தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறையின் சார்பில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகின்றன. இராணிப் பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி நடந்தது. வாலாஜா வட்டத்தில் நடந்து முடிந்த ஜமாபந்தி நிகழ்ச்சியின் இறுதி நாளான ஜூன் 7-ஆம் தேதி தமிழ்நாட்டின் கைத்தறி மற்றும் கதர்நூல்துறை அமைச்சரும், இராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளருமான காந்தியின் மகன் சந்தோஷ்காந்தியை வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர் அதிகாரிகள்.
இதுகுறித்து இராணிப் பேட்டை மாவட்ட அ.தி.மு.க மா.செ.வும், அரக்கோணம் எம்.எல்.ஏ ரவி, "அமைச்சரின் மகன் என்பதைத் தவிர, அரசின் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர் எப்படி அரசு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கலாம்? அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் பேசிய அதிகாரிகள் அடங்கிக் கிடக்கிறார்களா அல்லது அடக்கப்பட்டுள்ளார்களா? இராணிப்பேட்டை மாவட்டத்தில் மன்னராட்சி நடத்தும் அமைச்சரை வண்மையாக கண்டிக்கிறோம்'' என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், "அரசு நிகழ்ச்சிகளில் தங்களது வாரிசு களை முன்னிலைப்படுத்த உள்ளாட்சி, கூட்டுறவு சங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகம் எதிலாவது பிரதிநிதியாக்கி அரசு விழா மேடையில் ஏற்றிவிடுவார்கள். இந்த யுக்திகூட இல்லாமல் தன் மகனை அரசு நிகழ்ச்சிக்கு அமைச்சர் அனுப்பியது எந்தவிதத்தில் சரியானது?'' என கேள்வி எழுப்பினார்கள்.
வாலாஜா வருவாய்த்துறையினரோ, "சந்தோஷை வைத்து நிகழ்ச்சியை நடத்துங்கள் என அமைச்சர் தரப்பில் இருந்து சொன்னார்கள், அதன்படியே செய்தோம்'' என்றார்கள்.
நாம் அமைச்சர் காந்தியை தொடர்பு கொண்டபோது நமது லைனை எடுக்க வில்லை. அறிக்கை மட்டும் வெளிவந்தது. அதில், "வீட்டுமனை இல்லாத இருளர் இனத்தவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க ஆயிலம் ஊராட்சியில் எனக்கு சொந்தமான 50.5 சென்ட் இடத்தை அரசுக்கு வழங்கினேன். அதை மனையாக்கி இலவசப்பட்டா வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இடம் தந்தவர்களை கவுரவிக்க வேண்டும் என பயனாளிகள் கேட்டுக்கொண்டனர். நான் ஊரில் இல்லாததால் நிலம் வழங்கியவர் என்கிற முறையில் என் மகன் கலந்துகொண்டார். எங்களால் யாரும் அடக்கப்படவில்லை, அச் சுறுத்தப்படவுமில்லை'' என்றுள்ளார்.
"கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த பலரும் டம்மியாக இருக்க அவர்களின் மகன்கள் ஆக்டிங் அமைச்சர்களாக இருந்தனர். சில அமைச்சர்கள் தங்களது மகன்களையே உதவி யாளர்களாக வைத்திருந்தனர். (அவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கப்படும்) அமைச்சர்களின் வாரிசுகள் துறை ஃபைல்கள் பார்த்து பென்சிலால் டிக் செய்து அனுப்பியபின்பே கையெழுத்திட்ட அமைச்சர்களும் இருக்கிறார்கள். இதனை முதல்வராக இருந்த எடப்பாடியும் கண்டுகொள்ள வில்லை. புதிய அரசிலும் இதே நடைமுறை நீடிக்காதபடி முதல்வர் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்'' என்கிறார்கள் கட்சியினரும் பொதுமக்களும்.