2014-ல் உச்சநீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனா வில் கூடிய லட்சக்கணக்கான கூட்டத்தால் மத்திய அரசே இறங்கிவந்ததும், நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனு மதித்ததும் வரலாறு. இந்நிலையில், கொரோனாவால் ஜல்லிக்கட்டு தடைபடுமோ என்ற கேள்விக்குறி எழுந்த நிலையில், கொரோனா விதி முறைகளுடன் கண்டிப்பாக ஜல்லிக் கட்டு நடக்குமென்று அமைச்சர் மூர்த்தி அறிவித்தது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது.

jallikattu

"இந்த முறை அனைத்து வீரர் கள் மற்றும் காளை வளர்ப்போரும் நேரடியாக அந்தந்த ஊர் ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டியிடம் பெயர் கொடுக் கத் தேவையில்லை, ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம்'' என்று விழா நடப்பதற்கு இரண்டு நாட் களுக்கு முன் அறிவித்தார் அமைச்சர் மூர்த்தி. இந்த அறிவிப்புக்கு முதலில் சலசலப்பு ஏற்பட்டது. "கொரோனா காலத்தில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்று அமைச்சர் கறார் காட்ட, சலசலப்பு அடங்கியது.

வெளிநாட்டினரையும் ஈர்க்கக் கூடிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 14-ம் தேதியும், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள் ஜனவரி 15-ம் தேதியும் வெகுவிறு விறுப்பாக நடந்துமுடிந்தன. இந்த ஜல்லிக்கட்டுகளில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட காளையர்களும், 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்றனர். அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், ஒரு போட்டியில் பங்கேற்றவர்கள் மற்ற போட்டியில் பங்கேற்க முடியாது என்ற விதிமுறைகள் கடைபிடிக்கப் பட்டன. போட்டி தொடங்குமுன் மருத்துவப்பரிசோதனைகள் செய்யப்பட்டன.

Advertisment

jallikattu

காலை 7.30 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி வரை கிட்டத்தட்ட 8 சுற்றுக்களாக ஜல்லிக் கட்டு நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் வரை கள மிறக்கப்பட்டனர். அவர்களில் அதிக காளைகளைப் பிடித்தவர்கள் அடுத் தடுத்த சுற்றுகளுக்குத் தகுதிபெற்ற னர். இறுதியாக அதிக காளைகளைப் பிடித்த வீரருக்கும், சிறப் பாக விளையாடிய காளைக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது.

அவனியாபுரத்தில் சிறந்த மாடுபிடி வீரராக கார்த்தியும், பாலமேட்டில் சிறந்த மாடுபிடி வீரராக பிரபாகரனும், அலங்காநல்லூரில் சிறந்த மாடுபிடி வீரராக கருப்பாயூரணி யைச் சேர்ந்த கார்த்தியும் தேர்வாகினர். அதேபோல, அவனியாபுரத்தில் சிறந்த காளையாக மணப்பாறையைச் சேர்ந்த தேவசகாயத்தின் காளையும், பாலமேட்டில் சிறந்த காளையாக சிவகங்கையைச் சேர்ந்த சூறாவளி காளையும், அலங்காநல்லூரில் சிறந்த காளையாக கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்செல்வனின் காளையும் தேர் வாகின. இம்முறை அனைவருக்கும் கார், பைக், தங்கக்காசு, வீட்டுப்பயன்பாட்டுப் பொருட் களென பரிசு மழை குவிந்தது.

Advertisment

jallikattu

கொரோனா விதிமுறைகள் காரணமாக வாடிவாசல் பகுதியில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்பட்டன. பாலமேட்டில் ஆன் லைனில் பதிய முடியாமல் போன மாடு வளர்ப்போரை காவல் துறையினர் அனுமதிக்க மறுத்த தில் பிரச்சனையாகி தடியடிவரை செல்ல, அமைச்சர் தலையிட்டு அனைவரையும் பங்குபெற வைத் தார். அதற்குள் இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் வேறுவித மாகப் பரவி பற்றிக்கொண்டது. இதுகுறித்து மாட்டு உரிமை யாளர்கள் தரப்பில் விசாரிக்க, மதுரை தள்ளாகுளம் ஹரிஹரன், "ஆன்லைன் பதிவு சரியான முறைதான் சார். இதற்குமுன்னர், டோக்கன் போடும்போது ஊர்க் கமிட்டி ஆட்கள், ஆள் பார்த்துத் தான் டோக்கன் தருவார்கள், ப்ளாக்கிலும் டோக்கன் விற்பனையானது. டோக்கனுக்காக இரு நாட்களாகக் காத்துக்கிடந்ததெல்லாம் உண்டு. தற்போது ஆன்லைன் பதிவு எளிது. ஜாதி வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியைக் காண முடிந்தது" என்றார்.

மற்றொரு மாட்டின் உரிமை யாளர் நாகூர் கனி, "ஆமா சார். அவர் சொல்றது உண்மைதான். நான் தமிழ் முஸ்லீம். விவசாயம்தான் எங்களுக்கு சோறு போடுது. அதனால் தமிழர் பண்டிகையான பொங்கல் எனக்கு ஸ்பெஷல்தான். தாத்தா காலத்திலிருந்து மாடு வளர்க்கிறோம். உள்ளூரில் மாடு விடுவதற்கு நிறைய தடைகள் இருப்ப தால் வெளியூரில்தான் மாடு விடு வேன். இம்முறை ஆன்லைன் பதிவு என்பதால் சிரமமில்லை. ஆனால் வெளியூரிலிருந்து மாட்டை அழைத்து வருபவர்களுக்கு சரியான இட வசதி யில்லாததால் தூங்கக்கூட சிரமப்பட் டோம். அதனால் மாட்டை ஏற்றிவந்த வண்டியிலேயே பலரும் உறங்கினார் கள். கழிப்பறை வசதியும் இல்லை. உல கப்பிரசித்திபெற்ற இந்த விளையாட் டில், எங்களுக்கான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்துதரணும். காவல்துறையின் கெடுபிடிகளும் அதிகமா இருந்தது. ஜல்லிக்கட்டில் கலந்துகொள் வோரை படிக்காத பாமரர்களாக நினைத்து எதற்கெடுத்தாலும் லத்தியை ஓங்கு கிறார்கள்" என்று ஆதங்கப்பட்டார்.

jallikattu

பாலமேடு ஜல்லிக்கட்டு ஊர்க்கமிட்டிச் செயலாளர் பிரபுவைச் சந்தித்தோம். "என்னங்க, உங்க ஊர் ஜல்லிக்கட்டில் போலீஸ் தடியடியாமே?" என்றதும், "யாருங்க சொன்னது, அப்படியெல்லாம் நடக்கவேயில்லை. வேண்டுமென்றே பொய்ச்செய்தியைப் பரப்புகிறார்கள். வேறு எங்கோ நடந்த பழைய வீடியோவை, இங்கு நடந்ததாகப் பரப்புகிறார்கள். இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுக்கப் போகிறோம். இந்த வருடம் அமைச்சர்கள் மூர்த்தியும், அண்ணன் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களும் சேர்ந்து அசத்திட்டாங்க. எந்த வருடமும் இல்லாமல் எல்லாத்தரப்பு மக்களும் பங்குபெற்று ஒற்றுமையாக ஒரு சமத்துவப் பொங்கலாக இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றது மிக்க மகிழ்ச்சி சார்" என்றார் பெருமிதத்துடன்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசைத் தட்டிசென்ற வீரன் பிரபாகரனைச் சந்தித்தோம். "எப்படி இருக்கிறது உங்கள் மனநிலை?" எனக் கேட்டதும், "சார், ரொம்ப வே மகிழ்ச்சி தான். இந்த முறை ஆன்லைன் மூலம் பதிவு என்பது சிறப்புதான் என்றாலும் அதற்கான அறிவிப்பு போட்டி நடப்பதற்கு முந்தைய நாள்தான் வெளியிடப்பட்டது. மிகவும் குறுகிய கால அவகாசம்தான் இருந்தது. அதுகூடப் பரவாயில்லை, அதற்கான விதிமுறைகளையும் முறையாக அறிவிக்க வில்லை. ஜல்லிக்கட்டுக்குச் செல்லும்போது என்னென்ன கொண்டுசெல்ல வேண்டும் என்று குறிப்பிடவில்லை. ஆன்லைனில் பதிவேற்றும்போது, ஒவ்வொரு வீரரும் உடல் பரிசோதனை செய்த மருத்துவச் சான்றிதழை இணைக்க வேண்டும் என்று முன்கூட்டியே தெரிவிக்க வில்லை. எனவே கடைசி நேரத்தில் மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்கு ரொம்பவே சிரமப்பட்டேன். அப்படி மருத்துவச் சான்றிதழைப் பெறமுடியாமல் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பலரும் தவறவிட்டனர்.

என் நண்பன் மிகவும் திறமைசாலி. மாடுபிடிப்பதில் அவனுக்கே இடம் கிடைக்கவில்லை. அடுத்த முறை இதைக் கொஞ்சம் சரி செய்தால் நன்றாக இருக்கும். மற்றபடி, கிராம விழாக் கமிட்டியினர் கைகளில் இருந்து இவ் விளையாட்டை எடுத்து, எந்தவிதப் பாகுபாடும் இல்லா மல் அரசாங்கம் ஆன் லைனில் அறிவித்தது பாராட்டுக் குரியது. அதேபோல, ஒரு வீரர் ஒரு போட்டியில்தான் கலந்துகொள்ள முடியும் என்ற விதியைத் தவிர்த்திருக்க லாம். கிரிக்கெட், ஃபுட்பால், டென்னிஸ் போன்ற விளையாட்டு வீரர்களுக்குக் கொடுக்கும் மரியாதையை, உயிரைப் பணயம் வைத்து விளையாடும் வீர விளையாட்டு வீரர்களான எங்களுக்கும் கொடுங்கள். குறிப்பாக, காவல்துறையினர் எங்களை மதிப்பதே இல்லை. மற்ற விளையாட்டு வீரர்களைப் போல் எங்களை நடத்தினாலே போதும். இதுவரை பலமுறை ஜல்லிக்கட்டில் கலந்திருக்கிறேன். இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அமைச்சர்கள் மூர்த்தியும், பி,டி.ஆரும் காலை, மதியச் சாப்பாடு, அடிக்கடி கூல்ட்ரிங்ஸ் கொடுத்து எங்களைச் சோர்வடையாமல் பார்த்துக் கொண்டார்கள்.

அதுபோல, மாட்டின் உரிமையாளர்கள் முந்தின நாளே வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்துவிடுகிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தங்குவதற்கான கொட்டகைகூட இல்லை. அரசு அவர்களுக்கான தங்குமிட வசதியைச் செய்துதர வேண்டும்" என்று அவர் சொல்லிக்கொண்டி ருக்கும்போதே, வீட்டின் உள்ளேயிருந்து, "பேப்பர்காரத் தம்பி, என் மகனுக்கு என்ன பெயர் வச்சுருக்கோம் பார்த்தீங்களா? பிரபாகரன்! அப்புறம் வீரமாத்தானே இருப்பான். அவங்க அப்பா பிரியமா வச்ச பெயரு'' என்ற பிரபாகரனின் அம்மாவின் குரலில் இருந்த கம்பீரத்தையும் பெருமிதத்தையும் உணர்ந்தபடி விடைபெற்றோம். மொத்தத்தில், தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு, அதன் அடுத்த கட்டத்திற்கான பாய்ச்சலில் இருப்பது தெரிகிறது.