கடந்த ஒன்றாம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு மட்டும் 2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.. குறிப்பாக, 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட ஒன்பது மடங்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது மேலும், பயணிகளின் நலனுக்காக ரயில்கள் புதுப் பிக்கப்படுவதாகவும், புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை வெகுஜன மக்களுக்குப் பயனுள்ளதாக இல்லாமல், வெறுமனே விதவிதமான பெயர்களில் சொகுசு ரயில்களை ஒன்றிய அரசு இயக்கிவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
கடலூர் நகர அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருவரசு நம்மிடம், "தமிழகத்தில் உள்ள பெருநகரங்களில் ஒன்றான கடலூர் வழியாக மன்னார்குடி -காரைக்கால் விரைவு ரயில், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ் போன்ற விரைவு ரயில்கள் சென்றாலும், எவையும் கடலூரில் நிற்பதில்லை. கடலூரில், திருப்பாப்புலியூர், துறைமுகம் ஆகிய இரு ரயில் நிலையங்கள் உள்ளன. சாதாரண பாசஞ்சர் ரயில்கள் தவிர மற்ற ரயில்கள் எதுவுமே இங்கே நிற்பதில்லை. இப்படியிருந்தால் பொதுமக்களுக்கு என்ன நன்மை?
சேலம் - விருத்தாசலம் விரைவு ரயில், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தோடு நின்றுவிடும். துறைமுகம் சந்திப்பு வரை அதை நீட்டிக்க வேண்டும். அதேபோல் மயிலாடுதுறையிலிருந்து கோவை வரை இயக்கப்படும் ஜனசதாப்தி ரயிலை கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கு இயக்கப்படும் விரைவு ரயிலை கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். சென்னை விழுப்புரம் வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை கடலூர் வரை நீட்டிக்க வேண்டும். அதேபோல் கடலூர் -தாம்பரம் பாசஞ்சர் ரயிலை கடலூர் துறை முகம் வரை நீட்டிக்க வேண்டும். மேலும், கடலூர் -புதுவை -சென்னை இடையே புதிய ரயில் இருப்புப்பாதை உருவாக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள் ளது. இதை நிறைவேற்ற வேண்டும். மேலும், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் போதிய வசதிகள் செய்துதர வேண்டும். தற்போது, சாதாரண பாசஞ்சர் ரயில்களின் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி விட்டனர். இதையும் கட்டுப்படுத்த வேண்டும்'' என்றார்.
திருக்கோவிலூரைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக் கள் வட மாநிலங் களில் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு சென்னை செல்வதற்கான ரயில் வசதி இல்லாததால் பேருந்தில் செல்கிறார்கள். 108 வைணவ கோவில்களில் மிக முக்கியமான கோவிலான உலகளந்த பெருமாள் கோவில் திருக்கோவிலூரில் உள்ளது. மேலும், வீரட்டனேஸ்வரர் கோவில், ஆதிதிருவரங்கம் கோயில், தபோவனம், கபிலர் குன்று போன்ற ஆன் மீகத் தலங்கள் இருக்கின்றன. இங்குவரும் பக்தர்களின் நன்மைக்காக ரயில்கள் நின்று செல்ல வேண்டுமென்ற கோரிக் கையை ரயில்வே துறை பரி சீலிக்க வேண்டும்'' என்கிறார் சமூக ஆர்வலர் சந்திரசேகர்.
சென்னை -திருச்சி ரயில்வே மார்க்கத்தில் உள்ள பெண்ணாடத்தில் விரைவு ரயில்கள் எதுவும் நின்று செல்வதில்லை. இந்த பகுதியில் இரண்டு தனியார் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இங்கு பல்லாயிரக்கணக்கானோர் வேலை செய்கிறார்கள். இங்கிருந்து திருச்சி, அரியலூர், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நீண்ட தூர விரைவு ரயில்கள் நின்று செல்வதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பொன்னேரியை ஒட்டி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தைக் கடந்து பெண்ணாடம் - இறையூரில் -உள்ள பள்ளிகளுக்கு பிள்ளைகள், செல்ல வேண்டும். இப்பகுதியில் ரயில்வே சுரங்க வழிப்பாதை அமைத்துக் கொடுத்தால் அனைவரும் இடையூறின்றி செல்ல முடியும். இதை ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாததால் போராட்டங்களை நடத்திவருகிறோம்'' என்கிறார் ரயில்வே பயணிகள் நல சங்கத்தைச் சேர்ந்த பொன்னேரி சுரேஷ்.
"தமிழகத்தின் மிக முக்கியமான ஜங்ஷன் பகுதி உளுந்தூர்பேட்டை. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் என தெற்கு, மேற்கு மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி வருபவர்கள் உளுந்தூர்பேட்டையைக் கடந்துதான் செல்ல வேண்டும். அப்படிப் பட்ட உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் அதிவேக ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று பல்லாண்டு களாகக் கோரிக்கைகள் வைத்தும் நிறைவேற்ற வில்லை. மக்களுக்காக அரசாங்கமா? அரசாங்கத்திற் காக மக்களா? ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கு மிக மோசமாக சென்றுகொண்டிருக்கிறது'' என்கிறார் நடைபாதை வியாபாரி பாஸ்கர்.
ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் இல்லாத நிலையில், ரயில்வே துறையே தனியார் மயமாகிவரும் நிலையில், அந்தந்த பகுதி எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றால்தான் ஒன்றிய அரசு அசைந்து கொடுக்கும்.