ஏழ்மை நிலையிலுள்ள கிராமத்து மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட அகில இந்திய நூற்போர் சங்கத்துக்கு, தமிழகமெங்கும் 62 சர்வோதய சங்கங்களும், இதர சங்கங்களும் இயங்கி வருகின்றன. கதர் நிறுவனத்தின் நூற்பு மற்றும் நெசவுக்கு, ஒன்றிய அரசு 15 சதவீதமும், மாநில அரசு 15 சதவீதமும் நிதி உதவி அளிப்பதன் மூலமாக, சுமார் 50 ஆண்டு காலமாக இச்சங்கம் இயங்கி வருகிறது.
தமிழகம் முழுவதுமுள்ள சர்வோதய சங்கத்தின் உறுப்பினர்கள் மூலமாக, தலைவர், பொருளாளர், செயலாளர் ஆகிய பதவிகளுக்கான நிர்வாகிகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இச்சங்கத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் தொழிலாளர்களே உறுப்பினர்களாக நிர்ணயம் செய்யப்படுவார்கள். இது தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டத்தின்படி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கும்.
10 வருடத்திற்கு முன்பாக விற்பனையாளர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கிவந்த நிலையில், தற்போது உற்பத்தியாளர்களுக்கு 20 சதவீதம் மானியத்தை அரசு வழங்கிவருகிறது. இந்த மானியத்திற்காக, உற்பத்தி செய்யப்படாமலே உற்பத்தி செய்வதுபோல் கணக்குகளை பாராமரித்து, அரசுகளை ஏமாற்றி, சர்வோதய சங்கத்தின் தலைவர்கள் உருவாக்கிய போலி நெசவாளர்களின் வங்கிக் கணக்குக்குச் சென்றடைவதால், உண்மையான நெசவாளர்கள் இந்தத் தொழிலையே கைவிடும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூரில் இயங்கும் சங்கம், ஆம்பூர், வாணியம்பாடி, பச்சூர், தருமபுரி, ஊத்தங்கரை ஊர்களை உள்ளடக்கியுள்ளது. இதில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, பச்சூர், தர்மபுரி, ஊத்தங்கரை போன்ற ஊர்களில் விற்பனை நிலையங்களும், திருப்பத்தூர் தலைமை அலுவலகத்தில் கதர் நூல் உற்பத்தி, கதர் ரெடிமெட் மற்றும் உட் ஃபர்னிச்சர் உற்பத்தி நிலையமும், பச்சூரில் பட்டு நூற்பு உற்பத்தி நிலையமும், ஊத்தங்கரையில் பட்டு ஜவுளி உற்பத்தி நிலையமும் இயங்கிவருகின்றன. சங்கத்தில், அடுத்த ஆண்டிற்கான பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் 3 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளதாக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. சங்கத்தின் செயலாளர் லோகேஷ்வரன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் பெயர்களில் போலி நெசவுக்கணக்கு தொடங்கி, சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்புக்கு உற்பத்தியும், விற்பனையும் நடந்துள்ளதாகப் போலிக்கணக்கு காட்டி, அரசு மானியத்தை அபகரித்துள்ளார்.
இப்படி போலியாகச் சேர்க்கப்பட்ட பாபு என்பவர், நிர்வாகி மீது புகாரளித்துள்ளார். "எனக்கு வேலைவாய்ப்பு, வங்கியில் தொழில் கடனும் வாங்கி தருவதாகக் கூறி வங்கிக்கணக்கு தொடங்கி, எனது பாஸ்புக், ஏ.டி.எம். கார்டுகளை அவரே வைத்துக் கொண்டு 2 லட்சம் ரூபாயைக் கையாடல் செய்திருப்பது வங்கிக்கணக்கு மூலம் தெரியவருகிறது. இதேபோல அவரது உறவினர்களின் கணக்கிலும் பல லட்சங்களைச் சுருட்டியுள்ளார்'' என்று குமுறுகிறார் பாபு.
அரசு நிர்ணயித்த விலையைவிடக் கூடுதல் விலையை நிர்ணயம் செய்து, புடவை விற்பனையில் 2,000 முதல் 5,000 ரூபாய்வரை மோசடி செய்திருக்கிறார். கூலி கொடுப்பதிலும் 10 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். ஊத்தங்கரை பட்டு உற்பத்தி மேலாளர் செல்வதிருப்பதி, 20 பெயர்களில் போலி வங்கிக் கணக்கைத் தொடங்கி, அதன்மூலம் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். மொத்தமுள்ள 62 சங்கங்களின் செயலாளர்களும் ஊழல் செய்ததை மறைப்பதற்காக, திருப்பத்தூர் லோகேஸ்வரன், ஆரணி சங்கர், சேலம் ஆறுமுகம், கடலூர் கணேசன் மூலமாக, தமிழ்நாடு சர்வோதய சங்கத்தின் செயலாளர் செந்தில் நாதன், முன்னாள் அமைச்சர் மற்றும் காதி இயக்குநர் களுக்கும், தணிக்கை அலுவலர்களுக்கும் கணிசமான தொகையைக் கொடுத்துச் சரிக்கட்டியுள்ளார்.
இவர்களது ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 6 உறுப்பினர்கள் தவிர்த்த 9 உறுப்பினர்களைக்கொண்டு கூட்டம் நடத்தியுள்ளனர். ஊழல்களைச் சுட்டிக் காட்டிய ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களைப் பணி நீக்கம் செய்துள்ளனர். இதனை எதிர்த்து காதி இயக்குநர் வரை புகாரளித்தும் பலனில்லையென்று புலம்புகிறார்கள்.
பணி நீக்கம் செய்யப்பட்டவரான தீர்த்தகிரி ராமமூர்த்தி கூறுகையில், "நியாயத்தைத் தட்டிக் கேட்டதற்காகவே எங்களைப் பணி நீக்கம் செய்துள்ளனர். தற்போதுள்ள ஆட்சியிலாவது இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். இதுகுறித்து திருப்பத்தூர் லோகேஸ்வரன். "இவர்கள் சொல்வதுபோல் எந்தத் தவறும் நடக்கவில்லை. 8 பேர்களைப் பணி நீக்கம் செய்ததற்கு, அவர்கள் மீதான புகார்கள்தான் காரணமேயன்றி வேறில்லை'' என்றார். தமிழ்நாடு சர்வோதய சங்கச் செயலாளர் செந்தில்நாதன், இதுதொடர்பாகப் பேச மறுத்துவிட்டார். தமிழ்நாடு கதர் கிராம கைத்தொழில் ஆணையர் டி.எம்.பாண்டியன், "தவறுகள் நடந் திருப்பின் சட்டப்படி அவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி சேலத்திலும் நடவடிக்கை எடுத்துள்ளோம். திருப்பத்தூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.