இந்தியாவில், மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பத்தாண்டு காலத்தில், இந்திய அரசியல், சமூகச் சூழல் மெல்ல மெல்ல எதேச்சதிகாரத்தை நோக்கி நகர்வதாக, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த V-Dem (வி-டெம்) இன்ஸ்டிடியூட் அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே 'ஒரே நாடு, ஒரே ஆதார், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல்' என்பது போன்று, இந்திய பன்முகத்தன் மைக்கு நேர்மாறான இலக்கை நோக்கி ஒன்றிய அரசு பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறது. அதற்கேற்ப இஸ்லா மியர்களை அச்சுறுத்தக் கூடிய சட்டங்கள், சமூகச் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அனைத்திலும் மதமே முன்னிறுத்தப்பட்டு வருகிறது. பிரதமரே தன்னை தீவிர இந்துத்வாவாதியாகக் கட் டமைத்து பெரும்பான்மை மதம் சார்ந்த மக்களின் வாக்குகளை அறுவடை செய்வதில் ஆர்வங்காட்டுகிறார்.
மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிக்கிறது. தங்களுக்கு எதிரான மாநிலங்களின் ஆட்சியை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. மோடியின் ஆட்சியில் கருத்துச் சுதந்திரம், ஊடகங்கள், சிவில் சமூகம் ஆகியவை மிகவும் மோசமாகிவிட்டன. மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமையைக் கட்டுப்படுத்துவதற்காக சமூக வலைத்தளங் களைக் கட்டுப்படுத்துகிறது. ஊடகங்களிலும் தங்கள் ஆட்சிக்கு ஆதரவான செய்திகளே ஒளிபரப்பாகும்படி கட்டுப்படுத்த முனைகிறது. தங்களுக்கு எதிரான கட்சிகளை முடக்குவதற்காக புலனாய்வு அமைப்புகள் அனைத்தையும் துஷ்பிரயோகம் செய்கிறது.
இதன்மூலம் இந்தியா முழுக்க ஒரே கட்சி... ஆட்சி என்பதான இலக்கை நோக்கிச் செல்வதாகத் தெரிகிறது. இப்படியான செயல்பாடுதான் ஜனநாயகத்துக்கு எதிரான, சர்வாதி காரத்தை நோக்கிய நகர்வாகும் என்பதையே சமீபத்தில் வெளியான வி-டெம் இன்ஸ்டிடியூட் ஆய்வறிக் கை உறுதிசெய்கிறது.
உலகளவில் 179 நாடுகளில் ஜனநாயகம் எவ்வாறு உள்ளது என வி-டெம் அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியா வானது, நைஜர் நாட்டுக் கும் ஐவரி கோஸ்ட் நாட்டுக்கும் இடையே 104வது இடத்தில் இருக்கிறது. தூய்மையான, சுதந்திரமான மற் றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான குறியீட்டிலும் உலக அளவில் இந்தியா 110ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது. இது குறித்து இந்தியாவானது தேர்தல் நடை முறையுடன் கூடிய சர்வாதிகார நாடாக மாறிவிட்டது என்று குறிப்பிடுகிறது.
ஜனநாயகத்தின் பின்னடைவுக்கு மோடியும், அவரது இந்துத்வா கொள்கையுமே முக்கிய காரணமென்றும், 2014ஆம் ஆண்டிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக எதேச்சதிகாரப் பாதையை நோக்கி இந்தியா பயணித்து வருவதாகவும், முழுமையான ஜனநாயகம் என்பதிலிருந்து விலகி, தேர்தல் வழி எதேச்சதி காரத்தை கடைப்பிடிக்கக்கூடிய நாடாக மாறிவிட்டது என்றும் அழுத்தமாகக் குறிப் பிடுகிறது.
இந்திரா காந்தி கொண்டுவந்த எமர் ஜென்ஸி காலகட்டத்தைப்போல் இந்தியா உருவெடுத்துவருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இது இந்தியாவுக்கு பெருமையல்ல... பின்னடைவு!