அந்தச் சண்டையைப் பார்த்த பொதுமக்கள், அதுக் குள்ளேயேவா என தலையைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மணப்பாறையைச் சேர்ந்த தி.முக. பிரமுகரான எஸ்.ஏ.எஸ். ஆரோக்கியம், முன்னாள் தி.மு.க. அமைச்ச ரான கே.என். நேருவின் ஆதரவாளர் ஆவார். இவர், கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப் பாளராக இருக்கிறார். இவரது வீடும் அலுவலகமும், அங்குள்ள ’ஆபீசர்ஸ் டவுனில்’ இருக்கிறது. மணல், ஜல்லி, உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்துவருகிறார். இதே பகுதியில் வசிக்கிறார் ஒப்பந்ததாரர் சிவகுமார்.
இந்த நிலையில்... பெண் காவலர் ஒருவரின் கணவருக்கும் ஆரோக்கியத்துக்கும் இடையே பணவிவகாரத்தில் பிரச்சினை ஏற்பட... அப்போது, சிவகுமாரின் மாமியார் சாந்தி, பெண்காவலருக்கு ஆதரவாகக் களமிறங்கி, பெண் காவலர் வசிக்கும் பகுதியில்... ஆரோக்கியத்தின் செங்கல் மற்றும் மணல் லாரிகள் அதிகம் போவதால் ஏரியா முழுக்க மாசு படிவதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதை விசாரிக்க சாந்தி வீட்டருகே வந்த எஸ்.ஐ. சதீஷ், லாரிகள் பற்றி விசாரிப்பதற்காக ஆரோக்கியத்தையும் அங்கே அழைத்திருக்கிறார். அப்போது சாந்தி வீட்டருகே இருக்கும் குணசீலி என்ற பெண், "ஆரோக்கியத்தின் மணல் லாரிகளால்தான் பிரச்சினை. அதிலும் லாரி டிரைவர்கள் மது அருந்திவிட்டு, அடிக்கடி அந்தப் பகுதியிலேயே பாட்டிலை வீசிவிட்டுச் செல்கிறார்கள்' என்று புகார் கூறினார்.
இதனால் ஆரோக்கியத்திற்கும், அவரது அத்தை முறையான குணசீலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வார்த்தைகள் தடிக்க... ஒரு கட்டத்தில் எரிச்சலான ஆரோக்கியம், குணசீலியைப் பார்த்து "பேசாம போறியா? இல்லே உன் மேல் லாரியை ஏற்றி உன்னைக் கொல்லட்டுமா?'’என்று மிரட்டி யிருக்கிறார். இதுதான் மோத லுக்குக் காரணமாக அமைந்து விட்டது'' என்கிறார்கள் ஏரியாவாசிகள்.
தனக்கு ஆரோக்கியம் கொலை மிரட்டல் விடுத்ததாக, தன் மகனான வழக்கறிஞர் ஞானசேகரனிடம் குணசீலி குமுற... ஞானசேகரன், ஆரோக்கியத்தின் அலுவலகத்துக்குப் போய் தட்டிக்கேட்டிருக்கிறார். அப்போது ஆரோக்கியத்திடம் வேலை பார்க்கும் லாரி ஓட்டுநர்கள், ஞானசேகரைத் தாக்கியுள்ளனர். இந்த விவகாரம், கரூரில் உள்ள ஞானசேகரனின் அண்ணன் வினோத்துக்குச் செல்ல... அவர் அன்று இரவே 40 பேரோடு கிளம்பிவந்து ஆரோக்கியத்தின் வீடு, அலுவலகம் என எல்லா இடத்திலும் அவரைத் தேடியிருக்கிறார்.
ஆரோக்கியம் கிடைக்காத ஆத்திரத்தில் அவர்கள், அவர் அலுவலகம் அருகே நிறுத்திவைக்கப் பட்டிருந்த லாரிகள், ஜே.சி.பி.க்கள் உள்ளிட்ட வாகனங்களைத் தாக்கி, கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளனர். இந்த நேரத்தில் ஆரோக்கியம், தன் உறவினர்கள் 150 பேரை அங்கே திரட்டிக்கொண்டு வர... ஏரியாவே கலவர பூமியானது.
இரு தரப்பினரும் நேருக்கு நேராக மோதியதில், இரு தரப்புமே காயமடைந்தது. இதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இரு தரப் பினரையும் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். ஆரோக்கியம் தரப்பில் ஆன்ட்ரூஸ் என்பவர் புகார் கொடுக்க, 28 பேர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல் வழக்கறிஞர் ஞானசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 18 பேர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும் அங்கே பதட்டம் தணியவில்லை..
இந்த சம்பவம் குறித்து மேலும் நாம் விசாரித்தபோது... ""இந்த இரண்டு தரப்புமே தி.மு.க.வைச் சேர்ந்ததுதான். வழக்கறிஞர் ஞானசேகரனுக்காகத் திரண்ட அத்தனைபேரும் முன்னாள் அமைச்சரான கரூர் செந்தில்பாலாஜி யின் ஆதரவாளர்கள். அதேபோல், ஆரோக்கியத்திற்காகத் திரண்டவர்கள் அனைவரும் கே.என்.நேருவின் விசுவாசிகள். இந்த இரு தரப்பும்தான் மோதிக்கொண்டு ரத்தம் சிந்தியிருக்கு. கைதான இருதரப்பும் தங்களுக்குள் சமாதானமாவதாக நீதிபதியிடம் தெரிவித்தது. ஆனால் நீதிபதியோ, "இன்று அடித்துக் கொண்டு நாளை ஒன்றாக சேர்ந்துவிடுவீர்கள். உங்களுக்கிடையே மாட்டிக் கொண்ட போலீஸும் நீதித் துறையும் உங்களுக்கு என்ன பகடைக்காய்களா'’’என்று கேள்வியெழுப்பினாலும் இரு தரப்பினருக்கும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பான சச்சரவு களும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
வழக்கறிஞர் முரளிகிருஷ் ணன் என்ற ஒன்றிய பொறுப் பாளர், ஆரோக்கியத்திற்கு ஆதரவாக ஜாமீன் பெற்றுத்தர... அதனை அறிந்த மத்திய மாவட்ட செயலாளர் வைர மணி, ""என்னுடைய மாவட் டத்தைச் சேர்ந்தவருக்கு நீ எப்படி ஜாமீன் வாங்கிக் கொடுக்கலாம். எங்களுக்கு அவரை வெளியே எடுக்கத் தெரியாதா?''’என்று கேட்க, இரு தரப்புக்கும் முட்டிக்கொண்டது தனி சேப்டர்.
"தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே, இப்படி தி.மு.க.வினர் அராஜகத்தில் குதிக்கிறார்களே...' என ஏரியா பொதுமக்கள் கவலையில் இருக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களை கட்சித் தலைமை எப்படி ஒழுங்குபடுத்தப்போகிறது?
_________________
திருத்தம்!
கடந்த இதழில், "சிறுமியை வேட்டையாடிய மனித மிருகங்கள்' கட்டுரையில் அரசு மனநல மருத்துவர் தனராஜ் சேகரின் புகைப்படத்துக்குக் கீழ் சின்ராஜ் என பெயர் தவறுதலாக இடம்பெற்றுவிட்டது.
(ஆர்)