"இப்படியும் ஒரு மனிதரா?' என்று வியக்க வைக்கிறார் அவர். இன்னொரு உயிர்காக்கும் அறக்கொடைக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டு விளம்பரம் எதுவும் வேண்டாம் என்கிறார். அவரிடம் கொடை பெறுகிறவரோ, பல்லாயிரம் இளைஞர்களுக்கு கல்வி ஒளி பாய்ச்சும் குபேரர்.
மன்னார்குடியருகே இருக்கும் கண்டிதம்பேட்டை என்ற குக்கிராமத்தில் இருந்து, இளமையில் பல்வேறு கனவுகளுடன் வாழ்க்கையைத் தேடிப் புறப்பட்டு, ராணுவத்தில் சிப்பாயாய் சேர்ந்து, தன் சின்சியாரிட்டியால், இதுவரை வரலாற்றிலேயே இல்லாத வரலாறாய் குடியரசுத் தலைவரால் நேரடியாகக் கர்னலாக ஆக்கப்பட்டவர் டாக்டர் பாலசுப்ரமணியன். ராணுவப் பணிக்குப் பின் மராட்டிய மாநில புனேயில் ஸ்ரீ பாலாஜி சொசைட்டி என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கி பல்கலைக்கழகமாக விரிந்து அதில் வேந்தராகவும் உயர்ந்திருக்கிறார்.
மராட்டிய மாநில தமிழர் நலக் கூட்டமைப்பு என்ற அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார் கர்னல். இதன் செயல் தலைவர் சயான் கோலிவாடா தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன். இந்த அமைப்பின் மூலம் தமிழ்நாடு பவன் என்ற கட்டிடத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் கர்னல். இதற்காக கர்னல் தலைமையிலான அந்த அமைப்பினர் எடுத்த முயற்சியால் மராட்டிய மாநில அரசு, மிக முக்கியமான பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு பவனுக்காக ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது. இவர்கள் எடுத்த முயற்சியால் அதற்கான தொகையைத் தர எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சாதனைகளை சத்தமில்லாமல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் கர்னல் பாலா.
உடன் பணியாற்றுவோரும் மாணவர்களும் பாலா சார் என்றே அவரை அழைக்கிறார்கள். அவர் நம்மிடம், ""’உடல்நலத்தைக் கூட பொருட்படுத்தாமல் 70 வயது கடந்தும் ஓடிக்கொண்டே இருந்தேன். அதனால் எனக்கு சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. வாரத்திற்கு மூன்றுமுறை டயாலிசிஸ் செய்துகொள்ளும் நிலை. என் மருத்துவர்களோ, "சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் நிரந்தரத் தீர்வு' என்றார்கள். நெருங்கிய உறவினர்களோ தயங்கினார்கள்.
அதேநேரம் என்னிடம் பணியாற்றும் ஒரு நண்பர், பெரிய மனதோடு "நான் சிறுநீரகம் தருகிறேன்' என்று முன்வந்தார். இன்னும் ஒரு சிறுநீரகம் வேண்டுமே என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில்தான், என் நிலைபற்றியும் என் கல்விச்சேவை பற்றியும் கேள்விப்பட்ட வெளிநாடுவாழ் மலையாளி ஒருவர், எனக்கு சிறுநீரகம் கொடுக்க விரும்புவதாகச் சொன்னார். ஆனால், "மூன்று நிபந்தனைகள்' என்றார். எனக்கு அறிமுகமில்லாத அவரின் நிபந்தனைகள் ஆச்சரியம் தந்தன.
"1. சிறுநீரகம் கொடுக்கும் என்னை வெளியுலகிற்கு அடையாளப்படுத்தக் கூடாது. 2. இதற்காக நீங்கள் எனக்கு பணமோ பொருளோ கொடுக்கக்கூடாது. நான் எதையும் பெறமாட்டேன். 3. சிறுநீரகம் கொடுத்தபின் நமக்கிடையே எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது. இவைதான் என் நிபந்தனைகள்' என்றார். நான் திகைத்தேன்.
எதைக்கேட்டாலும் கொடுக்கும் நிலையில் இருக்கும் என்னிடம் எதையும் பெற விரும்பாததோடு, பின்னரும் பெறும்நிலை தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, எந்தத் தொடர்பும் வேண்டாம் என்று நினைக்கும் அந்த மாமனிதரின் உயரத்தை எப்படி அளப்பது? "நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை'’ என்பது அவ்வையின் பொன்மொழி. இவ்வளவு சீரழிவுக்குப் பிறகும் இந்த உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது என்றால் அது இவரைப் போன்ற மாமனிதர்களால்தான் என்பதை இதன் மூலம் அவ்வை மூதாட்டி உணர்த்துகிறார். உடல் உறுப்பு தானம் இந்த மலையாள மாமனிதரால் புனிதம் பெறுகிறது. அவரின் கருணை மனதை எண்ணி எண்ணிக் கண்ணீர் கசிகிறேன்'' என்கிறார் நெகிழ்ச்சியாய்.
ஈரம் காயாத இத்தகைய இதயங்களே இன்றைய அதிசயங்கள்!
-தமிழ்நாடன்