வழக்கறிஞர்கள் உரத்த குரலுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்திய போராட்டத்தின் நோக்கம், தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்யக்கூடாது என்பதுதான்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்திருப்பதற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும்படி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 237 பேர், கொலீஜியத்துக்குக் கடிதம் எழுதியுள்ள னர். கடந்த ஜனவரியில், தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவரை, இப்படி அவசரகதியில் இடம் மாற்றிய தன் பின்னணியில் ஒன்றிய அரசின் அழுத்தம் இருப்பதாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
நீதிபதிகள் இட மாற்றத்தில் கொலீஜியத்தின் செயல்பாடுகள் மீதான விமர்சனங்கள் குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் அரி பரந்தாமனிடம் கேட்ட போது, "நீதித் துறை என்பது அரசியலமைப் போடு தொடர்பு டைய முக்கிய மான துறை. இத் துறையின் இட மாறுதல் களில், அரசு ஊழியர்களைப்போல் அல்லாமல் தனித்துவமான முறை பின்பற்றப்படுகிறது. நீதிபதிகளின் இடமாற்ற உத்தரவுகள், சுயேச்சை யான அமைப்பின் முடிவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கொலீஜியம் என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டு, அதன் பரிந்துரையின்பேரில் செயல்படுத்தப்படுகிறது.
நீதிபதிகள் இடமாற்றத்தில் கொலீஜியம் தான் முடிவெடுக்கிறது என்றாலும், சில இட மாறுதல் உத்தரவுகள், கொலீஜியத்தின் செயல்பாட்டில் ஒன்றிய அரசின் அழுத்தம் இருக்கிறதோ என்ற ஐயத்தை பொது மக்கள் மத்தியில் எழுப்புகிறது. இதுபோன்ற விமர்சனங்கள், 2014-ம் ஆண்டுக்குப்பின் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. உதாரணத்துக்கு, 2014-ம் ஆண்டில் குஜராத்தின் மூத்த நீதிபதியாக ஜெயந்த் படேல் இருந்தபோது, இஷ்ரத் ஜஹான் என்ற இளம்பெண்ணின் என்கவுண்டர் விவகாரத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இவ்வழக்கின் விசாரணையில், என்கவுண்டரில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு ஜெயந்த் படேல் உத்தர விட்டார். இத்தகைய சூழலில், கொலீஜியத்தின் பரிந்துரையின்பேரில், கர்நாடகாவிலுள்ள உயர்நீதிமன்றத்துக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அடுத்து, 2017-ம் ஆண்டில் ஜெயந்த் படேல், கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக இரண்டாம் நிலையில் இருந்த சூழலில், அங்கே தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.முகர்ஜி பணி ஓய்வுபெறும் சூழலில், தலைமை நீதிபதி அல்லது பொறுப்பு தலைமை நீதிபதியாக ஜெயந்த் படேல் வரவேண்டிய நிலையில், அவரை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மூன்றாம் நிலை நீதிபதியாக இடமாற்றம் செய்து கொலீஜியம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் மனமுடைந்த ஜெயந்த் படேல், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதேபோல 2019-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாகப் பணியாற்றிவந்த தஹில் ரமணியை, மேகாலயாவிலுள்ள உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்து கொலீஜியம் உத்தரவிட்டது. இந்தியாவிலுள்ள அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளிலும் அவர்தான் மூத்த நீதிபதியாக இருந்தார். அப்படிப்பட்டவரை, சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து, வெறும் 3 பேர் மட்டுமே நீதிபதிகளாக உள்ள மேகாலயாவுக்கு மாற்றியது நிறைய கேள்விகளை எழுப்பியது. தஹில் ரமணி மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியபோது, 2002-ம் ஆண்டு குஜராத் படுகொலைகளில், பில்கிஸ் பானு பாலியல் வன்புணர்வு வழக்கு விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2017-ம் ஆண்டில், அவ்வழக்கின் அப்பீல் விசாரணையில், ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை உறுதிப்படுத்தியதோடு, ஏற்கனவே விடுவிக்கப்பட்டவர்களுக்கும் தண்டனை அளித்துத் தீர்ப்பெழுதினார். இந்த தீர்ப்புக்குப் பழிவாங்கத்தான் இட மாறுதலோ என்ற விமர்சனம் எழுந்தது. அவரும் இட மாறுதலை ஏற்க மறுத்து பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்து, குஜராத் கலவரத்தின்போது பெஸ்ட் பேக்கரி எரிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி அபய் திப்சே, கொலீஜியத்தின் உத்தரவுப்படி அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதேபோல், குஜராத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி அகில் குரேஷியை, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இடமாறுதல் செய்வதற்குப் பதிலாக திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் உத்தரவிட்டது. இவரது தீர்ப்புகள் குறித்து ஆராய்ந்தால், 2010-ம் ஆண்டில், குஜராத்தில் சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில், அமித்ஷாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார். எனவே அவரது இட மாறுதல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது எழுந்துள்ள சர்ச்சையையும் பார்க்கிறேன்" என்றார்.
நீதிபதிகள் இடமாற்ற வரலாற்றைப் பார்த்தால், மத்திய அரசு எப்போதெல்லாம் பலம் பொருந்தியதாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் நீதித்துறை தாக்குதலுக்கு உள்ளாகிறது. அதிலும் கடந்த 7 ஆண்டுகளில், நீதிபதிகள் இட மாற்றத்தில் மிகப்பெரிய சர்ச்சைகள் எழுப்பப்படுகின்றன. தங்களுக்கு ஆகாத அதிகாரிகளைத் தண்ணியில்லாத காட்டுக்கு அனுப்புவதுபோல, ஒன்றிய அரசின் முக்கிய பிரமுகர்களுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகளை, மேகாலயா, திரிபுரா, அலகாபாத் எனத் தூக்கியடித்து, அவர்களைப் பழிவாங்குகிறார்களோ என்ற கேள்வியை கொலீஜியத்தின் பரிந்துரைகள் ஏற்படுத்து கின்றன. ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான நீதித்துறையில் அரசியல் தலையீடு அதிகரித்தால், அது மக்களாட்சித் தத்துவத்தையே சிதைத்து விடக்கூடும்.