சொந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.வை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது தி.மு.க. தலைமை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மார்ச் 4-ந் தேதி நடந்த மேயர், துணை மேயர், சேர்மன், துணை சேர்மன் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் ஏகப்பட்ட முட்டல் மோதல்.
முதல் முறையாக மாநகராட்சியாகி யிருக்கும் கடலூரில் மேயர் பதவிக்கு தன் மனைவி கீதாவைக் களமிறக்க மாவட்டப் பொருளாளர் குணசேகரன் விரும்பினார். மா.செ.வும் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தேர்தலுக்கு முன்பே உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் இவர் தரப்பு சொல்கிறது. ஆனால், எம்.ஆர்.கே.வின் நம்பிக்கைக் குரியவரான நகரச் செயலாளர் சுந்தரி அதிகாரப்பூர்வ மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நகரச் செயலாளருக்கும் எம்.எல்.ஏ. அய்யப்பனுக்கும் உரசல்கள் தொடர்ந்து வரும் நிலையில், அய்யப் பன் ஆதரவுடன் போட்டி யாகக் களமிறங்கத் தீர்மானித் தது குணசேகரன் தரப்பு.
கவுன்சிலர்களில் 14 பேரை 3ஆம் தேதி புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள தனியார் சொகுசு ஓட்டல் மற்றும் மொரட்டாண்டியிலுள்ள பண்ணை வீட்டில் தங்க வைத்தனர். இதனால் கடுப் பான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காவல் துறை மற்றும் புதுச்சேரி தி.மு.க.வினரை நாட கவுன்சிலர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பகுதி காவல்துறை மற்றும் தி.மு.க.வினரால் சிறைபிடிக்கப்பட்டது. தி.மு.க தலைமைக்கும் தகவல் தெரிவிக்கப்பட, அன்பகம் கலையைக் களத்திற்கு அனுப்பினார் மு.க.ஸ்டாலின். அய்யப்பன்+குண சேகரன் தரப்பின் திட்டத்தை முறியடித்து, 14ல் 7 கவுன்சிலர்களை அழைத்து வந்து வாக்களிக்கச் செய்தது எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்+அன்பகம் கலை டீம். மறியல் அளவிற்குச் சென்ற எம்.எல்.ஏ. அய்யப்பன் கைது செய்யப்பட்டார்.
அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி ராஜாவை எதிர்த்து, போட்டி வேட்பாளர் கீதா குணசேகரனும் வேட்பு மனு தாக்கல் செய்தார். மொத்தமுள்ள 45 கவுன்சிலர்களில் 32 கவுன்சிலர்கள் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். சுந்தரிக்கு 19 வாக்குகளும், கீதாவுக்கு 12 வாக்குகளும் கிடைக்க... 7 வாக்குகள் வித்தியாசத்தில் சுந்தரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. கீதா தரப்போ, தங்களுடன் இருந்த 14 பேரில் மீதமுள்ள 7 பேரை வாக்களிக்க அனு மதிக்காமல் சிறை வைத்துவிட்டனர். இல்லையென்றால் எங்களுக்கு வெற்றி கிடைத்திருக் கும் என்றது. போட்டி வேட்பாளர் கீதாவின் கணவர் குணசேகரன், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி, தற்கொலைக்கு முயன்றதால் பதற்றமும் பரபரப்பும் கூடுதலானது. இந்த களேபரத்திற்கிடையில்தான், மார்ச் 6 அன்று அய்யப்பனை சஸ்பெண்ட் செய்ததோடு, அவர் மீது ஆள் கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் துணை மேயர் பதவிக்கும் தேர்தலுக்கு முன் கடும் போட்டி இருந்தது. தி.மு.க.வில் தமிழரசன் உள்பட பலரும் எதிர்பார்த்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன் சகோ தரர் கண்ணனும் ரேஸில் இருந் தார். விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் கூடுதல் அழுத்தம் தரப் பட்டது. வேல்முருகனை எம்.ஆர். கே. சமாதானம் செய்ய, கடலூர் துணைச்சேர்மன் பதவி வி.சி.க.வுக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சி சார்பில் தாமரைச்செல்வன் ஒரு மனதாகத் தேர்வானார்.
இதே மாவட்டத் தில் உள்ள பண்ருட்டி நகராட்சித் தலைவர் பதவிக்கு நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் ஆனந்தி சரவணன், இருவரும் எதிர்பார்த்திருந் தனர். இருவரும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். ஆனால், மாவட்ட நிர்வாகம் அமைச்சர் சி.வெ.கணேசன் வசம் உள்ளது. அவருடைய ஆதரவிலும், நெய்வேலி எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் சிபாரிசிலும், காய்கனி வியாபாரி கள் சங்கத் தலைவரும் 2-வது வார்டு கவுன்சிலருமான சிவாவை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித் தது தலைமை. சிவாவை எதிர்த்து, தி.மு.க நகர செயலாளர் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். 33 கவுன்சிலர்களும் வாக்களித்த நிலையில் சிவாவுக்கு 16 வாக்குகளும், ராஜேந்திரனுக்கு 17 வாக்கு களும் கிடைக்க 1 ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.கவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை, நகர செயலாளர் வீழ்த்தினார். இதனால் சிவா தரப்பு தர்ணா செய் தது. துணைச் சேர்மன் தேர்தலும் நின்று போனது.
விடுதலை சிறுத்தைகளுக்கு நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் பதவியைத் தி.மு.க ஒதுக்கியிருந் தது. ஆனால், தேர்தலின்போதே, தி.மு.க தரப்பில் திரைப்பட தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் மனைவி ஜெயந்தியை தலைவராக்க வேண்டும் என்பதற்காக 25-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்காக ஒரு கோடி ரூபாய்க்குமேல் செலவழித்துள்ளார். மாவட் டச் செயலாளர் தனக்கு உத்தரவாதம் அளித்ததாகவும் கூறியிருந்தார். வி.சி.க.வுக்கு ஒதுக்கப்பட்டு அதன் நகரச் செயலாளர் திருமாறனின் மனைவி கிரிஜா நிறுத்தப்பட்ட நிலையில், போட்டி வேட்பாளராக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் களமிறங்கி வெற்றி பெற் றார். வி.சி.க.வினர் முற்றுகைப் போராட்டம் நடத்தி னர். துணை சேர்மன் பொறுப்பாவது தாருங்கள் என வி.சி.க கேட்டு கிரிஜா போட்டியிட, அவரை எதிர்த்து தி.மு.க. நகரச் செயலாளர் மணிவண்ணன் மனைவி ஜெயபிரபா களமிறங்கினார். வி.சி.க.வினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். ஜெயபிரபா மயங்கிவிழ, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸை முற்றுகையிட்டனர். கடைசியில், தி.மு.க ஜெய பிரபாவே துணை சேர்மன் ஆனார். எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் காரும் முற்றுகையிடப்பட, போலீசார் தடியடி நடத்தினர். நெல்லிக்குப்பத்தில் கூட்டணிக் கட்சியைத் தோற்கடித்த தி.மு.க.வினரின் நடவடிக்கை அறிவாலயம் வரை அதிர்வுகளை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதன் வேட்பாளர் வேல்முருகனுக்கு எதிராக, தி.மு.க கவுன்சிலர் சம்சத்பேகம் போட்டி வேட்பாளராகக் களமிறங்கினார். தேர்தலில் சம்சத்பேகம் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற, ஆத்திரமடைந்த காங்கிரஸார், விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். துணைத் தலைவருக்கான தேர்தலிலும் காங்கிரஸ் வேல்முருகன் போட்டியிட, அதிலும் சுயேட்சை வேட்பாளர் தாமோதரன் போட்டியிட்டு துணைத் தலைவரானார்.
தேனி மாவட்டத்திலும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சியை தி.மு.க கைப்பற்ற கூட்டணிக் குழப்பங்கள் அதிகமாகின. கோவை பெரியபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சேர்மன் பதவியை தி.மு.க.வே கைப்பற்றிக் கொண்டது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் சேர்மன் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கும் போட்டி வேட்பாளராகக் களமிறங்கிய தி.மு.க கவுன்சிலர் சேர்மன் ஆனார்.
தமிழகத்தில் பரவலாகத் தோழமைக் கட்சியினரை மட்டுமின்றி, சொந்தக் கட்சி வேட்பாளர்களையும் போட்டி தி.மு.க வினர் தோற்கடித்த விவரம் அறிவாலயத் திற்கு வந்தபடியே இருக்க தி.மு.க தலைவ ரான மு.க.ஸ்டாலின் கடும் அதிர்ச்சி அடைந்தார். தோழமைக் கட்சித் தலைவர் களின் அதிருப்தி குரல்களும் அவரை எட்டின. ‘குற்ற உணர்ச்சியால் குறுகி நிற் கிறேன்’ என அறிக்கை வெளியிட்டதுடன், “தலைமையை மீறி தோழமைக் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாகப் பொறுப்பை விட்டு விலகி நேரில் வந்து சந்திக்க வேண்டும்” என எச்சரிக்கையும் விடுத்தார். ஓரிருவர் உடனடியாக ராஜினாமா செய்த நிலை யில், ஒரு சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் புகைச்சல் ஓயவில்லை.
சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சியினருக்கு தொகுதிகளை முடிவு செய்ததுபோல, மேயர்-சேர்மன் தேர்த லில் முன்கூட்டி முடிவு செய்யாமல் மறை முகத் தேர்தல் வரை தலைமை இழுத் தடித்ததும் இதற்கு முக்கிய காரணமாகும். கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஓரிரு கவுன்சிலர்கள் மட்டுமே உள்ள நிலையில், அவர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத் தலைமைப் பொறுப்பைக் கொடுக்க உள்ளூர் தி.மு.க.வினர் விரும்பவில்லை. அத்துடன், மாவட்டச் செயலாளர்கள் ஏற்கனவே அளித்த உத்தரவாதத்தை நம்பி, சேர்மன் பதவி கிடைக்கும் எனக் கணக்கிட்டு மற்ற வார்டு கவுன்சிலர்களுக் கும் சேர்த்து செலவு செய்து ஜெயித்தவர்கள், தங்கள் நகராட்சி, பேரூராட்சிகளை கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கியதும் அதிர்ச்சி அடைந்தார்கள். எல்லாமும் சேர்த்து கூட்டணிக் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.
மயிலாடுதுறை நகராட்சி சேர்மன் வேட்பாளரான தி.மு.க நகரச் செயலாளர் குண்டாமணியை எதிர்த்து திடீரென களமிறங்கிய அதே கட்சிக்காரர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர். இப்படி எல்லை தாண்டிய போட்டிகளும் நடந்துள்ளன. அதிரடி நடவடிக்கையைத் தி.மு.க தலைமை எடுத்தால் பாரபட்சமின்றி எல்லாத் தரப்பிலும் எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள்.
மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சொந்தக்கட்சிக்காரர்களால் சவாலை எதிர்நோக்குகிறார். ஓராண்டு முடிவதற்குள்ளாக உருவாகியுள்ள இந்த உள்கட்சி சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் முதல்வர் என்பதே உண்மைத் தொண்டர்களின் எதிர்பார்ப்பு.
-சுந்தரபாண்டியன், கீரன்