சட்டவிரோத கல்குவாரி களுக்கு எதிராகப் புகாரளித்த சமூக ஆர்வலர்மீது வாகனத்தை ஏற்றிக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் தென்னிலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன இதில் தென்னிலை அருகே செல்வகுமார் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிக்கு அருகாமையில் ஜெகநாதன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் அமைந்துள்ளது.
நிலப் பிரச்சனை தொடர்பாக செல்வகுமார் தன்னைக் கொலை செய்ய முயன்றதாக ஜெகநாதன் கடந்த 2019ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். இந்த நிலையில், செல்வகுமா ரின் கல் குவாரி, உரிமம் முடிந்த பின்னரும் இயங்கி வருவதாக ஜெகநாதன், சுற்றுச்சூழல் ஆர்வலர் முகில னுடன் இணைந்து கனிம வளத்துறைக்கு பல்வேறு புகார்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
புகாரையடுத்து, சில தினங்களுக்கு முன்பு, சட்டவிரோதமாக இயங்கிய செல்வகுமாருக்குச் சொந்தமான கல்குவாரி மூடப்பட்டது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை, க.பரமத்தி அருகே கருடயம்பாளையம் என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜெகநாதன் மீது தனியார் கல் குவாரிக்கு சொந்தமான பொலிரோ வாகனம் மோதியது. இதில் ஜெகநாதன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மோதிய வாகனம் செல்வகுமாருக்கு சொந்தமானது எனக் கூறப்படு கிறது. இந்த நிலையில் க.பரமத்தி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். ஜெகநாதனின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சட்ட விரோதமாக இயங்கிய கல்குவாரியை மூடுவதற்குக் காரணமான ஜெகநாதனை லாரி ஏற்றிக் கொன்றுவிட்டதாக மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், இயற்கை வளங்களைச் சூறையாடுதல், ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென்றும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில், ராணிப் பேட்டையைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரும் கூலிப் படையாகச் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கிரஷர் கல் குவாரி உரிமையாளர் செல்வகுமார், பொலிரோ வாகன டிரைவர் சக்திவேல் மற்றும் ராணிப் பேட்டையிலிருந்து வர வழைக்கப்பட்ட கூலிப்படை ரஞ்சித் ஆகிய மூவரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர்.