போதை வலையில் பாலிவுட் நடிகை!
கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி மும்பையிலிருந்து கோவா நோக்கிச் சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன்விருந்து நடந்த விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உட்பட 18 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில், ஆர்யன்கானின் வாட்ஸ்அப் உரையாடல்களின் அடிப்படையில், பாலிவுட் இளம் நடிகை அனன்யா பாண்டேவின் வீட்டில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் அண்மையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிந்த பிறகு அனன்யா பாண்டே போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இந்த சோதனையின்போது அனன்யா பாண்டேவின் மொபைல் ஃபோன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சுஷாந்த்சிங் ராஜ்புத் மரணத்தின்போது, பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியது போல, இந்த வழக்கிலும் நிகழலாம் என்கின்றன பாலிவுட் வட்டாரங்கள். இது திட்டமிட்ட அரசியல் சதி என்கிறது பாலிடிக்ஸ் வட்டாரம்.
சர்வதேச விருது பட்டியலில் மீண்டும் ரஹ்மான்!
பாலிவுட் நடிகை க்ரித்தி சனொன் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியான படம் "மிமி'. நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. குறிப்பாக இப்படத்தில் வரும் "பரம் சுந்தரி' பாடல் வைரல் ஹிட்டானதோடு, யூடியூப்பில் கோடிக்கணக்கான பார்வையாளர்களையும் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
உலகளவில் இசைக்கென வழங்கப்படும் உயரிய விருதுகளில் மிகவும் முக்கியமானது "கிராமி' விருதுகள். இந்த ஆண்டுக்கான 64-வது கிராமி விருதுகளுக்கான ஆல்பங்கள் தற்போது பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இப் படத்தின் இசைக்காக ஏ.ஆர்.ரகுமான் பெயரும் இப்பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளோடு இரண்டு கிராமி விருதுகளையும் வென்றார் ஏ.ஆர்.ரகுமான். அதன்பிறகு, தற்போது மீண்டும் ஒருமுறை ஏ.ஆர்.ரகுமான் பெயர் கிராமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான், மீண்டும் இவ்விருதினை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் இந்திய சினிமா ரசிகர்கள்.
கமல் பர்த்டே ட்ரீட்!
"மாஸ்டர்'’படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனை நடிப்பில் "விக்ரம்-2' படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். கோவிட் மற்றும் கமலின் சட்டமன்ற தேர்தல் பணிகளால் தாமதமாகத் துவங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், வின்டேஜ் கமல் ஸ்டைலில் பக்கா கமர்ஷியல் படமாக இதனை உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
அதன்பிறகு அவ்வப்போது இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வெளியானாலும், படக் குழுவினரிடமிருந்து அதிகாரப்பூர்வ அப்டேட்களோ, போஸ்டர்களோ எதுவும் வராமலே இருந்தது. இந்நிலையில், கமலின் பிறந்தநாளில் ஒரு மிகப்பெரிய அப்டேட்டை கொடுக்கத் தயாராகி வருகிறதாம் படக்குழு. வரும் நவம்பர் ஏழாம் தேதி கமலின் பிறந்தநாள் என்பதால், அதனைக் கொண்டாடும் வகையில் அன்றைய தினம் இப் படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
-எம்.கே.