில் அப்படியொரு முடிவுக்கு வரமுடியுமா?
கீழடி என்பது நன்கு பண்படுத்தப் பட்ட, செழித்த நாகரிகத்தின் அடை யாளம். அங்கு நமக்குக் கிடைத்திருப் பது தொழிற்கூடம். அதற்கு அருகில் வசிப்பிடம் இருந்திருக்க வேண்டும். கீழடியில் இருந்து ஒன்றரை கிலோமீட்டருக்கு தென் மேற்கில் சென்றால், ஏராளமான முதுமக்கள் தாழிகளை கண்கூடாக பார்க்கலாம். கண்மாய் தோண்டும் பணியின் போது அவை வெளிப் பட்டன. அங்குபோனால் தான், எலும்புக்கூடுகளும், புதைக்கும்போது நடந்த சடங்கு களுக்கான அடையாளங்களும் கிடைக்கும். முழுக்க முழுக்க இடுகாடான ஆதிச்சநல்லூரில் வாழ்விடம் கிடைக்கவில்லை என்றார்கள். இப்போது கீழடியில் தொழில்செய்த இடத்தில் எலும்புக்கூடுகளை கேட்கிறார்கள்.
குமரிக் கண்டத்தில்தான் தமிழர்களின் வரலாறு தொடங்குவதாக படித்திருக்கிறோம். எதுதான் உண்மை?
இறையினார் அகப்பொருள் உரையில்தான் குமரிக் கண்டம் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. அது எழுதப் பட்டது கி.பி. எட்டாம் நூற்றாண்டில். அதுபோல் ஒவ்வொரு சங்க இலக்கியத்தையும் வைத்து, ஒவ்வொரு கதையைச் சொல்லலாம். அவையெல்லாம் அவரவர் கற்பனைசார்ந்த விஷ யங்கள். ஹரப்பா, மொகஞ்சதாரோவில் அறிவியல்பூர்வமாக கண்டுபிடித்ததால்தான், அதை சிந்துவெளி நாகரிகம் எனப் பெயரிட்டார்கள். அதுபோல, அதிகாரப்பூர்வமாக, அறிவியல் பூர்வமாக தமிழ் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது கீழடியில்தான்.
நாலாயிரம் ஆண்டுகள் பழமையான சிந்துசமவெளி நாகரிக எழுத்துகளும், கீழடியில் கிடைத்த எழுத்துகளும் ஒத்துப்போவதாக சொல்கிறார்களே?
சிந்துசமவெளி கி.மு.1900-த்தோடு முடிந்துவிடுகிறது. கீழடியில் கி.மு.600-ல் இருந்து நமக்குக் கிடைத்திருக்கிறது. தமிழி அல்லது பிராமி எழுத்துகள் தோன்றுவதற்கு முன்னால் எல்லா மனிதக்கூட்டமும் குறியீடுகளைத் தான் பயன்படுத்தி வந்தது. கீழடியின் நான்காம் கட்ட அகழாய்வில் மட்டுமே 1,001 குறியீடுகள் கிடைத்துள்ளன. குறியீடுகளில் இருந்து எழுத்து உருவானதற்கான இந்த மிகப்பெரிய சான்று, ஒரு கண்ணாடிக்குள் சித்திரம்போல் காட்சியளிக்கிறது. சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகளும், தமிழ்நாட்டில் கிடைத்த சில குறியீடுகளும் ஒத்திருப்பதாக கீழடிக்கு முன்பே சொல்லப்பட்டதுதான். மொழி எப்படி உருவானதென்பதும், அப்படி உருவானபோது இந்தியாவின் பல்வேறு திசைகளில் ஒரேபோன்ற முயற்சிகள் நடந்ததா என்பதும் மிகமுக்கியமான ஆய்வுக்குரிய விஷயம்.
அந்த ஆய்வுக்கு முன்பே இந்திய வரலாறு மாற்றி யமைக்கப்படுவதாக சொல்வது எதற்காக?
கி.மு. 5-ஆம் நூற்றாண்டில்தான் கங்கைச் சமவெளியில் நகர நாகரிகம் உருவானது. அதேசமயத்தில் வேறெங்கும் நகரங்கள் இருக்கவில்லை என்றும், தமிழர்கள் செங்கலைக் கண்டுபிடித்ததே கி.பி.யில்தான் என்றும்கூட சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், கங்கைச் சமவெளி நாகரிகத்தின் காலத்திலேயே வைகைக் கரையில் நகர நாகரிகம் செழித்தோங்கி இருந்திருக் கிறது. கீழடியில் 50 சதுரங்கக்காய்கள் கிடைத் திருப்பது அவர்களின் வளமையைக் காட்டுகிறது. ஆக, இந்த வளமையை அடைய, அந்த நாகரிகம் எத்தனை நூறாண்டுகள் பயணப்பட்டிருக்க வேண்டும். எனவே, இந்தப் பார்வையில் வரலாற் றைத் திருத்தி எழுதவேண்டியதன் அவசியத்தை கீழடி உருவாக்கியிருக்கிறது.
மத்திய அரசு போதுமான ஒத்துழைப்பு தருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சொல்கிறாரே?
கீழடியைப் பெற்றெடுத்த, அதில் ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்ட அகழாய்வுக் குழுத் தலைவர் அமர்நாத் ராமகிருஷ்ணனை அப்படியே ரத்தமும் சதையுமாக அஸாமுக்கு அப்புறப்படுத்தி னார்கள். பின்னர் ஸ்ரீராம் என்பவரை நியமித்து அத்தோடு முடித்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்து, மூன்றாவது அகழாய்வோடு மத்திய தொல்லியல் துறை கீழடியிலிருந்து வெளியேறிவிட்டது. நான்கு மற்றும் ஐந்தாம்கட்ட அகழாய்வுக்கு ஒருபைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை. அகழாய்வு தொடங்கிய முதலாண்டில் இருந்தே கள அருங் காட்சியகம் அமைத்து, கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த வலியுறுத்தி வருகிறோம். நீதிமன்ற மும் சொல்லிவிட்டது. தமிழக அரசும் இடம் தருவதாக சொல்லிவிட்டது. இதுவரை எதுவுமே மத்திய அரசு செய்துதரவில்லை. அகழாய்வு நடந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வும், அங்கே சர்வதேசத் தரத்திலான கள அருங் காட்சியகத்தை அமைக்கக்கோரி மத்திய கலாச் சாரத்துறை அமைச்சரை சந்தித்து நான், எம்.பி.க் கள் கனிமொழி, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கோரிக்கை வைத்திருக் கிறோம். அமைச்சர் பாண்டியராஜனும் இதே கோரிக்கையை முன்வைத்தார். கொடுத்தால் நல்லது; வரவேற்போம். இதுவரை கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.
கீழடி தமிழர் நாகரிகமா? திராவிட நாக ரிகமா? என்பதை வைத்து முரண்பாடு எழுகிறதே?
கீழடிக்கு மத்திய அரசு, மத்திய கலாச் சாரத்துறை, மத்திய தொல்லியல் துறை தொடர்ச்சி யாக இழைத்துக்கொண்டிருக்கிற அநீதிதான் இந்த முரணுக்கான மையம். அதிலிருந்து திசைதிருப்பத் தான் இப்படியொரு விவாதம் நடக்கிறது. உத்தரப் பிரதேசம் மாநிலம் சனௌலியில் பழங்காலத் தேர், கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன, நல்ல விஷயம் தான். அதனுடைய கார்பனை ஆய்வுக்கு அனுப்பி, முடிவு தெரிவதற்கு முன் பாகவே ஆய்வுநடந்த 26 ஏக்கரும் பாதுகாக்கப்பட்ட பகுதியென்று தொல் லியல் துறையால் அறிவிக்க முடியுமென்றால், கீழடி மட்டும் என்ன செய்தது? இன்னொரு புறம், திராவிடம் என்பது இனவரை வியலின்படி இருக்கிற கருதுகோள் என்பதைப் புரிந்துகொள்ள வேண் டும். அதை 1940களில் உருவான அர சியல் கோட்பாட்டுக் கருது கோளோடு இணைத்து வேண்டு மென்றே திசை திருப்புகிறார்கள். வைகை நதிக்கரை நாகரிகம் என்பது தமிழின் ஆதித் தொட்டில். தமிழர் நாகரிகம் என்பது தாய் நாகரிகம். இந்தியாவின் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்தான் என்று வருகிறபோது, தமிழின் பூர்வஇடமாக வைகைக் கரை இருப்பதாக தொடர்ந்து நிறுவி வருகிறோம். இந்த உரையாடலை திசைதிருப்ப இதுபோன்ற முரண்கள் எழுகின்றன. அதையும் தாண்டி கீழடி தன்னுடைய உண்மையை நிலைநிறுத்தும்.
இதெல்லாம் போக, அமைச்சர் பாண்டிய ராஜன் கீழடியை "பாரத நாகரிகம்' என்கிறாரே?
இந்தியா என்றால் அதன்பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. பாரதம் என்ற சொல்லுக்கும் அரசியல் இருக்கிறது. இந்தியாவிற்கு பாரதம் என்று பெயர் வைக்கச் சொன்னது சாவர்க்கரின் அரசியல். அதை ஏன் இப்போது அமைச்சர் சொல்கிறார் என்பதுதான் தெரியவில்லை.
-சந்திப்பு: பெலிக்ஸ்
தொகுப்பு: -ச.ப.மதிவாணன்
படம்: பாலாஜி