எம்.ஜி.ஆர். என்கிற வசீகர நாயகன் இருக்கும் இடம் என்றாலே ஒருவித பரபரப்பும், பரவசமும் ததும்பியிருக்கும். அவரின் படப்பிடிப்பு நடக்கிற இடங்களும் களைகட்டும்.

அப்படித்தான் அன்று... ஜெமினி ஸ்டுடியோவில் அண்ணன் எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. நான் வேறொரு வேலையாக அங்கே போயிருந்தேன்.

படப்பிடிப்பு இடைவெளியில்... செட்டிலிருந்து வெளியே வந்தார் எம்.ஜி.ஆர்.

ஒப்பனையை மீறி... அவரின் தங்கநிறம் ஜொலித்தது.

Advertisment

ff

""வணக்கம்'' என்றபடி... கைகூப்பினேன்.

பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு... ""நீங்க யார்?'' எனக் கேட்டார்.

Advertisment

""என் பெயர் புலமைப் பித்தன். உங்கள் படத்திற்காக ‘நான் யார்? நான் யார்?’ பாடலை எழுதியது நான்தான்...''

""நீங்களா...!'' என மகிழ்ச்சியையும், வியப்பையும் காட்டியவர்... ""உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது... அடிக்கடி... தயங்காம என்னை வந்து பாருங்க...''’என்றார்.

நான் மகிழ்ச்சியோடு தலையசைத்தேன்.

எழுத்திற்கான உரிய மதிப்பு கிடைக்கிறபோது... படைத்தவனுக்குத்தான் எத்தனை ஆனந்தம்.

அண்ணன் எம்.ஜி.ஆரின் அன்றைய அழைப்பிற்குப் பிறகான சில நாட்களிலிருந்து தொடங்கிய அவருடனான திரையுலக நட்பும், அரசியல் நட்பும் அண்ணனின் இறுதிக்காலம்வரை இருந்தது.

அது இன்னமும் எனக்குள் பசுமையாக இருக்கிறது.

வாரத்தில்... ஐந்து நாட்களும் அண்ணனைச் சந்திக்கச் சென்றுவிடுவேன். பெரும்பாலும் சத்யா ஸ்டுடியோவில்தான் அண்ணனைச் சந்தித்து அளவளாவுவேன்.

அவர் என்னை "புலவரே...'’ என அழைப்பார். நான் "அண்ணே...' என்று அழைப்பேன்.

பொதுவாக எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல் ரொம்பவே பிரசித்தம். தன்னைச் சந்திக்க வருகிறவர் தொண்டனோ... தலைவனோ... ஏழையோ... பணக்காரனோ... அவர்களை உண்ணவைத்து அழகுபார்ப்பதில் அப்படியொரு ஆனந்தம் அவருக்கு.

நானும் எல்லோரையும்போல எம்.ஜி.ஆரின் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன் என்றாலும்... பெரும்பாலான நாட்களில் சத்யா ஸ்டுடியோவில் அண்ணனுடன் உட்கார்ந்தே உணவருந்தியிருக்கிறேன்.

pulamaipithan

""புலவரே... நல்லா சாப்பிடுங்க...'' என சில சமயம் அவரே பதார்த்தங்களை எடுத்து பறிமாறுவார். சைவமோ... அசைவமோ... வகை எதுவாக இருந்தாலும்... பதார்த்தம் பலவிதமாகவே இருக்கும்.

நான் அண்ணனைப் போலவே அசைவப் பிரியர். ஆயினும் செவ்வாய்க் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நான் அவருடன் சாப்பிட மாட்டேன். காரணம்... அசைவப் பிரியரான எம்.ஜி.ஆர்., அந்த இரு நாட்களிலும் சைவம் கடைப்பிடிப்பார்.

ஆனால்... எனக்கு சைவச் சாப்பாடு இறங்காது. கடித்துக் கொள்ள... தொட்டுக்கொள்ள கறி இருந்தாகவேண்டும். அண்ண னிடம் விருப்பத்தைச் சொன்னால்... அதற்கு ஏற்பாடு செய்ய மாட்டாரா என்ன? ஆயினும் அவரின் விருந்தோம்பல் பண்பிற்கான மரியாதையை தருவதுதானே மரியாதை. அதனால் அந்த இரு நாட்களிலும் மதியச் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்துவிடுவேன். எங்கள் வீட்டில் சமைக்கப்படும் உணவிற்கும், கிழமைகளுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை.

நான் முழுநேர அசைவ உணவுப்பிரியராக இருந்ததால் தான்... தம்பி பிரபாகரன் விரும்பிய அசைவ உணவுகளை எங்கள் வீட்டில் சமைத்துத்தர முடிந்தது.

13 வயதில் பெரியாரிஸ்ட்டாக அரசியல் வாழ்க்கையைத் துவங்கி... பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., செல்வி. ஜெயலலிதாம்மா என பல தலைவர்களின் அபிமானங்களைப் பெற்றது...

மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர்திலகம் சிவாஜிகணேசன், டி.எம்.சௌந்திரராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.பாலசந்தர், இளையராஜா, கண்ணதாசன், வாலி... என எண்ணிலடங்கா திரை நட்சத்திரங்களின் மதிப்பைப் பெற்றது...

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவனான மாவீரன் தம்பி பிரபாகரனை சொந்தத் தம்பியாகவே பாவித்த பெருமையைப் பெற்றது...

ஆலைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கிய என்னை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசவைக் கவிஞனாக்கிய பெருமையைப் பெற்றது...

எத்தனையோ நாயகர்களின் அன்பைப் பெற்றதும்... புகழ்பெற்ற திரைப் பாடலாசிரியராகவும் ஆனதும்....

இதெல்லாம் என் வாழ்க்கையில் எப்படி சாத்தியமானது?

என் முதல் திரைப்பாட்டின் முதல் வரியையே எனக்குள் எழுப்புகிறேன்...

""நான் யார்... நான் யார்..?''

(சொல்கிறேன்...)