மிழகத்தில் ரப்பர் தோட்டங்கள் உள்ள ஒரே மாவட்டம் கன்னியாகுமரி. இங்கு அரசு மற்றும் தனியார் தோட்டங்களில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பால் வடித்தல் மற்றும் களப்பணி வேலை செய்து வருகின்றனர். விஷப்பாம்புகள், விஷ ஜந்துகள் மற்றும் காட்டு மிருகங்களின் அச்சுறுத்தல்கள் மத்தியில் வேலை செய்யும் அரசு ரப்பர் தோட்டத் தொழி லாளர்கள் தங்களின் நிலையைக் கூறி கண்ணீர் வடிக்கின்றனர்.

rr

என்னதான் அவர்கள் பிரச்சினை?

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசிய, மணலோடை அரசு ரப்பர் தோட்ட பால் வடிக்கும் தொழிலாளி ஸ்டீபன், "20 ஆண்டுகளாக அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். இதுவரையிலும் நிரந்தரமான சம்பளம் இல்லை. அரசு சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் எங்கள் தொழிற்சங்கங்களை ஏமாற்றிவருகிறது. கடைநிலை ஊழியர்களைவிட குறைவான ஊதியம். தினம் 200, 250 ரூபாய் சம்பளத்துக்கு மலை மேடெல்லாம் ஏறி இறங்கி கஷ்டப்பட வேண்டியிருக்கு. மழைக்காலங்களில் 100 ரூபாய்கூட சம்பளம் கிடைக்காது. இந்த சம்பளத்தை வைத்து இந்த விலைவாசியில் எப்படி ஒரு குடும்பத்தை நடத்தமுடியும்? ரேசன் அரிசியால் உயிரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகளைக்கூட குழந்தை தொழிலாளராக்கும் நிலைக்கு அரசு எங்களை தள்ளிவிட்டுள்ளது.

அதிகாலை 4:30 மணிக்கு தோட்டத்துக் குள் சென்றால் மதியம் 1:00 மணிக்குதான் வெளியே வருவோம். இதில் விஷ ஜந்துகள் கடித்தாலோ, காட்டு மிருகங்களால் ஆபத்து ஏற்பட்டாலோ மருத்துவச் செலவுகளை நாங்கள்தான் பார்க்கவேண்டும். எல்லா தொழிலாளர்களும் கடனிலும் வறுமையிலும்தான் இருக்கிறார்கள். அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு கலைஞர் ஆட்சியில் கட்டித் தந்த குடியிருப்புகள் பராமரிப்பில்லாமல் முமுவதும் பெயர்ந்து இடிந்த நிலையில் இருப்பதால் அந்தக் குடியிருப்புகளில் இப்போது விஷப்பாம்புகளும் ஓநாய்களும்தான் வசிக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக குடியிருப்புகளில் தொழிலாளர்கள் ஒருவர்கூட இல்லாமல் 10 கி.மீ. தூரத்தில் வெளியிலிருந்துதான் வந்துசெல்கின்றனர். இந்த கொரோனா காலத்தில்கூட அரசு ரப்பர் தோட்டங்களில் நாங்கள் வேலைசெய்து அரசுக்கு வருவாயை ஈட்டிக்கொடுத்தோம். ஆனால் அரசு கொரோனா நிவாரணம்கூட எங்களுக்குத் தர வில்லை. இந்த சூழ்நிலையில் தி.மு.க. அரசு நிலைமையை புரிந்துகொண்டு எங்கள் வாழ்க்கை யில் விடியலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என்றார்.

Advertisment

run

குமரி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் சங்க சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் பொன்மனை வல்சகுமார், 5 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் இருந்த அரசு ரப்பர் தோட்டங்கள் இன்றைக்கு 3 ஆயிரம் ஹெக்டேராக சுருங்கிவிட்டது. ரப்பர் தோட்டத்தில் பராமரிப்பு பணி செய்யவோ, புதிய ரப்பர் கன்றுகள் நட்டு, அதைப் பாதுகாக்கவோ அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொள்ளாததால் அது செடி, கொடிகளுடன் வனமாக மாறி வனத்துறை யுடன் இணைந்துவிட்டது. காலவதியான ரப்பர் மரங்களை முறித்து புதிய ரப்பர் கன்றுகள் நடவு செய்தால் 7 ஆண்டுகளில் பால் உற்பத்தி செய்யலாம். ஆனால் அதிகாரிகளோ புதிய ரப்பர் கன்று நடவுசெய்யும் பணியை தொழிலாளர் களிடம் கொடுக்காமல் ஒப்பந்தக்காரர்களிடம் கொடுப்பதால் அந்த ரப்பர் கன்றுகள் எந்த பராமரிப்பும் இல்லாமல் அதற்கான உரங்களும் போடாமல் கன்றுகள் எல்லாம் பட்டுப்போகிறது.

இதனால் பால் உற்பத்தி குறைந்து பாதிப்பு தொழிலாளர்களுக்குதான். தற்போது தொழிலாளர்களுக்கு சராசரி ஒரு நாள் சம்பளம் 495 ஆக ஒப்பந்தம் இருக்கும் நிலையில் அதற்கு ஊழியர்கள் 6 கிலோ 300 கிராம் பாலும், 1 கிலோ 700 கிராம் ஒட்டுக்களையும் (உலர் ரப்பர்) கொடுக்க வேண்டும். அதிகாரிகளின் இயலாமையால் போதுமான பால் உற்பத்தி கிடைக்கவில்லை. மழைக்காலங்களில் தொழிலாளர்களின் நிலை இன்னும் பரிதாபமானது.

தொழிலாளர்களுக்கான மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பேசும் சம்பள ஒப்பந்தப் பேச்சுவார்த்தை கடந்த ஆட்சியில் 2016 டிசம்பரிலிருந்து 2019 வரை 36 மாதங்களில் 70 முறை தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அரசு உடன்படவில்லை. அந்த பேச்சுவார்த்தை இன்றுவரை அப்படியேதான் இருக்கிறது. ஆனால் தனியார் தோட்ட நிறுவனங்களுடன் இரண்டு சம்பள ஒப்பந்தங்கள் பேசி முடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் அப்போதைய ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் நிகர்ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் கொடுத்த தவறான தகவலின்படி அரசு 21-1-2019-ல் அரசாணை எண் 9-ஐ அரசு வெளியிடுகிறது. அதில் சம்பள உயர்வு தவிர இதர விசயங்கள், மழைக்கால அலவன்ஸ் பால் மற்றும் ஒட்டுக்கறைக் காக ஓவர் கிலோவுக்கு 10 மற்றும் 15 பைசா என சில்லரை பைசாவை 5 ஆண்டுக்கானது என நிர்ணயித்து தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை செய்யாமல் வெளியிடுகிறார்கள். உடனே இதை ரத்துசெய்யக் கேட்டும் சம்பள உயர்வு பேச்சு வார்த்தையை பேசிமுடிக்க கேட்டும், அப்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரிடையாக மனு கொடுத்தோம். ஆட்சி முடியும்வரை எந்தப் பதிலும் இல்லை.

rr

கடந்த தேர்தல் நேரத்தில் தி.மு.க. அரசு வந்தால் நம் கோரிக்கை நிறைவேறும் என்று தொழிலாளர்கள் நம்பிக்கையோடு இருந்தனர். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில்கூட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் மனு கொடுத்தோம். இந்தநிலையில் மந்திரியாக இருக்கும் மனோ தங்கராஜ் தொகுதியில்தான் அரசு ரப்பர் தோட்டம் முக்கால்வாசி வருகிறது. கடந்த 20-ஆம் தேதி நாகர்கோவிலில் அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் தின்ஹார்குமாரை தொழிற்சங்கத்தினர் சந்தித்தபோது அவர் கடந்த ஆட்சியில் வெளியிட்ட அரசாணை எண் 9-ஐ காட்டி 5 ஆண்டுக்கான பழைய ஒப்பந்தம் இன்னும் இருப்பதாகக் கூறினார். அது வேறு இது வேறு என நாங்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர் கேட்கவில்லை இதனால் தொழிற்சங்கத்தினர் எல்லோரும் வெளியே வந்துவிட்டோம்.

ஆட்சிதான் மாறியிருக்கிறதே தவிர அதிகாரிகள் யாரும் இன்னும் மாறவில்லை. பழைய மனநிலையில்தான் இருக்கிறார்கள். ஆசியாவில் உற்பத்தி செய்யப்படுகிற ரப்பர் பாலில் தரமான பால் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் உற்பத்தி செய்யப்படு கிறது. எனவே அந்தப் பெருமையைக் காப்பாற்றும் விதமாகவும் அதிகாரிகளால் அழிந்துபோகும் ரப்பர் தோட்டங்களை பாதுகாக்கவும் அரசு ரப்பர் தோட்டத்தில் பணிபுரியும் சுமார் 1500 தொழிலாளர்களின் குடும்பச் சூழ்நிலைகளை கருத்தில்கொண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

சமீபத்தில் ஓய்வுபெற்ற அரசு ரப்பர் தோட்ட பால் வடிப்பு மேற்பார்வை யாளரும் தோட்டத் தொழிலாளர் சங்க சி.ஐ.டி.யு. உறுப்பினருமான வேலப்பன் கூறும்போது, "தோட்டத்தில் களப்பணிகள் சரியாக நடக்கவில்லை என்றால் பால் உற்பத்தி இருக்கவே இருக்காது. அரசு ரப்பர் கழகத்தின் நிர்வாக இயக்குனராக அன்வர்தீன் இருக்கும்போதுதான் ரப்பர் பால் உற்பத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். அவர் தினமும் கரடுமுரடான பாதைகளில் ஏறியிறங்கி ஃபீல்டுக்கு வந்து தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர் களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பார். ரப்பர் பால் உற்பத்தியைத் தடுக்கிற விதமாக மரங்களைச் சுற்றி நிற்கும் செடி, கொடி அகற்றுவதிலும் மரங்களை பராமரிப்பதிலும் புதிய மரக்கன்றுகளை நட்டு வேலி போட்டு காலம் தவறாமல் உரங்கள் போடுவதிலும் தனி கவனம் செலுத்தி தொழிலாளர்களிடம் வேலை வாங்கி தனியார் தோட்டத்துக்கு இணையாக வைத் திருந்தார். இதனால் அப்போது தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்ததோடு அவர்கள் சளைக்காமல் வேலை செய்தனர்.

rr

பிறகுவந்த அதிகாரிகளில் ஒருவர்கூட ஃபீல்டுக்கு வருவதில்லை தொழிலாளர்களைச் சந்தித்து குறைகள் கேட்டதும் இல்லை. ஆனால் ஃபீல்டுக்கு வந்ததுபோல் கணக்கு மட்டும் காட்டிக்கொள்வார்கள். பால் தரத்தைப் பற்றியும் ஆய்வு செய்வதில்லை. ஜீப்பில் இருந்தபடியே ரப்பர் தோட்டங்களை பார்வையிட்டுச் சென்றுவிடுவார்கள். இந்த நிலையில்தான் கடந்த 14 -ஆம் தேதி மணலோடை அரசு ரப்பர் தோட்டத்தை ஆய்வுசெய்ய வந்தார் மனோ தங்கராஜ் அன்றைக்கு சரஸ்வதி பூஜை விடுமுறை என்பதால் ஒரு தொழிலாளர்கூட அங்கு இல்லை. தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைக்கவில்லை. அதிகாரிகளை மட்டும் உடனழைத்து வந்து அவர்கள் சொல்வதை மட்டும் கேட்டுச்சென்றார்.

தொழிலாளர்களையும் தொழிற்சங்கத் தினரையும் சந்தித்தால்தானே பிரச்சினைகள் தெரியும். மந்திரி தனியாக வந்து பார்வையிட்டு செல்வதால் என்ன பயன்? கேரளாவில் அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டு செட் சீருடைகளும் 4 டவல்களும், இரண்டு செட் ஷூவும் கொடுக்கிறது அரசு. இங்கு எதுவுமே வழங்கப்படவில்லை'' என்றார்.

நாகர்கோவில் அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் தின்ஹர்குமாரிடம் நாம் கேட்டபோது, "கொரோனா தொடங்கிய காலகட்டத்தில்தான் இங்கு வந்தேன். அதனால் தொழிலாளர்களை நேரில் சந்திக்க முடியவில்லை. சமீபத்தில் தொழிற்சங்கத்தினரை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தேன். அதை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல இருக்கிறேன்'' என்றார்.

-மணிகண்டன்