"ஓபனிங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா' என்பதுபோல ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக உருவான எதிர்க்கட்சிகளின் "இந்தியா' கூட்டணிக்கு பெயர் வைத்ததுமே நாடு முழுக்க உற்சாகமாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டது. அடுத்தடுத்து கூடிப்பேசி தங்கள் ஒற்றுமையை நிரூபித்து வந்தவர்கள், அடுத்துவந்த 5 மாநிலத் தேர்தலில் சரியான கூட்டணி அமைக்காததால், பா.ஜ.க. நான்கு மாநிலங்களில் வெற்றிபெற்று அக்கூட்டணிக்கு அதிர்ச்சியளித்தது. அத்தோல்வியால் இந்தியா கூட்டணியிலிருந்த கட்சிகளும் காங்கிரஸின் தலைமையை ஏற்க மறுத்தன.

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் கெஜ்ரிவாலும், மம்தாவும் தனித்தே போட்டி யிடப்போவதாக அறிவித்து சிக்கலைத் தொடங்கிவைத்தனர். அடுத்ததாக, இக்கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்ட நிதிஷ்குமாரே யூ டர்ன் அடித்து பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து ஒரே நாளில் பதவி விலகி, மீண்டும் முதல்வராகி ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தார். அடுத்ததாக ராமர் கோவில் திறப்பும் அக்கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்களை ஏற்படுத்தியது. ஆக, இந்தியா கூட்டணி பெருத்த பின்னடைவைச் சந்தித்தது. இதற்கிடையே, பாராளுமன்றத்தில் 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட், சண்டிகரில் மேயர் தேர்தலில் தில்லுமுல்லு, விவசாயிகள் போராட்டத்தில் புகைக்குண்டு வீச்சு, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 25 பேருக்கு பேரம் என்று பா.ஜ.க.வின் ஒன்றிய அரசு முழுவேகத்தில் அடித்தாடியதில், பிளவுபட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளைத் திரும்பவும் யோசிக்க வைத்தது.

ss

பாராளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக ஆம் ஆத்மி யோடு பேச்சுவார்த்தைக்கு வந்த காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் ஒரு இடம் தான் தருவோமென்று சொன்ன ஆம் ஆத்மி, அதற்குக்கூட தகுதியில்லாத காங்கிரஸுக்கு கூட்டணி தர்மத்துக்காக மட்டுமே அதை வழங்குவதாக எகத்தாளமாகத் தெரிவித்தது. அதேபோல், பஞ்சாப் மற்றும் சண்டிகரிலுள்ள 14 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்தது. இந்நிலையிலும் மனந்தளராத காங்கிரஸ், இந்தியா கூட்டணிக் கட்சியினரோடு பேச்சுவார்த்தையைக் கைவிடவில்லை. உத்தரப்பிரதேசத்தில் அங்குள்ள 80 தொகுதி களில் ஒன்றிரண்டு தொகுதிகள் தவிர்த்து அனைத்திலும் பா.ஜ.க.வே வெல்லுமென்ற நிலையில், காங்கிரஸோடு தொகுதி உடன்பாடு காண சமாஜ்வாடி முன்வந்தது.

சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் உத்தம் படேல், அக்கட்சியின் தேசிய செயலாளர் ராஜேந்திர சவுத்ரி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் ராய், காங்கிரஸின் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே ஆகி யோரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் என முதலில் சொல்லப்பட்டு, இறுதியில் பிரியங்கா தலையீட்டால் 17 தொகுதிகள் ஒதுக்கீடு உறுதியானது. அதோடு, சந்திரசேகர் ஆசாத்தின் பீம் ஆர்மிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. மிச்சமுள்ள 62 தொகுதிகளில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி போட்டியிடுகிறது. இதன்மூலம் இந்தியாவில் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு எதிராக வலுவான செக் வைக்கப்பட்டது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் ஒரு தொகுதியை சமாஜ்வாடி கட்சிக்கு காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியோடு ஆம் ஆத்மியும் உடன்பாடு ஏற்படுத்துவதற்காக இறங்கிவந்தது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், டெல்லியிலுள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளில், காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும், ஆம் ஆத்மிக்கு 4 தொகுதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் 7 இடங் களையும் பா.ஜ.க. கைப்பற்றியிருந்த நிலையில், இம்முறை அங்கே பா.ஜ.க.வுக்கு கடுமையான மோதல் இருக்கிறது! அதேபோல், குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு இரண்டு இடங்களை காங்கிரஸ் ஒதுக்குகிறது. ஹரியானாவிலும், அசாமிலும் ஒரு இடத்தை ஆம் ஆத்மிக்கு ஒதுக்கவுள்ளதாகத் தெரிகிறது. பஞ்சாப்பில் பா.ஜ.க.வுக்கு பெரிய வாக்கு வங்கி இல்லாததால் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தனித்தே போட்டியிட முடிவெடுத்துள்ளன. இந்த கூட்டணி உருவானதுமே பொறுக்கமுடியாத பா.ஜ.க., சி.பி.ஐ. மூலமாக கெஜ்ரிவாலை தூக்கி உள்ளே வைத்துவிடுவோம், கூட்டணியிலிருந்து வெளியேறுங்களென்று மிரட்டல் விடுத்ததாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி யிருப்பது, பா.ஜ.க.வுக்கு பயந்து போயிருப் பதை வெளிப்படுத்துகிறது!

ஏற்கெனவே பீகாரில் லாலுவின் ஆர்.ஜே.டி. கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் தான் இருக்கிறது. ராகுல் காந்தியை காரில் தேஜஸ்வி யாதவ் அழைத்துச்சென்று தங்கள் கூட்டணியை வெளிப்படுத்தியிருந்தார். எனவே அங்கும் நிதிஷ்குமார் விலகினாலும் இந்தியா கூட்டணி வலுவாக இருக்குமென்றே தெரிகிறது. தற்போது மேற்குவங்கத்திலும் இறுக்கத்தை தளர்த்தி, காங்கிரஸ் கட்சியோடு கூட்டணிக்கு மம்தா இறங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது. இவர்களிடையே கூட்டணி இறுதியானால், கடந்த 2019 தேர்தலில் 18 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ.க.வுக்கு இம்முறை பலத்த அடி கிடைக்கும். இதன்மூலம் வட மாநிலங்களில் மீண்டும் இந்தியா கூட்டணி வலுவடைந்துள்ளது ஜனநாயகவாதிகளுக்கு நம்பிக்கையளிப்பதாக உள்ளது!

Advertisment