ராசிபுரம் பாராளுமன்றத் தொகுதியாக இருந்து, பிறகு 2007-ல் தொகுதி மறு சீரமைப்பிற்கு பிறகு கள்ளக்குறிச்சியான தொகுதி இது.
இந்த தொகுதி கள்ளக்குறிச்சி, ரிஷி வந்தியம், சங்கராபுரம், ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.
இங்கு ஆளும் கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் கௌதம சிகாமணி, தற்போது சிட்டிங் எம்.பி.யாக உள்ளார். இவரே மீண்டும் போட்டியிடுவதற்கு சீட்டுக்கு மோதிவருகிறார். இவர் மீது வழக்கு இருப்பதால், கட்சித் தலைமை இந்தமுறை இவருக்கு சீட்டு வழங்குமா? என்பது கேள்விக்குறி. அடுத்து, முன்னாள் மாவட்ட செயலாளராகவும், எம்.எல்.ஏ.வாகவும் வலம் வந்த அங்கையற்கண்ணியும் சீட் போட்டியில் இருக்கிறார். அதே போல் கடந்த 2014ல் இங்கு போட்டியிட்டு அ.தி.மு.க.விடம் தோல்வியடைந் தவரான மொழிப் போர் தியாகி தியாகதுருகம் பொன்.ராமகிருஷ்ண னும், அவரது மகனான கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிமாறனும் இந்த முறையாவது சீட்டை, இருவரில் ஒருவர் பெற்றுவிடவேண்டும் என இப்போதே முட்டிமோதுகின்றனர். மேலும், மா.செ.க்களாக உள்ள வசந்தன் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோரது உறவினர்களில் சிலரும் சீட்டுக்கு அடிபோட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதி உதயமான பிறகு 2009, 2014, 2019 ஆகிய மூன்று தேர்தல்களிலும் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே தி.மு.க. சார்பில் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பளித்துள்ளது. அதனால் இந்தமுறை சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ளவர் களுக்கே கட்சித் தலைமை சீட்டைத் தரவேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்தார்களாம். அந்த வகையில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள சிவலிங்கம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக் கிறார். அவரைப் போலவே அயோத்தியாபட்டினம் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் டாக்டர் செழியன் ஆகியோரும் சீட்டுக் கனவில் இருக்கிறார்கள்.
அ.தி.மு.க.விலோ, சமீபத்தில் கள்ளக் குறிச்சியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் மா.செ.வான குமர குரு. அப்போது கட்சி பொறுப்பாளர்களிடம் கள்ளக்குறிச்சி தொகுதியில் எம்.பி. தேர்தலில் போட்டி யிட விருப்பமுள்ளவர்கள் கட்சி தலைமையிடம் விண்ணப்பம் செய்யுங்கள் என்று அவர் கூறியுள்ளார். அப்போது பெரும்பாலான பொறுப்பாளர்கள் எங்களுக்கு எம்.பி.யாக வேண்டும் என்ற ஆசை இல்லை. மாவட்ட செயலாளரான தங்களுக்கே அந்தத் தகுதி உள்ளது எனவே நீங்கள் போட்டியிடலாம். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் கல்வி நிறுவனம் நடத்தும் உங்கள் மகன் நமச்சிவாயத்தை நிறுத்துங்கள். அனைவரும் ஒன்றுசேர்ந்து வெற்றி பெற வைக்கிறோம் என கூறினார்களாம். இதில் கட்சித் தலைமை "10 ’சி'வரை செலவு செய்யத் தயா ராக இருப்பவர்கள் சீட்டுக்கேட்டு வரலாம் என்று தெரிவித்துள்ளதால், பலரும் பின்வாங்குகிறார்கள்.
இவர்களில், 2014-ல் போட்டியிட்டு வெற்றிபெற்ற காமராஜ், கட்சி செலவு செய்தால் நிற்கலாம் என்ற மன நிலையில் இருக்கிறாராம். இவரைப் போலவே கட்சியின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சீனிவாசன், முன்னாள் கூட்டு றவு சர்க்கரை ஆலைகளின் தலைவர் ராஜசேகர் போன்றவர்களும் எதிர்பாராத நிலையில் ஜாக்பாட் அடிக்குமா? என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் களாம்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த டாக்டர் குமரேச னும், வழக்கறிஞர் அணியில் இருக்கும் தகுதியில் சீட்டுக்கு மோதுகிறார். இவர்களைத் தவிர்த்து எடப்பாடியின் நட்பு வட்டத்தில் இருக்கும் முன்னாள் பேரவைச் செயலாளரும் தற்போது சேலம் புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ள பாசறை இளங்கோவன் நிற்கத் தகுதியானவர் என்று சிலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கடந்த முறை 9 தொகுதிகளை பெற்று எட்டு தொகுதியில் வெற்றி பெற்றது. தற்போது கூடுதலாக 5 தொகுதிகளைக் கேட்டு முட்டி மோதுகிறது. அது தி.மு.க.விடம் கொடுத்திருக்கும் பட்டியலில் கள்ளக்குறிச்சியும் விருப்பத் தொகுதியாக இருக்கிறதாம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ள சின்ன சேலம் ஜெய்கணேஷ், சீட்டை வாங்கும் ஆர்வத்தில் இருக்கிறாராம். இவ ரது மனைவி லாவண்யா சின்னசேலம் பேரூராட்சித் தலைவராக உள்ளார். இந்த ஜெய்கணேஷ் கட்சி அறிவிக்கும் அனைத்து போராட்டங்களையும் வெற்றிகரமாக நடத்தியவராம். மக்களிடமும் பிரபலமானவர். இளைஞர்களை விரும்பும் ராகுல் காந்தி, இவரை விரும்புவார் என்கிறார்கள். அதேபோல் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக உள்ள அர்த்தநாரியும் சீட்டுக் கனவில் இருக்கிறாராம். காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் இருவரில் ஒருவர் வேட்பாளராக நிற்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு என்கிறார்கள் கதர் சட்டையினர்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பொதுத்தொகுதியான கள்ளக்குறிச்சியைக் கேட்கிறார்கள். இந்தத் தரப்பில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள உடையார் சமூகத்தை சேர்ந்த வேல்.பழனியம்மாள் தொகுதியைக் குறிவைத்திருக்கிறாராம். கடந்த எம்.பி. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஐ.ஜே.கே. கட்சித் தலைவர் பாரிவேந்தர் பச்சமுத்துவுக்கும் கள்ளக் குறிச்சி தொகுதி மீது அளப்பரிய ஆசை என் கிறார்கள். கடந்த முறையே அவர் கள்ளக்குறிச்சி யைத்தான் கேட்டார். ஆனால் தி.மு.க. தலைமை, அவரை பெரம்பலூரில் நிற்க வைத்தது. இந்தமுறை தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ள பாரிவேந்தர் பி.ஜே.பி., அ.தி.மு.க. ஆதரவோடு கள்ளக்குறிச்சியில் களமிறங்க நினைக்கிறார். அல்லது தன் மகன் ரவி பச்சமுத்துவை யாவது நிறுத்தவேண்டும் என்று ஆசைப் படுகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. மா.செ.வான குமரகுரு, உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலைப் பகுதியில் திருப்பதி பெருமாள் கோவில் போல, ஒரு கோவிலைக் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்கு பாரிவேந்தர் 5 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளதாகக் கூறு கின்றனர். இதன்மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து இந்தமுறை கள்ளக்குறிச்சி தொகுதியை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறாராம் பாரிவேந்தர்.
இவரைப் போலவே தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கும் கள்ளக்குறிச்சி மீது அதிதீவிர ஆசை இருக்கிறது. 2009-ல் அ.தி. மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் பிரேம லதாவின் சகோதரர் சுதீஷ் போட்டியிட்டு மூன் றாவது இடத்தைப் பிடித்தார். அந்த அடிப்படை யில் இந்தமுறை கள்ளக்குறிச்சியில் பிரேமலதாவே நேரடியாக களத்தில் இறங்க விரும்புகிறாராம். அ.தி.மு.க., பி.ஜே.பி. இரு கட்சிகளில் எந்த கட்சி யுடன் கூட்டணி சேர்ந்தாலும் கள்ளக்குறிச்சி அல்லது கடலூர் ஆகிய இரண்டு தொகுதி களில் ஒன்றில் பிரேமலதா நிச்சயம் போட்டியிடும் மனநிலையில் உள்ளதாக அவரது கட்சியினர் கூறுகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே, இப்படி அனைத்துக் கட்சியிலும் கள்ளக்குறிச்சியை குறிவைத்து ரேஸ் நடந்துகொண்டி ருக்கிறது. அவர்களில் யார், யாருக்கு சீட் கிடைக்கும். அப்படி சீட் கிடைப் பவர்களில் யார் கரையேறுவார்? இந்தக் கேள்விதான் இப்போது பெரிதாக எழுந்திருக்கிறது.