மும்பையில் இருந்து பஸ் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிக்கு வந்தவர்களைப் பரிசோதனை செய்தபோது, ஒன்றரை வயது குழந்தை உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். இதேபோல் 5 ரயில்களில் மும்பையில் இருந்து பலர் தமிழகம் வந்துள்ளனர். இதில் ஒரே ரயிலில் வந்தவர்களில் 111 பேருக்கு தொற்று உறுதியானது.
இப்படி தொற்றுடன் வந்து புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சைப் பெற்றுத் திரும்பிய ஒருவர், ""மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அரசு மருத்துவமனைகளில் எல்லாம் ஹவுஸ்ஃபுல் போர்டு வைத்திருக்கிறார்கள். தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் நாளொன்றுக்கு ரூ.40, 50 ஆயிரம் வரை கேட்கிறார்கள். செலவு செய்தும் சிகிச்சையில் தரமில்லை. அதனால், எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டுமென்றுதான் தமிழ்நாட்டுக்கு வந்தோம். இங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நம்மூரில் மும்பையை விட நூறு மடங்கு சிறப்பாக சிகிச்சை தருகிறார்கள்'' என்று கண்கலங்க பேசிவிட்டுக் கிளம்பினார்.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நகரமான மும்பையிலேயே இந்த நிலைமையா என, மும்பை பாஜக எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வனிடம் கேட்டோம். “""தமிழ்நாடு, கேரள மாநிலங்களைப் போல சிறந்த சிகிச்சை இங்கே கிடைக்காதது உண்மைதான். அங்கெல்லாம் தொற்று உறுதியான 10 நாட்களில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீட்டுக்கு அனுப்பு கிறார்கள். மும்பையில் இதை எதிர்பார்க்க முடிய வில்லை. நான் கொண்டுபோய் சேர்த்த 32 வயது இளைஞர் ஒருவருக்கு 30 நாட்கள் கடந்தும் சிகிச்சை தொடர்கிறது. இத்தனைக்கும் அவருக்கு வேறெந்த நோயும் கிடையாது. ஆம்புலன்ஸ் பிடித்து படுக்கை இருக்கும் மருத்துவமனையைத் தேடி விசாரித்து, பாதிக்கப்பட்டவரை அனுமதிப் பதே பெரிய அவதிதான். குறைந்தது 30 மணிநேரமாவது தொற்று இருப்பவர் ஆம்புலன்சில் அலைய வேண்டி இருக்கிறது. அப்படியும் சிகிச்சை சரியில்லை என்பதால்தான், பலர் சொந்த ஊருக்குக் கிளம்புகிறார்கள். 5 ரயில்களை ஏற்பாடு செய்து தமிழ்நாட்டுக்கு பலரை அனுப்பி இருக்கிறேன். தமிழ்நாடு, கேரளா சென்றுவிட்டால் பிழைத்து விடலாம் என்ற எண்ணம் மும்பையில் இருக்கும் புலம்பெயர்த் தொழிலாளர்களிடம் பரவிவிட்டது.
இதுவரை மும்பையில் 32 ஆயிரம் பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகி இருக்கிறது. இப்போதுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யையே தொடங்கி இருக்கிறார்கள். போதுமான மருத்துவ உபகரணங்களும், படுக்கை வசதிகளும் இல்லாதது சிரமத்தை அதிகப்படுத்துகிறது. தற்போது கேரளாவில் இருந்து மருத்துவக்குழு கொரோனா சிகிச்சைக்காக மராட்டியம் வந்திருக்கிறது. இதுபோலவே தமிழக மருத் துவக் குழுவையும் அழைத்து, சிகிச்சையை துரிதப்படுத்த மராட்டிய அரசு முயலவேண்டும்''’என்று வலியுறுத்துகிறார்.
வடமாநிலங்களைப் பற்றி நன்கறிந்த பத்திரிகையாளர் ஒருவரிடம் இதுபற்றி கேட்டபோது, ""வடமாநிலங்களில் இதெல்லாம் சர்வ சாதாரணம். உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சாதி ஆதிக்கம் உச்சத்தில் இருக்கிறது. பள்ளிப்படிப்பில் தொடங்கி மருத்துவ சிகிச்சை வரை இதன் தாக்கத்தை உணர முடியும். தமிழகத்தில் ஒவ்வொரு சமுதாயத்திலும் 50 மருத்துவர்கள் இருப்பார்கள். வடமாநிலங்களில் உயர்சாதியினராக சொல்லிக் கொள்பவர்கள் மட்டுமே மருத்துவர்களாகவும், பெரிய அதிகாரிக ளாகவும் இருக்கிறார்கள்.
இதனால், பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்களைத் தொட்டுக்கூட சிகிச்சை அளிக்க மாட்டார்கள். பள்ளிப் படிப்பும் இவர்களுக்கு எட்டாக்கனிதான். இவர்களது பெயரே இன்ன சாதியென்று காட்டிக்கொடுத்து விடும். சொந்த ஊர்க்காரர்களுக்கே இந்தநிலை என்றால், தமிழகத்தில் இருந்து வந்தவர்களை எப்படி நடத்துவார்கள். ஏற்கனவே தீண்டாமை வேலி போட்டிருக்கும் மருத்துவர்கள், கொரோனா வேகமெடுக்கும் இந்த நேரத்தில் மருத்துவமனை நோக்கி படையெடுக்கும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் ரகளை ஆகிவிடும். அதனால் தான், ஹவுஸ்புல் போர்டு ஆட்டமெல்லாம்.
மும்பை போன்ற பெருநகரங்களில் சாதி வெறியைப் பார்க்கமுடியாது. எனினும், மற்ற மாநிலங்களில் பெருநகரம், குக்கிராமம் வித்தியாச மில்லாமல் சாதி ஆதிக்கத்தைக் காண முடியும். உ.பி.யில் இருந்து மும்பை வந்திருந்த உயர்சாதி குடும்பத்தினர், உ.பி.யில் இருக்கும் பாத்பூல் மாவட்டத்தில் தங்களது சொந்த கிராமத்திற்கு சென்றனர். அவர்களைப் பரிசோதனை செய்து ரிசல்ட் வரும்வரை ஊரில் இருக்கும் பள்ளியில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். இவர்களுக்காகவே பள்ளிக்கு அருகில் தங்கியிருந்த ஒடுக்கப்பட்ட மக்களை கழனிக்காட்டிற்கு அனுப்பி இருக்கிறது ஊர் நிர்வாகம்.
ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் வைக்கப்பட்ட உயர்சாதியினருக்கு, கீழ் சாதியினர் சமைத்த உணவு கொடுக்கப்பட்டது. அதை உண்ண மறுத்து பிரச்சனை செய்ததால், மாவட்ட நிர்வாகம் உயர் சாதியைச் சேர்ந்த ஒருவரை சமையலுக்கு நியமித்து இருக்கிறது. இவர்களிடம் கொரோனா வெல்லாம் பிச்சைதான் எடுக்கவேண்டும்'' என்றார் நக்கலாக.
“கோ கொரோனா கோ’’ என்று கத்தியே விரட்டியவர்கள், ஹவுஸ்புல் போர்டு வைக்காமல் இருந்தால்தான் சந்தேகப்பட வேண்டும்.
- இரா.பகத்சிங், து.ராஜா