சண்டிகர் விமான நிலையத்தில், பொறி பறக்க கங்கணாவுக்கு விழுந்த அறையின் சத்தம் சண்டிகரைத் தாண்டி இந்தியா முழுக்க எதிரொலித்திருக்கிறது.
நடந்துமுடிந்த மக்களவைத் தொகுதியில் இமாச்சலப்பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் நடிகை கங்கணா ரணவத். இவர் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை விடவும் 74,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
இந்நிலையில் எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்வதற்காக ஜூன் 6-ஆம் தேதி மாலை சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்தார் கங்கணா. சண்டிகர் விமான நிலைய பாதுகாப்புப் படையில் இடம்பெற்றிருந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர் பாதுகாப்பு நிமித்தம் சோதனைகள் மேற்கொள்ள வந்தார். அப்போது பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் குறித்து குல்விந்தரிடம், கங்கணா ஏதோ கருத்து தெரிவிக்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விவசாயிகள் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது, வயதில் முதிய ஒரு பெண்ணும் வந்து விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டார். அந்த முதிய பெண்மணி ஷாஹீன்பாக்கில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டப் போராட்டத்தில் பங்குபெற்றவர். அப்போது சர்வதேச பத்திரிகையான டைம் அந்தப் பெண்மணியை இந்தியாவின் மிகவும் ஆற்றல்மிக்க பெண்மணி எனப் பாராட்டியிருந்தது. அத்தகைய விவசாயிகள் போராட்டத்தின்போது தனது எக்ஸ் பக்கத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கங்கணா, பெண்கள் பலரும் 100 ரூபாய்க்காக அழைத்துவந்து போராட்ட களத்தில் உட்கார வைக்கப்பட்டிருப்பதாக போராட்டக்காரர்களை இழிவுபடுத்தி பதிவிட்டிருந்தார். கங்கணாவின் அந்த பழைய எக்ஸ் தள பதிவு தொடர்பாக குல்விந்தர் வாதிட்டதாகத் தெரிகிறது. வாதம் சூடுபிடித்த நிலையில் குல்விந்தர், கங்கணாவின் கன்னத்தில் பளாரென அறைவிட்டார்.
இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் தனித்தனியே பிரிக்கப்பட்டனர். அங்கிருந்து கங்கணா கிளம்பிச்சென்ற நிலையில், தில்லியிலிருந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கங்கணா, “"சண்டிகர் சம்பவம் தொடர்பாக பலரும் என்னை நலம் விசாரிக்கின்றனர். நான் நலமாக இருக்கிறேன். சோதனையின்போது விமானநிலைய காவலரால் நான் தாக்கப்பட்டேன். அடித்ததற்குக் காரணமாக விவசாயிகள் போராட்டத்தைத் தான் ஆதரிப்பதாகத் தெரிவித்தார். பஞ்சாப்பில் வளர்ந்துவரும் பயங்கரவாதம், வன்முறை குறித்தே நான் கவலைப்படுகிறேன். அதை நாம் எப்படி சமாளிக்கப்போகிறோம்'’என்று மீண்டும் ஒருமுறை பஞ்சாப் விவசாயிகளை தீவிரவாதிகளாகக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது கங்கணா பாராளுமன்ற உறுப்பினர் என்பதால், புகார் மத்திய உள்துறை அமைச்சகம் வரை சென்றுள்ளது. சுடச்சுட தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா, “கங்கணாவைத் தாக்கிய பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் குல்விந்தர் கவுர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், அவர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட குல்விந்தர், பஞ்சாப் மாநிலத்தின் கபூர்தலா மாவட்டம், மகிவால் கிராமத்தைச் சேர்ந்தவர்.
நடந்தது குறித்து குல்விந்தர் கவுர் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார். அதில், "100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் அங்கே போராட்டக் களத்தில் அமர்ந்திருப்பதாகக் பதிவிட்டார் கங்கணா. 100 ரூபாய்க்காக இவர் போராட்டக் களத்தில் அமர்வாரா? அப்படி அவர் அறிக்கை விடும்போது, எனது தாயார் போராட்டக் களத்தில் அமர்ந்திருந்தார்'’என உணர்ச்சிகரமாகக் குறிப்பிட்டிருந்தார்.
குல்விந்தர் கவுருக்கு ஆதரவாக கிஸôன் மஸ்தூர் மோர்ச்சா ஒருங்கிணைப்பாளர் சர்வான் பந்தர் வெளியிட்டிருக்கும் வீடியோ செய்தியில், “"நாங்கள் வன்முறையை நியாயப்படுத்தவில்லை, ஆனால் உண்மைகளை அறிய கங்கணாவுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்படவேண்டும். விமான நிலையத்தில் என்ன நடந்ததென்ற முழுமையான வீடியோ வெளியிடவேண்டும். கங்கணா போராடும் விவசாயிகளுக்கு எதிராகப் பேசுவது இது முதல்முறையல்ல'’எனத் தெரிவித்திருக்கிறார்.
“மேலும் "நான் குல்விந்தர் கவுரின் சகோதரனிடமும் பேசினேன். தற்போது அவர்கள் குல்விந்தர் கவுரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதைக்கூட அவனுக்குத் தெரிவிக்கவில்லை. ஏதாவது விரும்பத்தகாத நிகழ்வு நடந்தால், நாங்கள் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்'’என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கங்கணா ரவுத்துக்கு சர்ச்சைகள் புதிதல்ல.… பலமுறை சர்ச்சைக் கருத்துகளைப் பேசியிருக்கிறார். 2021-ல் டைம் நவ் மாநாட்டின்போது, மோடியைப் புகழ்வதற்காக, "1947-ல் பெற்ற சுதந்திரம் வெறுமனே இரந்து பெற்றது மட்டுமே...… உண்மையான சுதந்திரம் 2014-ல்தான் வந்தது'’என்று பேசி இந்திய சுதந்திரத்தையும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளையும் அவமானப்படுத்தியிருந்தார்.
தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில், “"யாரோ ஒருவர் மீதான தீவிரவாதத் தாக்குதலை நீங்கள் கொண்டாடும்போது… இது உங்களுக்கோ, உங்கள் குழந்தைகளுக்கோ நிகழலாம். இதுபோன்றதொரு நாள் உங்களுக்கும் ஒருநாள் வரலாம்'’என தன்மீதான தாக்குதலை எதிர்க்காத பாலிவுட்டைக் குறிப்பிட்டு பதிவுசெய்திருக்கிறார்.
குல்விந்தர் கவுர், தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இன்னும் எத்தனை சிக்கல்களைத் தாண்டி வரவேண்டுமோ?