அரசியல் கட்சிகளின் முக்கிய பார்வையாக மாறியிருக்கிறது கொங்கு மண்டலம். சேலம் முதல் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி என இந்த 9 மாவட்டங்களில் சுமார் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. மொத்த சட்டமன்ற தொகுதிகளில் நான்கில் ஒரு மடங்கு என்பதும் மறைந்த எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய காலத்திலிருந்து அ.தி.மு.க.வுக்கு வலிமையான பகுதியாகவும் இந்த மேற்கு மண்டலம் உள்ளது. தற்போதைய ஆட்சியான அ.தி.மு.க. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்ததற்குக் காரணம் இந்த மேற்கு மண்டலத்தில் வெற்றி பெற்ற கூடுதல் தொகுதிகள்தான்.
பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தொடர்ந்து மாறி மாறி தேர்தல் பரப்புரையை இந்த பகுதிகளில் செய்துவருகிறது. சென்ற டிசம்பர் மாதத்தில் மட்டும் தி.மு.க. சார்பில் மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஒரு முறையும் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இரண்டு முறையும்... அ.தி.மு.கவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருமுறையும் ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார்கள். இந்த வரிசையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமலஹாசனும் "சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் 11, 12 ஆகிய தேதிகளில் ஈரோடு, 13-ந் தேதி திருப்பூர் என மாவட்டத்தில் உள்ள பல ஊர்களுக் கும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார்.
பெரிய கட்சிகளில் பேக்கேஜ் அடிப்படையில் மக்களைக் கொண்டுவருவது வழக்கமாகி விட்டது. ஆனால் கமல் பேசும் கூட்டங்களில் மக்கள் தாமாகவே வருவதை உறுதிசெய்ய முடிந்தது. கமல் பேசுவதைக் கேட்பதைவிட அவரை பார்க்கும் ஆவல் மக்களிடம் இருப்பதை காண முடிந்தது. அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியான கோபி செட்டிபாளையத்தில் பேசிய கமல் ""இந்த ஊர் எனக்கு விருப்பமான ஊர். இங்கு வாழ்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி "பாத காணிக்கை' என்ற படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார் அதேபோல் அவரது "நான் ஏன் பிறந்தேன்' என்ற படத்தில் நான் துணை இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. "மனித மலத்தை மனிதனே அள்ளக்கூடாது' என போராடிய தியாகி லட்சுமண ஐயர் வாழ்ந்த ஊர் இது என ஊர் மீதான அன்பை வெளிப்படுத்தியதோடு, இங்கு வந்துவிட்டு கல்வித் துறையை பேசாமல் போக முடியாது'' என்று நடப்பு அரசியலுக்கு வந்தார்.
""தமிழகத்தில் கல்வியை உயர்த்துவதாக கூறி கல்வித்துறைக்கு மட்டும் 34 ஆயிரம் கோடி ஒதுக்கி செலவிட்டதாக இந்த ஆட்சியாளர்கள் கூறுகிறார் கள். எவ்வளவு 34 ஆயிரம் கோடி இங்குள்ள ஏதாவது ஒரு அரசு பள்ளிக்கு சென்று பார்த்தால் அப்படி எந்த மேம்பாடு நடைபெற்றதாக எதுவுமே இல்லை. அப்படியென்றால் அந்த 34 ஆயிரம் கோடி எங்கே போனது?'' என அமைச்சர் செங்கோட்டையனுக்கு கேள்வி வைத்தார்.
கோபியைத் தொடர்ந்து கவுந்தப்பாடி, அந்தியூர், பவானி என ஒவ்வொரு ஊர்களிலும் திறந்தவெளி ஜீப்பில் பிரச்சாரம் செய்த கமல், மக்கள் கூட்டம் கூடுதலாக இருந்த சித்தோட்டில் மறைந்த எம்.ஜி.ஆரைப் பற்றியும் டச்சிங்காக பேசினார். ""எம்.ஜி.ஆரைப் பற்றி நான் பேசக்கூடாது என்றும் எனக்கு என்ன தகுதி என்றும் கேட்கிறார்கள். நான் அவரைப் பற்றி பேசுவதற்கு முழு தகுதி பெற்றவன். அவர் மடியில் தவழ்ந்தவன். எம்.ஜி.ஆரை அதிகம் நேசித்தவன். அவரை பார்க்காத அவரோடு பழகாத நபர்கள்தான் இப்போது எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட பயனை அனுபவித்து வருகிறார்கள். நான் எம்.ஜி.ஆரை பேசிய பிறகுதான் இப்போது அவர்களும் பேசுகிறார்கள். நான் சாடுவது தனிப்பட்ட மனிதர்களை அல்ல ஊழலைத்தான். நான் எந்த வாக்குறுதிகளையும் அள்ளி வீச மாட்டேன் காரணம் அவை எல்லாம் பிறகு நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள்.
இளைஞர்கள், பெண்கள், முதல் தலைமுறை வாக்காளர்களே நீங்கள் எல்லாம் சாதி பார்த்து ஓட்டுப் போடாதீர்கள். சாதிக்கும் நபர்களை பார்த்து ஒட்டுப் போடுங்க அப்படி நீங்கள் செய்தால்தான் தமிழகம் சீரமைக்கப்படும்'' என இளைஞர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பேசினார்.
12-ந் தேதி ஈரோடு பகுதி தொழில் முனைவோர், விவசாயிகள் அமைப்பு பிரதிநிதிகள் என பலரையும் நேரில் வரவழைத்து தொழில் துறை, உற்பத்தி, வருமானத்தில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள சரிவுகளை அவர்களோடு ஆலோசனை நடத்தினார். பிறகு மீண்டும் காங்கேயம், தாராபுரம், உடுமலைபேட்டை, மடத்துக்குளம் என அவரது பயணம் தொடர்ந்தது.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசனின் கொங்கு மண்டல தேர்தல் பரப்புரையும் அதற்கு மக்களின் வரவேற்பும், அ.தி.மு.க. ஓட்டு வங்கியில் உள்ள வைப்புத் தொகையை சிதறவைக்கும் நிலமையை ஏற்படுத்தியுள்ளதாக அ.தி.மு.க. சீனியர்களே கூறுகிறார்கள்.
-ஜீவாதங்கவேல்