மாணவிகளிடம் சில்மிஷம் செய்த மற்றொரு ஓநாய் கடலூர் மாவட்டத்தில் சிக்கியிருக்கிறது.
விருத்தாசலத்தை அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தில் உள்ளது புனித ஆக்னேஸ் மேல்நிலைப் பள்ளி. இதோடு, அமலா சிறுவர்-சிறுமியர் இல்லம், அமலா அன்னை அறக்கட்டளை - முதியோர் இல்லம் ஆகியவற்றுடன் இந்தப் பள்ளி நிர்வாகம் விரிந்து பரந்திருக்கிறது.
இந்த அமலா சிறுவர் சிறுமியர் இல்லத்தில் தங்கி இருந்தபடி, நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் அந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் காவல்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மூலம் இங்கு அனுப்பப்பட்டவர்கள்.
இந்த நிலையில், பெரியகாட்டுசாகையை சேர்ந்த 14 வயது வித்திகாவும், கள்ளக்குறிச்சி- சித்தலூரை சேர்ந்த 15 வயது ரோஜாவும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) காணாமல் போனதாக அப்பள்ளியின் தாளாளர் ஜேசுதாஸ்ராஜா அக்டோபர் 26-ஆம் தேதி ஆலடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். களமிறங்கிய போலீசார் வித்திகாவை ஓலையூரில் உள்ள உறவினர் வீட்டிலும், ரோஜாவை உளுந்தூர்பேட்டை அருகிலும் மீட்டு, விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்தனர். பின்னர், விருத்தாசலம் ஜுடிசியல் நீதிபதியிடம் கொண்டுசென்றனர்.
நீதிபதி வெங்கடேஸ்வரன், "அவர்களை, எதனால் விடுதியில் இருந்து வெளியேறினீர்கள்?' என்று விசாரிக்க, மாணவிகளோ, தங்களது காப்பக நிர்வாகி ஜேசுதாஸ்ராஜா அசிங்கப்படுத்துவதாக வும், மாடியில் உள்ள தனது அறையிலிருந்து பார்க்கும்படி குளியலறையைக் கட்டி, அங்கே பெண்பிள்ளைகளான தாங்கள், குளிப்பதைப் பார்த்து ரசிப்பதாகவும், அங்கே குளிக்காவிட்டால், அடித்துத் துன்புறுத்துவதாகவும் சொல்ல... நீதிமன்றமே அதிர்ந்தது.
இதைத்தொடர்ந்து அந்த ஜேசுதாஸ்ராஜா என்கிற ஓநாயை, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டமான போக்ஸோவில் கைது செய்தனர். உடனே உடல்நலக் குறைவு என்று ஜேசுதாஸ் டிராமா போட... அவரை கடலூர் மருத்துவமனைக்கே சென்று, போக்ஸோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி, 15 நாள் ரிமாண்ட் செய்து சிறைக்கு அனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து அந்த இல்லத்தில் தங்கி யிருந்த 40 சிறுமிகள், கடலூர் அரசு சிறுமியர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து விருதாச்சலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அங்கு மாணவர்கள் அட்மிஷன் போடப்பட்ட விவரங்கள் சரியாக இருந்தன. ஆனால் அவர்களை வெளியே அனுப்பிய விவரம் சரியாக இல்லை. அங்குள்ள ஆவணங் களை பறிமுதல் செய்து விசாரணைக்காக எடுத்துச் சென்றார்.
பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் நம்மிடம், ‘"இங்கு சிறுமிகள் மீது பாலியல் ரீதியான சீண்டல்கள், துன்புறுத்தல்கள் பற்றிய புகார்கள் அடிக்கடி எழுவது வழக்கமான ஒன்று ஆனால் அந்த புகார்கள் காவல் நிலையத் திற்கோ உறவினர்களுக்கோ செல்லாமல் பிள்ளைகளை மிரட்டி வைத்துக்கொள்வார்கள். பாலியல் சீண்டல்கள் மட்டுமல்லாது காப்பகத்தில் உள்ள பிள்ளைகளை வயல் வேலைகள், தோட்ட வெலைகள் செய்வது, நாய்களை குளிப்பாட்டுவது என பல்வேறு வேலைகள் செய்ய நிர்ப்பந்தப்படுத்துவார்கள். அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி செய்பவர்கள் இங்கு வரும்போது அவர்களுக்கான பணிவிடைகள் செய்ய சிறுமிகளை வற்புறுத்துவார்கள். அப்போது அவர்களின் பாலியல் சீண்டல்களையும் எதிர்கொள்ள நேரும். மேலும், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகளிடமும் இந்த ஜேசும், அவரது மகன் பிரின்ஸ் நவீனும் தங்களது பலான வித்தைகளை காட்டியுள்ளனர். காவல்நிலையம் வரை சென்று பண பலத்தால் தப்பித்துவிடுவார்கள். அதனால்தான் இவரது மகன் பிரின்ஸ் நவீன், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டபோது 50 லட்சம் வரை பணத்தை வாரியிறைத்தும் 500 ஓட்டுகூட அவரால் வாங்க முடியவில்லை'' என்றார்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மா.செ.வான புஷ்பதேவன் நம்மிடம், "இந்த ஜேசுதாஸ்ராஜா பணத்தால் தப்பித்து வந்தார். காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் இந்த ஜேசுதாஸ்ராஜா நடத்தும் பிறந்தநாள் உள் ளிட்ட விழாக்களில் கலந்துகொண்டு அவரை கடவுளுக்கு நிகராகப் புகழ்வார்கள். காரணம் பணம். சி.பி.சி.ஐ.டி. விரிவான விசாரணை நடத்த வேண்டும். ஜேசுதாஸை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்''” என்றார் ஆவேசமாக.
திசைமாறும் குழந்தைகளை திருத்துவதற் கும், அவர்களுக்கு மனமாற்றத்தை நிகழ்த்து வதற்குமான குழந்தைகள் காப்பகங்களே, அவர் களை தவறான செயல்களுக்கு நிர்ப்பந்திப்பதும், அவர்களிடம் பாலியல் அத்துமீறல்களை நடத்துவதும் மன்னிக்கமுடியாத குற்றம்.