ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆணையத்திற்கு இரு நபர் ஆணையர் நியமிக்கவும் தயார் என உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருக்கிறது தமிழக அரசு. இதனால் ஆணையம் குறித்த விசாரணை அ.தி.மு.க.வில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச் சாட்டுகளை தொடர்ந்து, அதனை விசாரிப்பதற் காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை கடந்த 2017-ல் அமைத்தார், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இதனையடுத்து ஜெயலலிதாவின் உறவினர்கள், அ.தி.மு.க. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அரசு டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணையை நடத்தினார் நீதிபதி ஆறுமுகச்சாமி. மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் உருவாக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலத்தை நீட்டித்தபடியே இருந்தது முந்தைய எடப்பாடி அரசு.
அதேசமயம், முக்கிய சாட்சிகளான ஓ.பி.எஸ்., எடப்பாடி, சசிகலா, லண்டன் டாக்டர் பீலே, எய்ம்ஸ் டாக்டர்கள், சிங்கப்பூர் நர்ஸ்கள் என குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் விசாரிக்க வேண்டி யிருந்தது. அந்த வகையில் கிட்டத்த 95 சதவீத விசாரணையை முடித்திருந்தது ஆணையம்.
இந்த நிலையில்தான்... ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அப்பல்லோ நிர்வாகம், "ஜெயலலிதா வுக்கு அளித்த மருத்துவச் சிகிச்சைகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்; எங்கள் மருத்துவர்களை தொடர்ந்து விசாரிக்க 21 டாக்டர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ண மூர்த்தி அமர்வு, "ஜெயலலிதாவின் சிகிச்சை முறைகளை விசாரிக்க தடை விதிக்க முடியாது. ஆணையத்திற்கும் தடையில்லை'‘என்று தீர்ப்பளித்த துடன், "21 டாக்டர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கையையும் நிராகரித்து கடந்த 2019, ஏப்ரல் 4-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் மேல்முறையீடு செய்ததில் ஆணையத்தின் விசாரணைக்கு ஏப்ரல் 26-ந்தேதி இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். இதனால் ஆணை யத்தின் விசாரணை முடக்கப்பட் டது. ஆணையத்தின் அலுவலக மும் இழுத்து மூடப்பட்டது. சுமார் இரண்டரை வருடங்களாக எந்த விசாரணையும் நடக்காத நிலையில் ஒவ்வொரு 6 மாதத் திற்கும் ஆணையத்தின் பதவிக் காலங்கள் நீட்டிக்கப்பட்டு வந்தன. அதேசமயம், தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய தி.மு.க. அரசும், ஆணையத்தின் பதவிக் காலத்தை கடந்த ஜூலையில் 11-வது முறையாக நீட்டித்தது.
இந்த நிலையில்தான், ஆணையத்தின் மீதுள்ள இடைக்கால தடையை நீக்குமாறு தி.மு.க. அரசு சார்பில் மனு அளித்திருந்தனர். இதற்கு எதிராக, ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தது அப்பல்லோ நிர்வாகம். இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையும் உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீரிடம் பட்டியலிடப்பட்டன. கடந்த 4 நாட்களுக் கும் மேலாக நடந்து வரும் விசாரணையில் ஐந்தாவது நாளில், தமிழக அரசு சார்பில் ஆஜரானார் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே. "ஜெயலலிதாவின் மரணத்திலிருக் கும் உண்மைகளை மக்களுக்கு சொல்வது அரசின் கடமை. அதனால் அதனை தீவிரமாக விசாரிக்க புதிய அரசு விரும்புகிறது. 95 சதவீதம் விசாரணை முடிந்திருக்கும் நிலையில் ஆறுமுகச்சாமியின் ஆணையத்துக்கு தடை விதிக்கக்கூடாது. இடைக்கால தடையை நீக்க வேண்டும்.
ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படாத சூழலில், ஆணையத்தின் மீது அப்பல்லோ நிர்வாகம் கொண்டிருக்கும் தவறான எண்ணத்தை ஏற்க முடியாது. ஏற்கனவே விசாரணைக்கு அப்பல்லோவின் 50 டாக்டர்களை ஆணையம் விசாரித்திருக்கிறது. அப்போதெல்லாம் எந்த குறையையும் அவர்கள் கூறவில்லை''’என்று அழுத்தமான வாதங்களை முன்வைத்திருக்கிறார்.
அப்போது, "ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் டாக்டரை நியமிப்பதில் உங்களுக்கு ஆட்சேபனை இருக்கிறதா?‘’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப... "இந்த ஆணையம் என்பது உண்மைகளை கண்டறி யும் குழு தானே தவிர, நோய்களை கண்டறியும் நிபுணர் குழு அல்ல! அதனால் டாக்டர்கள் தேவையில்லை. இருப்பினும், ஆணையத்துக்கு உதவ டாக்டர்கள் தேவை எனும் பட்சத்தில் இதில், எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அதேசமயம், ஆணையத்தை முற்றிலுமாக மாற்ற முடியாது. ஆணையத்தை விரிவுபடுத்த நீதிமன்றம் விரும்பி னால் அதனை அரசு ஏற்றுக்கொள்ளும். ஓய்வு பெற்ற நீதிபதிகள் பானுமதி அல்லது சி.டி.செல்வம் ஒருவரை நியமித்து ஆணையத்தை இரு நபர் ஆணையமாக மாற்றலாம்''‘என்று கடுமையான வாதங்களை அடுக்கினார் துஷ்யந்த் தவே.
ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டால் அதன் மீது விவாதம் நடத்தப் படுமா? கேள்விகள் கேட்கப்படுமா? என்பது குறித்தும் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தமிழக அரசின் வழக்கறிஞர்கள் தெளிவாக விளக்கமளித்த னர். குறிப்பாக, "ஆணையம் தாக்கல் செய்யும் அறிக்கையை அரசு பரிசீலிக்கும். தவறான அறிக்கை சமர்பிக்கப்பட்டால் அதனை அரசு ஏற்காது. பேரவையில் இந்த அறிக்கை வைக்கப்படும். உறுப் பினர்கள் விவாதிப்பார்கள்; கேள்வி எழுப்புவார்கள். தேவைப்பட்டால் அரசு கூட இதில் கேள்விகள் கேட்கும். அதன்பிறகு அறிக்கை மீது அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். சிவில் அல்லது கிரிமினல் வழக்கு தொடர அரசு பரிந் துரைத்தால் அதனை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல லாம்' என்று தெளிவுபடுத்தியது தமிழக அரசு.
இதனையடுத்து ஆணையத்தின் சார்பிலும் அப்பல்லோவின் மனுவுக்கு எதிராக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. விசாரணை அடுத்த நாளும் தொடர்ந்த நிலையில், ஆணையத்தின் மீதான இடைக்கால தடை நீக்கப்படுமா? அப்பல்லோவின் கோரிக்கை ஏற்கப்படுமா? என்கிற விவாதங்கள் தி.மு.க., அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் மத்தியில் எதிரொலித்தபடி இருந்தன.
இந்த வழக்கு வெறும் சம்பிரதாயமா? அல்லது ஜெயலலிதா மரணத்தின் உண்மைகளை வெளிக்கொணர தி.மு.க. உண்மையாகவே விரும்பு கிறதா? என்பது குறித்து தி.மு.க. வழக்கறிஞர்கள் சிலரிடம் நாம் விசாரித்தபோது, ”"ஜெயலலிதாவின் மரணத்திலிருக்கும் மர்மத்தை மக்களுக்கு தெரிவிப் போம். குற்றவாளிகளை பொதுவெளியில் அம்பலப் படுத்துவோம்' என தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க. சொல்லியிருக்கிறது. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த விசயத்தில் அக்கறை காட்டப் படவில்லையோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் இருந்தது. காரணம், ஆணைய விசாரணையின் மீதான இடைக்கால தடை நீக்கப்பட்டு மீண்டும் விசாரணை துவங்கினால், முக்கிய சாட்சியான ஓ.பி.எஸ். ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டியதிருக்கும். ஏற்கனவே, பல தரப்பினரிடமும் விசாரிக்கப்பட்டதிலிருந்து பல கேள்விகளை ஆறுமுகச்சாமி தயாரித்து வைத்திருக்கிறார். அந்த கேள்விகள் ஓ.பி.எஸ்.சிடம் கேட்கப்படும். அதற்கு அவர் தெளிவான பதில் சொல்ல வேண்டியதிருக்கும்.
ஏனெனில், ஜெயலலிதா அட்மிட் ஆன கொஞ்ச நாட்களில், பொறுப்பு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஓ.பி.எஸ். அந்த வகையில், மருத்துவ சிகிச்சையில் ஏதேனும் தவறுகள் இருந்திருந்தால் அதற்கு ஓ.பி.எஸ்.சும் பொறுப்பேற்க வேண்டும். அப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. தலைமை யோடு ஓ.பி.எஸ். நெருக்கமாக இருக்கிறார் என தகவல் பரவியது.
இப்படிப்பட்ட சூழலில் தான், ஜெயலலிதாவின் மரண மர்மத்தின் உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பதில் தி.மு.க. அரசு பின்வாங்காது என்பதை நிலைநிறுத்தவே,…ஆணைய விசாரணை மீதான இடைக்கால தடையை உடைத்தெறிவதில் சீரியஸ் காட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதற்கான சட்ட நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்ததில்தான் உச்சநீதிமன்றத்தில் வலிமை யான வாதங்களை முன்வைத்திருக்கிறது தமிழக அரசு'' என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள் வழக்கறிஞர்கள்.
இந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை தி.மு.க. அரசு மேற்கொள்ளும் என்பதாக அரசின் உயரதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆணையத்தின் தடை நீங்கி விசாரணை சூடு பிடிக்கும்போது சசிகலா, ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்கள் தப்பிக்க முடியாது.
"கொடநாடு கொலை வழக்கு எடப்பாடியை பயமுறுத்துவது போல, ஜெயலலிதா மரணமும் பலரை பயமுறுத்தும்' என்கிறார்கள் ஜெயலலிதா விசுவாசிகள்.