பூமியில் பூலோக சொர்க்கம் எனச் சொல்லத்தக்க இடங் களைத் தேர்ந்தெடுத்தால், அதில் முதன்மையான வரிசையில் காஷ்மீரை கண்ணை மூடிக்கொண்டு குறிப்பிட்டு விடலாம். ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலைபெற்றபோது, காஷ்மீர் தனி சமஸ்தானமாக நீடித்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடுவில் அமைந்த காஷ்மீர், தனி நாடாக நீடிப்பது சிரமமென அப்போதைய காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தார்.
அன்று காஷ்மீரில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசித்ததால், பாகிஸ்தானும் காஷ்மீரை தங்களுடன் இணைக்க விரும்பியது. பழங்குடியினர் போர்வையில் காஷ்மீரை ஆக்கிரமிக்க முனைந்தது. இதில் இந்திய காஷ்மீர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என இரு பெரும் பகுதிகளாக காஷ்மீர் பிரிந்தது. இதுபோக அக்சாய்சின் பகுதியை சீனா ஆக்ரமித்துக்கொண்டது.
காஷ்மீரை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டபோது அப்போதைய மன்னரின் வேண்டுகோளின்படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்திருந்தது. காஷ்மீரில் அயல் குடியேற்றத்தைத் தடுக்க காஷ்மீரைச் சேராதவர்கள் நிலம் வாங்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.
சிறப்பு அந்தஸ்து பறிப்பு
2014 காஷ்மீர் தேர்தலில் யாருக்கும் பெரும் பான்மை கிடைக்காத நிலையில் அங்குள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஹ்தியோடு இணைந்து குறைந்தபட்ச செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி கூட்டணி ஆட்சி அமைத்தது பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க.வுட னான கூட்டணி, நாளுக்கு நாள் காஷ்மீர் மக்களிடையே தனக்கான ஆதரவை விலக்குவதாகவும், காஷ்மீர் மக்களுக்கு எந்தவித நன்மையை அளிக்காததையும் கண்ட மெஹ்பூபா, விரைவிலேயே கூட்டணிக்கு எதிரான மனநிலைக்குப் போனார். இந்நிலையில் அங்கு ஆளுநரின் ஆட்சி அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணையோடு மெஹ் பூபா, ஆட்சியமைக்க முயன்றதை அறிந்த பா.ஜ.க., காஷ்மீர் சட்டசபையைக் கலைத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
இந்தியாவில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு, அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு மற்றும் 35 ஏ-வை நீக்கி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், மாநில அந்தஸ்தையும் பறித்து ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும்,லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது. இதற்கு அங்குள்ள மாநிலக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என யூகித்து முன்கூட்டியே காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி இதர அரசியல் கட்சித் தலைவர்கள், போராட்டக் குழு தலைவர்களை வீட்டிலேயே சிறைவைத்ததோடு, கூடுதலாக வழக்கத்தைவிட 50,000 ராணுவ வீரர்களையும் ஜம்மு-காஷ்மீரில் நிறுத்தியது.
ஆண்டுக்கணக்கில் நீண்ட துயரம்!
துணைநிலை ஆளுநரே மாநில நிர்வாகத்தை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கவனித்துவந்தார். மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக மாநில மக்கள் போராட்டம் எதிலும் ஈடுபடக்கூடாதென முடிவுசெய்த மத்திய அரசு, ஓராண்டுக்கும் மேல் அங்குள்ள தலைவர்களை சிறைவைத்தது. இணையதள தொடர்பு துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலைத் தவிர்த்து பெரிய அரசியல் நடவடிக்கைகள் எதுவும் அங்கு நடைபெறவில்லை.
காஷ்மீரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. மத்திய அரசின் எதேச்சதிகாரத்தை எதிர்கொள்வதற்காகவும் மாற்றுவதற்காக வும் ஆறு முக்கியக் கட்சிகள் இணைந்து குப்கர் பிரகடனத்துக் கான மக்கள் கூட்டணி என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.
மோடியின் அழைப்புv இந்நிலையில் ஜூன் 24-ஆம் தேதி, காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக மோடி ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தார். அதற்கு மோடி தேர்ந் தெடுத்த நாள் முக்கியமானது. இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தபோதே, அதற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடாதென, பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஜனசங்க நிறுவனர் சியாமபிரசாத் முகர்ஜி போராடினார். இதனால் அவர் 1953-ல் சிறையில் மரணமடைந்தார். அவர் மரண மடைந்த தினத்திலே இந்த ஆலோ சனைக்கூட்டம் நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய கட்சித் தலைவர்கள் அனை வருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. குப்கர் மக்கள் கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் தங்களுக்குள் விவாதித்து இக்கூட்டத்தில் பங்கேற்ப தென முடிவுசெய்தனர். இவர்களுடன் கம்யூனிஸ்ட் தலைவரான முகம்மது யூசுப் தாரிகாமி, காங்கிரஸின் குலாம் நபி ஆசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சியான காங்கிரஸ், காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டுமெனவும், மாநில அந்தஸ்து வழங்கிய பின்பே தேர்தல் நடத்தவேண்டுமெனவும் கோரிக்கை வைத்தது.
பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் காஷ்மீரைச் சேர்ந்த 14 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். காஷ்மீருக்கு தேர்தல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
அப்போது மோடியின் தரப்பில், “"ஜனநாயகத்துக்கு முன்னுரிமை தர முடிவுசெய்யப்பட்டது. தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால்தான் தேர்தலை நடத்தமுடியும். காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் தொடரும்''’என வலியுறுத்த, காஷ்மீர் அரசியல் தலைவர்கள் தரப்பிலோ, “"இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 2026-க்குப் பின்பே தொகுதி மறுவரையறை என முடிவுசெய்யப்பட்டுள்ளது. அப்போது காஷ்மீருக்கு தொகுதி மறுவரையறை பற்றி முடிவுசெய்யலாம்''’என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பொதுவாக ஜம்மு- காஷ்மீர் இரண்டு பகுதிகளிலுமே முஸ்லிம்கள் அதிகம்தான். குறிப்பாக ஜம்முவில் முஸ்லீம்கள் அதிகம். காஷ்மீரின் அரசியல் உறைநிலையை மாற்ற தேர்தல் நடத்தும்போது மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்கும். அப்போது இயல்பாகவே முஸ்லீம்கள் அதிகமுள்ள ஜம்முவில் படுதோல்வியைச் சந்தித்துவிடக்கூடாதென எண்ணும் பா.ஜ.க. தரப்பு, தொகுதி மறுவரையறை என்னும் பெயரில் முஸ்லீம்கள் பெருவாரியாக வராதவாறு தொகுதிகளைப் பிரிக்கத் திட்டமிடுவதாகச் குப்கர் கூட்டணி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சந்தேகப்படுவதுடன் இதற்கு எதிர்ப்பும் தெரிவிக் கின்றன.
காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரப்படும். ஆனால் பொருத்தமான தருணத்தில்தான் தரப்படும் என்கிறார் மோடி. அந்த பொருத்தமான தருணம் என்ன என்பது பா.ஜ. தலைவர்களுக்கே வெளிச்சம்.
ஒருவேளை காஷ்மீரில் தேர்தல் நடந்தாலும் தொகுதிகள் 107-லிருந்து 114 ஆக அதிகரிக்கப்பட்டு, தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு நடக்குமெனத் தெரிகிறது. இன்னொரு பக்கத்தில் காஷ்மீரையும் ஜம்முவையும் யூனியன் பிரதேசங்களாகவே வைத்திருந்து இரு பகுதிகளுக்கும் நியமன எம்.எல்.ஏ.க்கள் 12 பேரை நியமிக்க வகைசெய்தால், துணைநிலை ஆளுநர் தயவுடன் அதனை முழுக்க தம்வசம் வைத்துக்கொள்ளலாம் என பா.ஜ.க.வுக்கு ஒரு திட்டமிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தீவிரவாதம்
பெல்லட் தாக்குதல், தொடர் ஊரடங்குகள், இணைய தள சேவை துண்டிப்பு, தலைவர்களை சிறைப்படுத்துதல், பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் நடமாடக்கூட முடியாதபடி கெடுபிடி களை அதிகரித்தல் என ஆண்டுக்கணக்கில் முனைந்தும் காஷ்மீர் பிரச்சனைக்கு காங்கிரஸ், பா.ஜ.க. அரசுகள் நிலையான, ஆக்கபூர்வமான தீர்வைக் காணமுடியவில்லை.
இந்நிலையில் ஜூன் 27 அன்று ஜம்மு விமான தளத்தின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் முயற்சி நடந்தது இந்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மறுநாள் காலை மீண்டுமொரு முறை ட்ரோன் தாக்குதலுக்கு முயன்ற நிலையில் இந்திய ராணுவம் உஷாராக இருந்ததால் தாக்குதல் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து ட்ரோன்களின் தாக்குதல் களைத் தடுக்க 10 ஆன்டி ட்ரோன் அமைப்புகளை வாங்க இந்தியா முடிவெடுத் துள்ளது. ட்ரோன்கள் அனுமதிக்கப்படாத பகுதிகளில் நுழையும் ட்ரோன்களை கண்டறிந்து எச்சரிக்கை செய்யவல்லவை இந்தக் கருவிகள்.
மேலும், இந்தியப் படைகளுக்கும், ட்ரோன்களால் தாக்குதல் நடத்தப்பட்டால் அவற்றை அடையாளம் கண்டு தடுக்கவும் அழிக்கவும் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
காஷ்மீர் பகுதியில், வழக்கமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளும், காஷ்மீர் சுதந்திரப் போராளிகளுமே இந்திய அரசுக்குத் தலைவலியாக இருந்துவந்தனர். தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படை வெளியேறியுள்ள நிலையில், ஆப்கானில் தலிபான் அமைப்பு வலிமை பெற்று வருகிறது. காஷ்மீர் போராளிகளை தலிபான் நெருக்கமானவர்களாக கருதும் பட்சத்தில், தலிபான் தரப்பிலிருந்தும் புதிய தொந்தரவு கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவிரவும், லடாக் பகுதியில் எல்லை தொடர்பான சீண்டல்களில் ஈடுபட்டு வரும் சீனா புதிய இடைஞ்சல்களை ஏற்படுத்தி வருகிறது. காஷ்மீரின் உள்ளூர் மக்களுடன் இணக்கத்தைப் பேணாத இந்தியாவுக்கு, சீன காஷ்மீர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைகளைப் பாதுகாப்பதும், தாக்குதல் களை எதிர்கொள்வதும் இனிவரும் காலங்களில் சிரமமான ஒன்றாகத்தான் இருக்கப்போகிறது. என்கிறார்கள் கள நிலவரம் அறிந்தவர்கள்.
-சூர்யன்