ஆளும் தரப்பை எதிர்த்தால் குண்டாஸ் வழக்கைக் காட்டி மட்டும் இதுகாறும் மிரட்டிவந்த எடப்பாடி பழனிசாமியின் தமிழக அரசு, இப்போது போராளிகள் மீது "மாவோயிஸ்ட்', "நக்சலைட்' என நாமகரணம் சூட்டி சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தும் புதிய ரூட்டில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்து, எட்டுவழிச் சாலைத் திட்டம் முடங்கிப் போயிருக்கிறது. விடாமல் போராடும் போராட்டக்காரர்களை முடக்க எடப்பாடி அரசு குறுக்கு வழியைத் தேர்ந்திருப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள் எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள்.
கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி சேலத்தை அடுத்த கருப்பூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், எட்டுவழிச் சாலைக்கு நிலம் கொடுக்க சம்மதித்து சில விவசாயிகள் மனு அளித்துள்ளதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினார் எடப்பாடி பழனிசாமி.
தி.மு.க.வைச் சேர்ந்த ஏழாவது மைல் முருகேசன் என்பவர் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தது உண்மைதான் என்றாலும், பின்னர் அவரே தான் தெரியாமல் அப்படி மனு கொடுத்துவிட்டதாகச் சொன்னார்.
இந்த நிலையில், எட்டுவழிச்சாலைக்கு ஆதரவாக ஆளும் தரப்பு ஏற்பாடு செய்திருந்த 'செட்டப்' விவசாயிகளின் நாடகம் சென்னையில் நவ. 13 ஆம் தேதியன்று, பகிரங்கமாக அம்பலப்படுத்தப்படும் என்று எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் முதல் நாளே அறிவித்திருந்தனர். முருகேசனை வைத்தே பேட்டி கொடுக்கவும் திட்டமிருந்தது. அவரை சென்னைக்கு அழைத்துச்செல்வதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார் செய்துவந் தார். இந்நிலையில் திடீரெனக் காணாமல்போனார் விஜயகுமார். அன்று இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார் விஜயகுமார். அப்புறம்தான் அவரை கியூ பிராஞ்ச் போலீசார் கடத்திச்சென்ற சம்பவம் அம்பலத்துக்கு வந்தது. விசாரணைக்கு எப்போது கூப்பிட்டாலும் ஆஜராகவேண்டுமென்று எழுதி, கையெழுத்தும் பெற்றுக்கொண்டு இரவில் அனுப்பிவைத்துள்ளனர் போலீசார்.
விஜயகுமார் மீதான விசாரணைகள் குறித்து கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் கோகிலாவிடம் கேட்டபோது, ""விஜயகுமாரின் செல்போனிலிருந்து யார் யாருக்கு அழைப்புகள் போயிருக்கின்றன என் பதை ஆய்வு செய்துவருகிறோம். விசாரணை முடிந் ததும் விட்டுவிடுவோம்''' என நம்மிடம் சொன்னார்.
நவ. 13 ஆம் தேதி நாம் விஜயகுமாரை அவருடைய வீட்டில் சந்தித்தபோது, ""எங்கள் நிலத்தை ஒட்டித்தான் நோட்ரிடேம் பள்ளிக்கூடம் இருக்கிறது. நிலம் விற்ற வகையில் பள்ளி நிர்வாகம் எனக்குப் பணம்கொடுக்க வேண்டியதிருக்கிறது. அதுதொடர்பாக பள்ளி முதல்வரை அடிக்கடி பார்த்துவிட்டு வருவேன். நவ. 12 ஆம் தேதியும் பள்ளி முதல்வரை பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, திடீரென்று நாலைந்து பேர் வந்தனர். "நீங்கள்தானே விஜயகுமார்?' என்று கேட்டு, என்னை குண்டுக்கட்டாக தூக்கி காருக்குள் போட்டுக்கொண்டு சென்றனர். இரண்டு கார்களில் அவர்கள் வந்திருந்தனர்.
காருக்குள் வைத்து, எடுத்த எடுப்பிலேயே என்னிடம், "முருகேசனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?' என்று கேட்டார்கள். "எந்த முருகேசன்' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "7- வது மைல் முருகேசன்' என்றார்கள். "அவர் எங்கள் கட்சிக் காரர்' என்று பதில் கூறினேன். பிறகு, "எட்டுவழிச் சாலைத் திட்டத்தை எதற்காக எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறீர்கள்?' என எட்டுவழிச் சாலை பற்றியே சுற்றிச் சுற்றி விசாரித்தனர். பின்னர், ஆத்தூரில் உள்ள ராமா ஹோட்டல் அருகே காரை நிறுத்திவிட்டு, அங்கேயே இரண்டுமணி நேரம் விசாரித்தனர். "எட்டுவழிச் சாலைக்கு எதிராக மேற்கொண்டு போராடினால் நீங்கள் பல வழக்குகளையும், சித்ரவதைகளையும் சந்திக்க நேரிடும்' என்று மிரட்டினர். உள்ளாட்சித் தேர்தலில் என்னை எதிர்த்துப் போட்டியிட்டால் வெற்றி கிடைக்காது என்ற எண்ணத்தில் என்மீது பொய் வழக்குப்போட்டு சிறையில் தள்ள ஆளுங்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்'' என்றார் விஜயகுமார். இதற்கிடையே, எட்டுவழிச்சாலைக்கு எதிராகப் போராடி வரும் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த கோபால் என்பவரிடமும் கியூ பிரிவு போலீ சார் விசாரித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப் பாளர்களுள் ஒருவரான அருளிடம் கேட்டோம்.
""எட்டுவழிச்சாலை அமைய உள்ள சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் 99 சதவீத விவசாயிகள் இத்திட்டத்திற்கு நிலம்கொடுக்க விரும்பவில்லை. இத்திட்டத்தை எதிர்த்துப் போராடுவோர் மீது புதிதாக குண்டாஸ் வழக்குப் போடுகிறார்கள். அல்லது மாவோயிஸ்ட், நக்சலைட் என்று பட்டம் கட்டுகிறார்கள்.
எட்டுவழிச்சாலைத் திட்டத்தில் ஆளுங் கட்சியினரின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்த, நவ. 13 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்காக நாங்கள் ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருந்போது, எங்கள் அறைக்கு எதிர் வீட்டுக்காரர்களிடம் கியூ பிரிவு போலீசார் சென்று, இங்கே மாவோயிஸ்டுகள் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது என்று விசா ரித்துள்ளார்கள். இப்படி தொடர்ந்து உளவியல்ரீதி யாக எங்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி, பொய் வழக்குகள் போடுவதில் எல்லோரையும் மிஞ்சிவிட்டார். இது நேர்மையான அரசாங்கமாக இருந்தால், போராட்டக்காரர்கள் மீது சட்டரீதியாக வழக்குப் போடட்டும். அதைவிட்டுவிட்டு போலீசார் மூலம் மிரட்டுவது நல்ல அரசுக்கு அழகல்ல,'' என்றார் அருள்.
-இளையராஜா