ஒன்பதரை மணிநேர துப்பாக்கிக் குண்டுகளின் முழக்கங்களுக்குப் பின் மௌனமாக இருக்கின்றன அலோன்டி மலைப்பகுதிகள். என்கவுண்டர் நடந்த இடம் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர் மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதி. என்கவுண்டர் நடந்த வனப்பகுதியில் மூன்று கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்துக்கு காலி துப்பாக்கிக் குண்டுகள், பலியானவர்களின் ரத்தக் கறைகள், மரங்களைச் சிராய்த்துச் சென்ற துப்பாக்கிக் குண்டுகள், பலியானவர்களைத் தவிர்த்து தப்பிச்சென்ற நக்ஸல்களின் உடைமைப் பொருட்கள் கிடக்கின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி பகுதியில் நடந்த என்கவுண்டரில் 26 நக்ஸல்கள் கொல்லப்பட்டிருப்பதும், சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மிலிந்த் டெல்டும்டே என்கவுண்டரில் பலியாகியிருப்பதும் சத்தீஷ்கர்- மகாராஷ்டிர காவல்துறை வட்டாரங்களிலும், தேடுதல் படையினரிடத்திலும் உற்சாகத்தைப் பெருக்கியுள்ளது.
எப்படி திட்டமிடப்பட்டது இந்த என்கவுண்டர்? மாவோயிஸ்ட்டுகள் இந்தப் பகுதிக்கு வருவதை முன்கூட்டியே தேடுதல் படை அறிந்திருந்ததா?
சத்தீஷ்கர் மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களில், தேச வளர்ச்சி என்ற பெயரில் மக்கள் விரோதத் திட்டங்களால் பாதிக்கப்படும் மக்களுக்காகப் போராடும் குழுவாக சி.பி.ஐ. மாவோயிஸ்ட் குழு தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது. இந்தப் பிரிவு தேர்தலில் பங்கேற்பதில்லை. ஆயுதம்தாங்கிய போராளிகளுடன் அரசுக்கு எதிராகப் போராடிவருகிறது.
வழக்கமாக டிசம்பர் 2-ஆம் தேதி கட்சி ஸ்தாபிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு நக்ஸல் வாரத்தை அதன் தலைவர்கள் கொண்டாடுவர். அதற்கான விவாதத்துக்காகவும், பயிற்சி முகாமாகவும் மாவோயிஸ்ட்டுகளின் சந்திப்பு நடைபெற இருந்ததாகவும், அதில் முக்கிய தலைவர்கள் விவாதிப்பதாகவும் காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த பயிற்சி முகாமுக்கு 100 ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட்டுகள் வருவதாகவும் தெரியவந்திருக்கிறது. தகவலை உறுதிசெய்துகொண்ட காவல்துறை, அவர்களைத் தாக்கவும் கைதுசெய்யவும் விரைவாகத் திட்டமிட்டது.
மகாராஷ்டிராவின் கூடுதல் எஸ்.பி. சோமே முன்டே தலைமை யில் ஒரு தாக்குதல் அணி ஆயத்தம் செய்யப்பட்டது. இதில் சி-60 எனப்படும் ஸ்பெஷல் ஆபரேஷன் ஸ்குவாட்ஸ், ஸ்பெஷல் ஆக்சன் குருப்பைச் சேர்ந்த, தாக்குதலில் பயிற்சிபெற்ற 300 வீரர்கள் தயார் செய்யப்பட்டனர்.
மாவோயிஸ்ட்டுகள் பயிற்சி முகாம் பற்றிய திட்டமிடுதலில் இருந்தபோது, சிறப்புப் படை சத்தமின்றி அவர்களைச் சுற்றிவளைக்கத் தொடங்கியது. ஒருகட்டத்தில் அதிரடிப் படையினர் வருவதை உய்த்துணர்ந்துகொண்ட மாவோயிஸ்ட்டுகள் தாக்கத் தொடங்க, இரு தரப்பிலுமிருந்து தோட்டாக்கள் பறக்கத் தொடங்கின.
நவம்பர் 13-ஆம் தேதி காலை 6:00 மணிக்குத் தொடங்கிய தாக்கு தல், மாலை 3.30 வரை நீடித்தது. தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டதால், அண்டை கிராமங் களைச் சேர்ந்தவர்கள் யாரும் வெளியே வரத் துணியவில்லை. துப்பாக்கிச் சத்தம் முற்றிலும் ஓய்ந்தபிறகே வெளியே வந்திருக் கின்றனர். கிட்டத்தட்ட ஒன்பதரை மணி நேரம் நீடித்த தாக்குதலில் அதிரடிப் படையின் கை ஓங்க, எஞ்சிய மாவோயிஸ்ட்டுகள் தங்களது ஆயுதத்தைக் கைவிட்டு விட்டு தப்பியோடியிருக்கின்றனர் என்கிறார்கள் கிராமத்தினர்.
அண்டை கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அளித்த தகவல்படி, மாவோயிஸ்ட்டுகளின் சந்திப்பை முன்கூட்டியே அறிந்த காவல்துறை, வெள்ளிக்கிழமை மாலையே முக்கிய இடங்களில் சென்று பதுங்கிக் காத்தி ருந்திருக்கிறது. மாவோயிஸ்ட்டுகளின் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத் தில் சுற்றிவளைத்துத் தாக்கியதால் அவர்களின் கை ஓங்குவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.
மகாராஷ்டிர காவல்துறை, “"வழக்கமாக அவர்கள் கெரில்லா தாக்குதல் முறை நடத்துவதால் அவர் களது கை ஓங்கியிருக்கும். இந்த முறை அவர்கள் சந்திக்கப்போவது தெரிந்து நாங்கள் மறைந்திருந்து தாக்கியதால், எங்கள் தரப்பின் கை ஓங்கியிருந்தது. தேடுதல் படையில் பங்குபெற்ற நான்கு பேர் காயம்பட்டதைத் தவிர பெரிய பாதிப்புகள் எங்களுக்கு ஏற்படவில்லை.
இறந்த மாவோயிஸ்ட்டுகளின் உடல்கள் மார்டின்டோலா காடுகளிலிருந்து அருகிலிருந்த காவல் நிலையத்துக்குக் கொண்டுசெல்லப் பட்டன. அவர்கள் தவறவிட்ட நவீன ஆயுதங்களையும் சேகரித்தோம். இறந்தவர்களில் 17 பேரை அடையாளம் கண்டுவிட்டோம். மற்றவர்களை அடையாளம் காணும் பணி துரிதப் படுத்தப்பட்டு வருகிறது''” என்கிறது.
கட்சிரோலியின் எஸ்.பி.யான அங்கித் கோயல், “இந்த என்கவுண்டரில் மிகப்பெரிய வெற்றி மாவோயிஸ்ட் நெட்வொர்க்கின் முக்கிய ஆளுமை யான மிலிந்த் டெல்டும்டே கொல்லப் பட்டதுதான். அவர்தான் சி.பி.ஐ. மாவோயிஸ்ட்டுகளின் மாஸ்டர் மைண்ட். தவிர லோகேஷ், மகேஷ் கோட்டா என்ற இரு அடுத்த கட்ட முக்கியத் தலைவர்களும் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இந்த மூன்று மாநிலங்களில் இன்னும் சில காலத் துக்கு இவர்களது செயல்பாடு முடக்கப் படும். வளர்ச்சிப் பணிகள் வேகமாக நடக்கும்''’என்கிறார்.
பீமா கோரேகான் வழக்கில் பிரதமர் மோடிக்கெதிராக கைது செய்யப்பட்ட அறிஞர்களில் ஒருவர் ஆனந்த் டெல்டும்டே. ஆனந்த் சமூக உரிமைப் போராளி, எழுத்தாளர் ஆவார். மாறாக, அவரது சகோதர ரான மிலிந்த் டெல்டும்டே சி.பி.ஐ. மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவராவார். இவரும் பீமா கோரேகான் வழக்கில் தேடப்பட்டு வந்தார். இதுதவிர வேறுபல 67 குற்றங்கள் காவல்துறையால் இவர்மீது கூறப்படுகின்றன. அரசுத் தரப்பில் இவரைப் பற்றிய நம்பகமான துப்பு தருபவர்களுக்கு 50 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட் டிருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக மாவோயிஸ்ட் இயக்கம் இப்பகுதியில் பெற்று வந்த வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாகத் திகழ்ந்தார் மிலிந்த்.
2018-ஆம் ஆண்டில் மட்டும் கட்சிரோலியில் நடந்த இருவேறு என்கவுண்டர்களில் 40 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். தற்போது 26 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அவ்வமைப்புக்கு பலத்த பேரிடியாக அமைந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, பீகார் மாநிலம் கயா மாவட்டத்திலுள்ள மனோபார் கிராமத்தில் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி இரவு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை சி.பி.ஐ. மாவோயிஸ்டுகள் பிரிவைச் சேர்ந்த நக்ஸலைட்டுகள் தூக்கிலிட்டுக் கொன்றிருக்கின்றனர். அவர்களை மாட்டுத் தொழுவத்திலுள்ள மூங்கில் கம்பு களில் தொங்கவிட்டு காட்சிப்படுத்தியதுடன் அவர்களின் வீட்டையும் குண்டுவைத்துத் தகர்த்திருக்கின்றனர்.
கடந்த வருடம் இதே கிராமத்தில் 4 நக்ஸலைட்டு கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்த பழிவாங்கல் நடைபெற்றதுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கடந்த ஆண்டு நடந்தது என்கவுண்டரே அல்ல,… அது வெறும் ஏமாற்று. போலீஸ் தரப்பின் ஆதரவுடன் அந்த நான்கு பேரும் உணவில் விஷம் வைத்துக் கொல்லப் பட்டனர். பின், இறந்த உடல்களின் மீது துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டரில் கொன்றதாக காவல்துறை பெருமையடித்துக்கொண்டது. துரோகிகளுக்கு உரிய பாடம் புகட்டப்பட்டது'' என சம்பவம் நடந்த வீட்டில் பிட் நோட்டீஸ்களையும் விட்டுச் சென்றிருக்கின்றனர் மாவோயிஸ்டுகள்.
மாவோயிஸ்ட்டுகளால் போலீஸ் இன்பார்மர் எனக் குற்றம்சாட்டப்பட்ட சரயு சிங், வீட்டைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டிருப்பது இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்றபோது சரயு சிங் வீட்டிலில் லாததால் அவர் உயிர்தப்பியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தின் தேஹங் பகுதியில், அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப் பிரிவின் ராணுவ கர்னல் விப்லவ் திரிபாதி, கண்ணிவெடித் தாக்குதலில் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யுள்ளது.
தனது மனைவி, மகன் உட்பட நான்கு ராணுவ வீரர்களுடன் பாது காப்பு வாகனத்தில் சென்றுகொண்டி ருந்தார் திரிபாதி. அப்போது பீப்பிள் லிபரேஷன் ஆர்மி, நாகா பீபிள்ஸ் ப்ரான்ட் அமைப்பினர் அவரது வாகனத்தைத் துப்பாக்கியால் சுட்டனர். திரிபாதியுடன் பாதுகாப்புக்காக வந்த பாதுகாப்புப் படையினர் பதிலுக்கு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்து தப்பமுயன்ற திரிபாதியின் வாகனம் கண்ணி வெடியில் சிக்கியதில் திரிபாதி, அவரது மனைவி, மகனுடன் நான்கு பாதுகாப்பு அதிகாரிகளும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தனர். இவர்களது மரணத்துக்கு இரு அமைப்புகளும் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து விப்லவ் திரிபாதியின் மரணத்துக்குக் காரணமான தீவிரவாத அமைப்பினர் மீதான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப் பட்டுள்ளது.
பலியான கர்னல் விப்லவ் திரிபாதி மற்றும் அதிகாரிகளுக்கு அரசு மரியாதை யுடன் அஞ்சலி செலுத்திய மணிப்பூர் முதல்வர் பீரேன் சிங், “"இத்தகைய தீவிரவாதச் செயல்களை இந்தியா பொறுத்துக்கொண்டிருக்காது''’என எச்சரித்துள்ளார்.
தீவிரவாதச் செயல்களுக்கான அடிப்படை பிரச்சினை என்பதை ஆய்வு செய்து தீர்வு காணாதவரை, இரு தரப்பு ரத்தச் சிதறல்கள் இந்தியாவில் தெறித்துக் கொண்டிருக்கும்.