"இப்படியும் நடக்குமா?' என்று அனைவரையும் பதற வைத்திருக்கிறது குமாரபாளையம் சம்பவம். 14 வயது சிறுமியை, சொந்த அக்காள் கணவரே வேட்டையாடியதோடு, தன் நண்பர்களுக்கும் அவளை விருந்தாக்கிய கொடூரம் அங்கே அரங்கேறியிருக்கிறது. இந்த விவகாரத்தில், பி.எஸ்.என்.எல். அதிகாரி உட்பட 12 பேரை கூண்டோடு தூக்கியிருக்கிறது காவல்துறை.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், சகுந்தலா தம்பதியர், தறி வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு மூன்று மகள்கள்; ஒரு மகன். மூத்த மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இளைய மகளான 14 வயதே ஆன செல்வி (பெற்றோர் மற்றும் சிறுமியின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) பெற்றோ ருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணனுக்கு உடல்நலம் சரியில்லாததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக படுத்த படுக்கையாக இருக்கிறார். தந்தையை கவனித்துக் கொள்வதற்காகத்தான் செல்வி, 6-ஆம் வகுப்புப் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்துவந்தாள்.
செல்வியின் அக்காள் வேணியின் கணவரான சின்ராஜ், மாமனாரின் உடல்நலம் பற்றி விசாரிக்க அடிக்கடி சென்று வந்தபோதெல்லாம், தனியாக இருந்த சிறுமியைப் பலமுறை வேட்டையாடியிருக்கிறான். செல்விக்கு 12 வயதாக இருக்கும் போதே இந்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது.
வெளியில் சொல்லமுடி யாமல், செல்வி மனதிற்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருக்க, சின்ராஜோ, போதாக்குறைக்குத் தன் நண்பர்களான குமார், வடிவேல் ஆகியோருக்கும் விருந் தாக்கியுள்ளான். வீட்டில் இருந்தால் சின்ராஜ் டீமின் தொல்லை நீடிக்கும் என்பதால், குமாரபாளையம் எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் பி.எஸ்.என்.எல். உதவிப் பொறியாளர் கண்ணன் என்பவரிடம் வீட்டு வேலைக்குச் சென்றிருக்கிறாள் செல்வி.
கண்ணனுக்குத் திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கிறார்கள். சிறுமியான செல்வியிடம், உன் தந்தையின் மருத்துவச் செலவுகளுக்கு உதவுகிறேன் எனக்கூறி அவரும் செல்வியை வேட்டையாடியிருக்கிறார்.
போதாக்குறைக்கு, அவருடைய வீட்டில் வேலை செய்துவந்த பன்னீர், மூர்த்தி, சேகர் என்கிற நாய் சேகர், கோபி, அபிமன்னன், சரவணன், சங்கர், முருகன் ஆகியோரும் சிறுமியை பலமுறை மிரட்டி மிரட்டியே பாலியல் வன்புணர்வு செய்ய, இந்த அட்டூழியங்கள், கடந்த 2 ஆண்டுகளாகவே தொடர்ந்துவந்திருக்கிறது.
இந்தநிலையில்... கடந்த பிப்ரவரி மாதம் செல்விக்கு திடீரென்று உடல்நலம் மோசமடைந்துள்ளது. என்ன, ஏது என்று அவருடைய அக்காள் வேணி விசாரித்திருக்கிறார். அப்போதுதான் தன்னை யார் யார் எப்படியெல்லாம் சீரழித்தார்கள் என்பதைச் சொல்லிக் கதறி அழுதிருக்கிறாள் செல்வி.
அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ’’இந்தச் சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு சின்ராஜின் நண்பர் குமார், சிறுமியை சீரழித்த விவகாரம் அரசல்புரசலாக செல்வியின் தாயாருக்குத் தெரிய வந்துள்ளது. அப்போது சின்ராஜ்தான் பஞ்சாயத்து செய்துள்ளார். "குமார் கைது செய்யப்பட்டால் அவனுடன் சேர்ந்து நானும் ஜெயிலுக்குப் போகவேண்டியது வரும். அப்புறம் உங்கள் மகள் வேணி வாழாவெட்டியாகிவிடுவாள்' என்றெல்லாம் மாமியாரை மிரட்டி யிருக்கிறான் சின்ராஜ்.
ஒருவழியாக செல்வியின் தாயாரை சமாதானப்படுத்திய சின்ராஜ், குமாரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாயை வாங்கி அவரிடம் கொடுத்திருக்கிறார். இதனால் அப்போது இந்த விவகாரம் வெளியே தெரியவில்லை. இதையும் கடந்த பிப்ரவரியில் செல்வி, தன் சகோதரியிடம் சொல்லி அழுதிருக்கிறாள்''’என்கிறார்கள் ஆதங்கமாய்.
கணவனின் கொடூர முகத்தை உணர்ந்த வேணி, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியாவிடம் புகாரளிக்க, அவர் உடனடியாக சைல்டு லைன் மூலம் செல்வியை மீட்டு, அரசு காப்பகத்தில் சேர்த்தார். சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஆதாரங்களுடன் சேகரித்தார்.
அதன்பிறகே அவர், ஏப்ரல் 13-ம் தேதி, திருச்செங்கோடு மகளிர் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகளைக் கேட்டு ஆய்வாளர் ஹேமாவதியே பதறிப்போயிருக்கிறார்.
எப்.ஐ.ஆரை பதிவுசெய்த அடுத்த 5 மணி நேரத்திற்குள், முருகனைத் தவிர சின்ராஜ், பி.எஸ்.என்.எல். கண்ணன் உள்ளிட்ட 11 பேரையும் மொத்தமாகத் தூக்கியது காவல்துறை. தலைமறை வாக இருந்த முருகனையும் ஏப்.14-ல் கைது செய்தனர். அனைவரும் உடனடியாக நாமக்கல் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனையும் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
காவல்துறை ஆய்வாளர் ஹேமாவதி நம்மிடம் ""சிறுமியின் குடும்ப வறுமையையும், அவளது அறியாமை யையும் கயவர்கள் பயன் படுத்திக்கொண்டு, அவ ளைச் சீரழித்திருக்கிறார் கள். குமாரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு சிறுமி யின் தாயார், எங்களிடம் சொல்லாமல் விட்டுவிட் டார். அதனால் அவரையும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கைது செய் திருக்கிறோம். அனைவர் மீதும் போக்சோ சட் டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெற்றோரிடம் அன்பும் அரவணைப்பும் கிடைக்காத குழந்தைகள் யாராவது அன்பாக, அக்கறையாக நாலு வார்த்தை பேசினால் அவர்களை நம்பி ஏமாந்துவிடுகிறார்கள். அப்படி நம்பி வந்த சிறுமியை 12 மிருகங்கள் சீரழித்திருக்கின்றன. இவர்களுக்கு உரிய தண்டனையை வாங்கிக் கொடுத்தே தீருவோம்''’என்றார் உறுதியான குரலில்.
நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியாவைப் பலமுறை தொடர்பு கொண்டும், அவர் லைனில் வரவில்லை.
பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து, தென்மண்டல பொதுக் காப்பீட்டுத் துறை ஊழியர்கள் சங்க பெண்கள் துணைக்குழுவின் அமைப்பாளர் சா.ஷோபனாவிடம் பேசியபோது... ""பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதி கரித்துவருகின்றன. ஊடகங்கள் அதிகளவில் இருப்பதால், இப்போது பரவலாக அத்தகைய குற்றங்கள் வெளியே தெரிகின்றன. உண்மையில், வெளிச்சத்துக்கு வராத பாலியல் குற்றங்கள் இதைவிட அதிகம். குறிப்பாக 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய குற்றங்களில் 92 சதவீதம், சிறுமிகளுக்கு நன்கு அறிமுகமான நபர்களிடம் இருந்தே நிகழ்த்தப்படுவது கொடுமையிலும் கொடுமை.
இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்கு செல்போனும் போதைப்பழக்கமும் முக்கிய காரணங்களாக உள்ளன. பெண் குழந்தைகளிடம் நல்ல தொடுகை, தீய தொடுகை குறித்தும், பெண்களிடம் தன் உடல் தனக்கு மட்டுமே சொந்தமானது என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். முதலில் பெண்கள் குறித்த பார்வை நம் சமூகத்தில் மாறவேண்டும்'' என்கிறார் அழுத்தமாக.
"சிறுமிகளிடம் பாலியல் வல்லுறவு வைத்துக் கொள்வோர்... கிட்டத்தட்ட மனதளவில் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள்'’என்று சொல்லும் அரசு மனநல ஆலோசகரான தனராஜ் சேகர்...
""சிறுவர்களை மட்டும் குறிவைத்துப் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை "பீடோபிலியா' என்கிறோம். இந்த பாதிப்பு உள்ளவர்கள் பெரியவர்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் குமாரபாளையம் சம்பவத்தில் கைதானவர்கள் பலர் திருமணமான ஆண்கள். அவர்களை பீடோபிலியா பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்று சொல்லமுடியாது. அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது அவர்களிடம் யாராவது பாலியல் சார்ந்த செய்கைகளில் ஈடுபட்டிருக்கலாம். அதைத்தான் அவர்கள் வளர்ந்தபிறகு மற்ற சிறுவர், சிறுமிகளிடம் காட்டுகின்றனர். அந்தநேரத்தில் சிறுவர், சிறுமிகள் அலறித் துடிப்பதை ரசிக்கும் மனநிலையிலும் அவர்கள் இருப்பார்கள். இதுபோன்ற குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனையுடன் மனநல ஆலோசனையும் முக்கியம்'' என்றும் வலியுறுத்துகிறார்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பள்ளிச் சிறுமிகளான அக்காள், தங்கை இருவரை இதேபோல் 12 பேர் கும்பல் நாசப்படுத்திய சம்பவம் அம்பலமானது. தற்போது இந்த குமாரபாளையம் பாலியல் சம்பவம் வெளியாகியுள்ளது. இன்னும் பாதிக்கப்பட்ட ஏழைச்சிறுமிகள் எத்தனை பேரோ?
பொள்ளாச்சி உள்ளிட்ட சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு அனுசரணையாக இருக்கும் அதிகார வர்க்கத்திடம், முழுமையான நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்?