புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதே வளாகத்திலுள்ள மனநலக் காப்பகத்திற்கு சென்றார். அரசு உதவி பெற்று ரெனேசன்ஸ் தனியார் தொண்டு நிறுவனத்தால் பராமரிக்கப் படும் காப்பகத்தில் நுழைந்த அமைச்சரை வரவேற்ற பெண்களிடம், "நீங்க எந்த ஊரு, எவ்ளோ நாளா இங்கிருக்கீங்க?'' என விசாரித்த படி உள்ளே சென்றவருக்கு அதிர்ச்சி. பெண்கள் இருந்த அறையில் விளக்குகள் எரியவில்லை. கடுப்பான அமைச்சர், காப்பகத்தின் செயல்பாடு குறித்து விசாரிக்கத் தொடங்கினார்.

ss

"காப்பகத்தில் எத்தனை பேர் இருக்காங்க?'' என கேட்கவும், "59 பெண்கள்'' என்றார் காப்பாளர். "இவங்க படுக்கை அறை எங்கே?'' என விசாரிக்க, "இங்கே தான் சார் படுப்பாங்க'' என்று காப்பாளர் சொல்ல, அதிர்ச்சியான அமைச்சர், "எல்லாரும் தரையில தான் படுக்கணுமா? பெட் இல்லையா? உங்க வீட்டுப் பெண்களை இப்படித்தான் வச்சிருப்பீங்களா? ஆட்டு மந்தை போல வச்சிருக்கீங்க? சின்ன அறையில இத்தனை பேரா?'' என்று கோபத்தோடு கேள்விகளை அடுக்க... காப்பாளரால் பதில் சொல்ல முடியவில்லை.

அடுத்து சாப்பாட்டைப் பற்றி விசாரிக்க, "தினமும் ரசமும் சோறும் தருவாங்க'' என்று ஒரு பெண் சொல்ல, மனம் பதைபதைத்தவர், "தொட்டுக்க கூட்டு, பொறியல் தரமாட்டாங் களா?'' எனத் திரும்பவும் கேட்க, "இல்ல, ரசம் சோறுதான்'' என்று சொன்னதும், உடனடியாக அங்கிருந்த கிச்சனுக்குள் நுழைந்தவர், சுகாதாரமற்ற நிலைகண்டு வெறுத்துப்போனவர், "யாரு இங்கே டி.டி? ஒரு மருத்துவமனைக்குள்ள இருக்கிற காப்பகத்தில் மனித உரிமை மீறல் நடக்குது. இதை டி.டி.யும், டாக்டரும் கண்டுக்கல. பொறியல் இல்ல, பெட் இல்ல... உடனே கீழ்ப்பாக்கத்துக்கு போன்பண்ணி அந்த அதிகாரிய வந்து பார்க்கச் சொல்லுங்க'' என்று அதிரடி காட்டினார்.

"கம்ப்ளீட் மனித உரிமை மீறல் நடந்துகிட்டு இருக்கு. டி.டி. வாரம் ஒருமுறை வந்து பார்க்கறதா சொல்றார். அப்படி பார்த்திருந்தால் நிலைமை தெரிஞ்சிருக்கும். அவர் மேல உடனே நடவடிக்கை எடுங்க. இன்னும் ஒரு வாரத்தில் மறுபடி வருவேன். எல்லாத்தையும் சரிபண்ணுங்க'' என எகிறியவர், "மனநல காப்பகத்தின் டி.டி. ராமு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமை மருத்துவர் சரவணன் பணியிட மாறுதல் செய்யப் பட்டுள்ளார். தனியார் தொண்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது'' என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மறுநாளில், காப்பகத்திலிருந்த 59 பெண் களையும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதித்து, மாற்று இடத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களை அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்பிரபணியன், மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் நேரில் பார்த்து "உங்களுக்காக நாங்க இருக்கிறோம்'' என்றனர்.

அமைச்சரின் அதிரடியை அங்கிருந்தோர் வெகுவாகப் பாராட்டினர்.