இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பரபரப்பாகப் பேசப்படும் சிப்பாய்க் கலகம், ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவங்கள் போன்று, தமிழ்நாட்டில், திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும், அதில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு, படுகொலைகளும் மறக்கமுடியாத வரலாற்று வடுவாகும். சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் இயக்கத்தினருக்கு இருக்கும் பங்களிப்பைப் போலவே, கம்யூனிஸ்ட் இயக்கத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் இருக்கும் பங்களிப்பிற்கான ரத்த சாட்சியே பொன்மலைப் போராட்டம்.
சுதந்திரத்துக்கு முன்னர், இந்திய ரயில்வேயில் பணியாற்றிய லட்சக்கணக்கான இந்தியப் பணியாளர்களை, "இந்தியக்கூலிகள்' என்றே ஆங்கிலேய அரசாங்கம் அழைத்தது. மிகக்குறைந்த சம்பளத்தையே இந்தியர்களுக்கு வழங்கியது. இதற்கு எதிராக இந்திய அளவில் அனைத்து ரயில்வே அமைப்புகளும் பல காலமாகப் போராடி வந்தன. 1946-ம் ஆண்டில், தமிழ்நாட்டில், திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த பணிமனையில், 1936-ம் ஆண்டு, இஸ்மாயில்கான் என்ற இளைஞர் ஊழியராகச் சேர்கிறார். இயல்பிலேயே கம்யூனிசச் சிந்தனையும், போராட்டகுணமும் கொண்ட இவர், பொன்மலை புரட்சி இளைஞர்கள் சங்கத்தைத் தொடங்கினார். 1940-ம் ஆண்டில், திருச்சி பொன்மலைக்குன்றில் இந்திய விடுதலைப் போராட்டக் கொடியை ஏற்றினார். இவருக்கு தொழிலாளர்கள் மத்தியில் இருந்த ஆதரவைக் கருத்தில்கொண்டு, ரயில்வே தொழிலாளர்கள் யூனியன் தேர்தலில் இஸ்மாயில்கானை வேட்பாளராக கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் அறிவித்த னர். அத்தேர்தலில், சுமார் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இஸ்மாயில்கான் வெற்றிபெற்றார்.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற தருணத்தில், அவசரத் தேவைக்கென ஒன்றரை லட்சம் தொழிலாளர்களை இரயில்வே துறைக்கு எடுத்த ஆங்கிலேய அரசாங்கம், போர் முடிவுற்றதும், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அனைவரையும் வேலையிலிருந்து விரட்டிவிட்டது. "போருக்கு உதவ மட்டும்தான் நாங்களா? எங்கள் நாட்டிலேயே எங்களுக்கு வேலையில்லையா?' என்று தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் சங்கத் தலைவர் எம்.கல்யாணசுந்தரம், பொதுச் செயலாளர் அனந்த நம்பியார், பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள் யூனியன் தலைவர் இஸ்மாயில்கான் உள்ளிட்டோர் குரல் எழுப்பி னார்கள். 1946, ஜூன் 23-ம் தேதி நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம், ஆங்கிலேய அரசையே அசைத்துப் பார்த்தது. அதன்பின்னர், ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. முதன்முறையாக சம்பளக் கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனாலும், அடுத்தடுத்த பழிவாங்கும் செயலில் ரயில்வே நிர் வாகம் ஈடுபட்டது. ஏதேதோ காரணங்களுக்காகத் தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மும்பை கப்பல்படையினர் சுதந்திரப் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக, இஸ்மாயில்கான் தலைமையில், திருச்சி பொன்மலை ரயில்வே தொழிலாளர்களும், பொதுமக்களும் இணைந்து ஊர்வலம் சென்றனர்.
இந்நிலையில், திருச்சி பொன்மலை இரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்தைக் கடுமையான முறையில் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, முரட்டுத்தனமான குணமுடைய மலபார் சிறப்பு போலீசாரை, ஹேரிசன் மைக்கேல் ஓ டயர் என்பவரின் தலைமையில் களமிறக்கியது பிரிட்டிஷ் அரசாங்கம். 1946, செப்டம்பர் 5-ஆம் தேதி காலை 10:00 மணியளவில், ஆர்மரிகேட் கூட்ட அரங்கு நோக்கி இஸ்மாயில்கான் நடந்து சென்று கொண்டிருக்கையில், மலபார் சிறப்பு போலீசாரின் வேன்கள் அவரைச் சுற்றி வளைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவரைக் கொத்தாகப் பிடித்து வேனுக்குள் அடைத்து கைவிலங்கிட்டு, குண்டாந்தடியால் தாக்கினர். இதற்குள் அவர் கைது செய்யப்பட்ட தகவல், கூட்ட அரங்கினுள் இருந்த தொழிலாளர்களுக்குத் தெரியவர... அரங்கிலிருந்து பாய்ந்தோடி வந்தவர்கள், இஸ்மாயில்கானை ஏற்றியிருந்த வேனை மடக்கி, நகரவிடாமல் செய்தனர்.
வெறிகொண்ட மலபார் போலீசார், தொழிலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்த, தொழிலாளர்கள் பலருக்கும் மண்டை, கை, கால்கள் உடைந்து ரத்தம் பீறிட்டது. ஆவேசமடைந்த ஹேரிசன், துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டான். ஜாலியன் வாலாபாக்கைப் போலவே இங்கும் கண்மூடித்தனமாகப் போலீசார் சுட்டதில், ராஜூ, ராமச்சந்திரன், தியாகராஜன், தங்கவேலு மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
தடியடியில் காயமடைந்தவர்களோடு இஸ்மாயில்கானையும் சேர்த்துத் தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் போட்டிருக்கிறார்கள். அதன்பின்னர் தொடர் சிகிச்சையால் உயிர் பிழைத்தார். சுதந்திரத்துக்குப் பின்னரும், தீவிரமாகச் சங்கப்பணியாற்றியவர், 2002-ம் ஆண்டில் தனது போராட்ட வாழ்வை முடித்துக் கொண்டார்.
வடஇந்தியாவில் இந்து -முஸ்லிம் கலவரத்தின்போது மகாத்மா காந்தி, "தமிழ்நாட்டில் ஒரு இஸ்லாமியருக்காக இந்துக்கள் 5 பேர் தங்கள் உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள்' என்று இந்து -முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்திக் குறிப்பிட்டிருக்கிறார் என்பதே இஸ்மாயில்கானின் தலைமைப் பண்பையும், 5 தோழர்களின் உயிர் தியாகத்தையும் பெருமைப்படுத்துவதாக உள்ளது. தற்போது 75-வது நினைவு ஆண்டில்... ஒன்றிய, மாநில அரசுகளும் இவர்களின் தியாகத்தைக் கவுரவப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.