டக்கு மண்டலத்திலுள்ள 5 மாவட்டங்களில் எஸ்.பி. இன்ஸ்பெக்டர் பதவிகள் காலியாக இருக்கிறது என புலம்புகிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

வடக்கு மண்டலத்தின்கீழ் காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் சரகங்கள் (டி.ஐ.ஜி.கள்) உள்ளன. இந்த மூன்று சரகத்தின்கீழ் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் என 10 மாவட்டங்கள் உள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கண், காது, மனசாட்சியாக இருக்கவேண்டியவர்கள் எஸ்.பி. தனிப்பிரிவு ஆய்வாளர்கள். இவர்களின் பணி, மாவட்டத்தில் நடக்கும் அனைத்து தகவல்களையும் எஸ்.பி.யின் கவனத்துக்கு கொண்டுசெல்வது, இதற்காக ஒவ்வொரு காவல்நிலையத்திலும் எஸ்.பி., ஏட்டுக்கள் இருப்பர்.

IG

இவர்கள் காவல்நிலைய எல்லைக்குள், காவல்நிலையத்துக்குள் எது நடந்தாலும் உடனுக்குடன் எஸ்.பி. இன்ஸ்பெக்டருக்கு தெரிவிக்கவேண்டும், அதனை அவர் எஸ்.பி.க்கு தெரிவிப்பார். எஸ்.பி. உத்தரவை காவல்நிலைய ஆய்வாளர்களுக்கு தெரிவித்து அதனைக் கண்காணித்து எஸ்.பி.யிடம் ரிப்போர்ட் தருவது, மாவட்ட நிலவரம் குறித்து தினமும் ஐ.ஐ., டி.ஐ.ஜி.க்கு புல்லட்டின் அனுப்புவது, உளவு அமைப்புகள் அனுப்பும் தகவல் களை ரகசியமாக விசாரிப்பது, எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., டி.எஸ். பி.கள் குறித்த தகவல் களை உயரதிகாரிக்கு அனுப்புவதும் எஸ்.பி. இன்ஸ்பெக்டர் பணி.

எஸ்.பி. இன்ஸ்பெக் டர்கள் சிலர் தங்கள் பணியை மறந்து அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க்கை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அது உண்மையா என தனது தனி டீம் மூலம் 10 மாவட்ட எஸ்.பி. இன்ஸ் பெக்டர்கள் குறித்து ரகசிய விசாரணை நடத்தினார். எஸ்.பி.க்களாக இருப்பவர்கள் 90 சதவிகிதம் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டரையே நம்புவார்கள். அதை பயன்படுத்திக்கொண்டு தங்களது திறமையை பணம் சம்பாதிப்பதில் மட்டுமே சிலர் காட்டுகிறார்கள். குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களோடு நெருக்கம், தவறு செய்யும் அதிகாரிகளைக் காப்பாற்ற விசாரணையை திசைதிருப்புகிறார்கள் என ஐ.ஜி.யின் விசாரணையில் தெரியவந்தது.

உதாரணமாக, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. இன்ஸ்பெக்டரின் உறவினரான இளைஞரொருவர், திருவண்ணாமலையில் தொழிலதிபர் மகனைக் கடத்த பெங்களுரூவிலிருந்து வந்த ரவுடி கும்பலுக்கு பலவழிகளில் உதவியாக இருந்துள் ளார். அந்த கும்பலை பிடித்தபோது தனது சொந்தக்கார பையனை கைதிலிருந்து தப்பிக்கவைத்தார். இந்த தகவல் ஐ.ஜி. கவனத்துக்குச் சென்றபோது அதிர்ச்சியாகி விட்டார். அந்த இன்ஸ்பெக்டர் குறித்து அவரது தனிப்படை விசாரித்தபோது, வாணியம்பாடி, ஆம்பூர் பாலாற்றில் நடக்கும் மணல் கொள்ளைக்கு துணைபோய் சம்பாதிக்கிறார், மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத விஷயங்களின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை, எஸ்.பி.க்கு தகவல் தெரியப்படுத்தாமல் மறைத்து தனி ராஜாங்கம் நடத்துகிறார் என எஸ்.பி.யே தனி நோட் வைத்தார்.

திருவண்ணாமலை எஸ்.பி. இன்ஸ்பெக்டராக இருந்தவர் சுமார் 70 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கியுள்ளார். ஒரு ஏக்கர் மிகக்குறைவாக 1 லட்சம் என்றாலும் 70 லட்சம் இவருக்கு எங்கிருந்து வந்தது? என அவரால் பாதிக்கப் பட்டவர்கள் ஆதாரத்தோடு ஐ.ஜி.க்கு புகார் அனுப்பினர். அதனை விசாரித்தவர், உண்மை எனத் தெரிந்து அதிர்ச்சியாகிவிட்டார். லஞ்சஒழிப்புத் துறையும் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ஃபைல் அனுப்பியுள்ளது, அந்த இன்ஸ்பெக்டர் பல வழிகளில் ஐ.ஜி.யிடம் அந்த ஃபைலை நிறுத்தி வைக்க முயற்சித்துவருகிறார்.

அதேபோல் சில இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்களின் இல்லீகல் ஆக்டிவிட்டிஸ் குறித்தும் அறிந்தார். அதனால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை, கடலூர், விழுப்புரம் எஸ்.பி. இன்ஸ் பெக்டர்களை இடமாற்றம் செய்தார். காலியாக வுள்ள இடத்துக்கு புதிய இன்ஸ்பெக்டர்களை உடனே நியமனம் செய்யவில்லை. அங்கு புதிதாக நியமனம் செய்ய இன்ஸ்பெக்டர்கள் பின்னணி யை அலசினார் ஐ.ஜி.

வேலூர் மாவட்டத்தில் இன்ஸ்பெக் டர்கள் பார்த்தசாரதி, நாகராஜ், மைதிலி, சீனிவாசன், காண்டீபன், விஜய் உட்பட 10 பேர் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக முயற்சித்தனர். அப்போது மாவட்ட அமைச்சர் துரைமுருகன், வேலூர் எஸ்.பி. மதிவாணன் பெயரைச்சொல்லி, குற்றப்பிரிவு டி.எஸ்.பி திருநாவுக்கரசு, டி.எஸ்.பி பழனி டீம் லாபி செய்தது. எஸ்.பி. இன்ஸ் பெக்டர் மற்றும் முக்கிய காவல்நிலையங்களில் தங்களுக்குத் தோதான இன்ஸ்பெக்டர்கள் இருக்கவேண்டும் என இவர்கள் லாபிசெய்து நியமிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியானார். இதனால் எஸ்.பி. இன்ஸ்பெக்டராக யாரையும் தேர்வு செய்யவில்லை. விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. இன்ஸ்பெக்டராக 10 தினங்களுக்கு முன்புதான் எஸ்.ஐ.யாக இருந்து பதவிஉயர்வு பெற்ற பிரகாஷ் என்கிற ஜூனியரை நியமித்துள்ளார்.

மற்ற மாவட்டங்களில் கடந்த 3 மாதமாக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பதவி காலியாக இருப்பதால் பணி நெருக்கடி அதிகமாகவுள்ளது என எஸ்.பி தனிப்பிரிவில் புலம்பல் குரல்கள் கேட்பதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது டீம் மூலம் திறமையான இன்ஸ்பெக்டர்களைத் தேடிவருகிறார் ஐ.ஜி. எல்லாத்தையும் கண்ணுல வௌக்கெண்ணய் விட்டு கண்காணிக்கிறார் எஸ்.பி. இன்ஸ்பெக்டர் பொறுப்பே வேணாம்னு அலறி ஓடுறாங்க. யாரும் தப்பு செய்யமாட் டோம்னு முன்வந்து நிற்கல என்கிறார்கள் ஐ.ஜி. அலுவலகத் தரப்பில்.

யார் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக வரப்போகிறார் என ஒவ்வொரு மாவட்ட காவல்துறையினரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

Advertisment