கோவில்பட்டி நகரின் மெயின் ரோட்டில் பாத்திரக் கடை, பழைய இரும்புக்கடை (ஸ்கிராப்களைக் கொண்டது) ஹோல்சேல் பிசினஸ் செய்யும் தொழிலதிபர் தங்கம். இவரது கடைக்கு, காவல் துறை தனிப்படை அதிகாரிகள் போல டீக்காக டிரெஸ் செய்துகொண்ட தாட்டியமான 5 பேர், அரசு முத்திரை நம்பர் பிளேட்டுடன் கூடிய சொகுசு காரில் வந்திறங்கியிருக்கிறார்கள்.
"முதலாளி எங்கே?'' என்ற அதட்ட லுடன் நுழைந்தவர்கள், கல்லாவில் அமர்ந்திருந்த ஓனர் தங்கத்திடம், "நீங்கள் அரசு டவரில் திருடிய பொருட்களை வாங்கியுள்ளீர்கள். புகார் வந்துள்ளது. அது தொடர்பா விசாரணை நடத்த வேண்டும். உடனடியாக எங்களுடன் வாருங்கள்'' என்று அதட்டலாகப் பேச, வர மறுத்தவரை வலுக்கட்டாயமாகக் காரில் ஏற்றியவர்கள், அவரின் செல்போனைப் பறித்து சுவிட்ச் ஆஃப் செய்தனர். தொழிலதிபர் தங்கத்தைக் கடத்திச் சென்றவர்கள் விருதுநகர் தாண்டி திருமங்கலம் சாலையின் காட்டுப்பகுதியில் நிறுத்தி, தங்கத்தின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தி, 20 லட்சம் தந்தால் உயிரோடு விட்டுவிடுவோம் என்று மிரட்ட, தங்கமோ மிரண்டுபோய், "என்னிடம் அவ்ளோ பணமில்ல, 5 லட்சம் தர்றேன்... விட்டுடுங்க'' எனக் கெஞ்சியிருக்கிறார்.
பின்னர், தங்கத்தின் செல்போனை ஆன் செய்து, அவரிடம் கொடுக்க, அவரோ மகன் செந்திலிடம் பேசி, உடனடியாக 5 லட்சம் ரூபாயை விருதுநகர் பைபாஸ் ரோட்டுக்கு கொண்டுவரச் சொல்லியிருக்கிறார். அதன்பின் போன் துண்டிக்கப் பட்டது. அதேபோல் 5 லட்சம் ரூபாயுடன் மகன் வர, அப் பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகமிருந்ததால், விருது நகரிலுள்ள தனியார் பள்ளிப் பக்கமாக வரச் சொல்ல, அங்கு வந்த செந்திலிடம் பணத்தைப் பறித்துக்கொண்டு, தங்கத்தைத் தள்ளிவிட்டு காரில் மின்னலென மதுரை என்.எச். சாலை யில் பறந்தனர்.
இதனிடையே, கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட, தகவல் மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணனுக்கு சென்றது. உடனே, ஆக்ஷனில் இறங்கிய எஸ்.பி., கோவில் பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் மேற்பார்வை யில் இன்ஸ் பெக்டர் சுஜித் ஆனந்த், எஸ்.ஐ.க்களான சிலுவை அந்தோணி, அரி கண்ணன் உள்ளிட்ட 8 போலீசார்களைக் கொண்ட தனிப்படையின்மூலம் தேடுதலில் இறங்கியிருக்கிறார். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் காலை 9 மணிக்கு தொடங்கிய சேஸிங், பல்வேறு யுக்திகளால், மதியம் மூன்றரை மணிக்கு, 236 கி.மீ தொலைவில் கும்பலின் வாகனத்தை மடக்கிப் பிடித்ததோடு முடிவுக்கு வந்தது. 6 மணி நேரத்தில் 5 லட்ச ரூபாயைக் கைப்பற்றிய தனிப்படையினரை எஸ்.பி. பாராட்டினார்.
தொழிலதிபரைக் கடத்தியவர்கள், பெங்களூரைச் சேர்ந்த பரன்கவுடா, தாஸ், டேனியல், பவுல், பெரோஸ்கான் என்பதும், போலி அரசு முத்திரை வாகனத்துடன், பல நெட் வொர்க்குகளுடன் இணைந்து இதுபோல் தமிழகத் தொழிலதிபர்களைக் குறிவைத்துக் கடத்துவதும் தெரியவந்து அதிர்ந்திருக்கிறார்கள். இதுகுறித்து சேஸிங்கில் ஈடுபட்ட போலீசார் சிலரிடம் விசாரித்தபோது, "தகவல் கிடைத்தவுடன் தாமதிக்காமல் காரை சேஸ் செய்தோம். ஆனால் அவர்கள் திருமங்கலம் டோல்கேட்டின் சோதனைத் தடுப்பை உடைத்தெறிந்துவிட்டுப் போனதால் பரபரப்பாகிவிட்டது. பச 07 ஏ 6523 கிருஷ்ணகிரி போலீஸ் என்று கிடைத்த தகவல் போலியானதென்று தெரிந்தது. கிருஷ்ணகிரி என்றதால், டோல்கேட்டை ஆராய்ந்ததில், சனிக்கிழமை காலையில்தான் இந்த கும்பல் ஓசூர் வழியாகத் தமிழகத்துக்குள் வந்தது தெரிந்தது. பாஸ்டேக் மூலமாக வாகனத்தின் எண், கேங்கின் மொபைல் எண்ணையும் கைப்பற்றி, ஜி.பி.எஸ். மூலம் சோதித்ததில், காலை 11 மணிக்கு மதுரையை கிராஸ் செய்தது தெரிந்தது. கரூர் வழியாகக் கர்நாடகா நோக்கிச் செல்வார்களென யூகித்து, கரூர், கிருஷ்ணகிரி, ஓசூர் போலீசை அலர்ட் செய்தோம். கரூர் டோல்கேட்டை 12.58க்கு அவர்கள் கிராஸ் செய்தது தெரிந்ததால், அரவக்குறிச்சி டோல்கேட்டை ப்ளாக் செய்யும்படி கூறினோம். அதன்படி, லாரிகளைப் பயன்படுத்தி அனைத்து பாதைகளையும் அரவக்குறிச்சியில் தடுத்தனர். இதனால் அந்த கும்பலின் வாகனம் லாரிகளின் இடையே ப்ளாக் ஆனது. அடுத்து, நாங்களும் ஸ்பாட்டுக்குச் செல்ல, எங்களின் கஸ்டடிக்குள் சிக்கினர்'' என்றனர்.
இந்த ஆபரேஷனின் இன்ஸ்பெக்டரான சுஜித்ஆனந்திடம் பேசியபோது, "மதுரையிலுள்ள தண்டபாணி, கண்ணன் என்கிற ஓசூர் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு பெங்களூரில் இந்த கேங்குடன் பழக்கமாகியுள்ளது. தென் மாவட்டத்திலுள்ள பழைய இரும்பு வியாபாரிகள், மதுரையிலுள்ள ஒரு மொத்த வியாபாரியிடம்தான் ஸ்க்ராப்களை விற்பார்கள். அவர்களில், லட்சக்கணக்கில் ஸ்க்ராப்களை விற்பவர்களின் விவரங்களை எடுத்து, அந்த கேங்கிடம் கொடுப்பார்கள். அந்த கேங்க், வியாபாரிகளைக் கடத்திச் சென்று 25 லட்சம் வரை பேரம் பேசி பறிப்பார்கள். இந்த வியாபாரிகள் போலீசிலும் புகாரளிப்பதில்லை. இதைப் பயன்படுத்தி பல லட்சங்களைப் பறித்திருக்கிறார்கள். இந்த கும்பல் பயன்படுத்தும் வாக்கிடாக்கி உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்து அவர்களை ரிமாண்ட் செய்துள்ளோம்'' என்றார்.
கர்நாடக கும்பலால் தமிழகத் தொழிலதிபர்கள் குறிவைக்கப்படுவது, இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் மத்தியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒட்டு மொத்த கும்பலையும் சுற்றிவளைத்தால்தான் நிம்மதி.