20/20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கடைசி ஓவர் எவ்வளவு முக்கியமானதோ அதைப்போல அதிமுக பொதுக் குழுவுக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை இரவு பரபரப்பான திருப்பங்களுடன் அமைந்திருந்தது. அன்று முதல்வர் எடப்பாடி வீட்டில் தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி வி.ஐ.பி., விஜயபாஸ்கர் ஆகியோர் கவலையுடன் அமர்ந்திருந்தார்கள். எடப்பாடி மெதுவாக டெல்லியில் இருந்த பாஜக தலைவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். தனது அறையில் எடப்பாடி பேசிக்கொண்டிருந்த பேச்சின் விவரங்கள் அறியாமல் ஹாலில் அமர்ந்திருந்த அதிமுக வி.ஐ.பிக்கள் அலறிக் கொண்டிருந்தார்கள். போனில் பேசிய எடப்பாடி, ""நாளைக்கு பொதுக்குழு, அபசகுனமாக எதுவும் நடந்திடக் கூடாது பாத்துக்கோங்க'' என உருக்கமான குரலில் வேண்டுகோள் வைத்துக் கொண்டிருந்தார். ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் ஒரே ஒரு காரணம்தான் இருந்தது. அது "பொள்ளாச்சி விவகாரம்'.

gutaka-case

பொள்ளாச்சி விவகாரத்தை விசாரிக்கும் சி.பி.ஐ., தனது வழக்கறிஞர் மூலம் அந்த வழக்கில் யாரை அடுத்து கைது செய்வது என ஒரு லிஸ்டை நீதிமன்றத்தில் அளித்திருந்தது. அந்த லிஸ்டில் இருந்தவர்களைக் கைதுசெய்ய அனுமதிக்க வேண்டும் என சி.பி.ஐ கேட்டுக்கொண்டால் நீதிமன்றம் அவர்களை உடனடியாகக் கைதுசெய்ய உத்தரவிடும். அந்த கைதுகள் பொதுக்குழு நடைபெறும் சனிக்கிழமை அன்று நடைபெற்றால், அது பொதுக்குழுவின் போக்கையே மாற்றிவிடும். அந்த கைது தொடர்பான செய்திகள்தான் முக்கியத்துவம் பெறும். எனவே பொள்ளாச்சி வழக்கில் அடுத்த கட்ட நகர்வுகளைக் கொஞ்சம் நிறுத்திவையுங்கள் என மத்திய அரசின் உள்துறைக்கு தனக்கு நெருக்கமான பா.ஜ.க. தலைவர்கள் மூலம் எடப்பாடி பேசிக் கொண்டிருந்தார்.

எடப்பாடி ஒருபக்கம் பேச, தங்கமணியும், வேலுமணியும், விஜயபாஸ்கரும் தங்களுக்கு நெருக்கமான பா.ஜ.க. தலைவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். எட்டாம் தேதி கொரோனா தடுப்பூசி விஷயமாக சென்னைக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனை கூட்டிக்கொண்டு காட்டாங் குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுவந்தார் விஜயபாஸ்கர்.

Advertisment

அந்த நெருக்கத்தில் ஹர்ஷ்வர்தனிடம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், சி.பி.ஐயை கட்டுப் படுத்துங்கள், பொதுக்குழு நேரத்தில் அ.தி.மு.க.மீது எந்த தாக்குதலையும் தொடுக்காதீர் கள் என விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டிருந்தார். தங்கமணியும், வேலுமணியும் அவர்களுக்கு நெருக்கமான ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் மத்திய மின்துறை அமைச்சரான பியூஷ்கோயல் ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். இப்படி எடப்பாடியின் வீட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மத்திய பாஜக அரசையே தொடர்புகொண்டு கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையே பெங்களூருவில் சட்டம் படித்துக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி வி.ஐ.பி.யின் மகன் திடீரென தலைமறைவானார். பொள்ளாச்சி நகராட்சியின் முன்னாள் சேர்மனான கிருஷ்ணகுமார், காணாமல் போனவர் பட்டியலில் இடம்பெறும் விதமாக தொடர்பு எல்லைக்கு அப்பால் போனார். பொள்ளாச்சி வி.ஐ.பியின் உதவியாளர் வீராசாமியும் தொலைந்து போனார். பொள்ளாச்சி நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் ஜேம்ஸ் ராஜாவும் தொடர்பு எல்லைக்கு அப்பால் போனார். இவர்கள் நான்கு பேரும் பொள்ளாச்சி வழக்கில் லேட்டஸ்டாக சி.பி.ஐயால் கைது செய்யப்பட்ட அருளானந்தம், பைக் பாபு, ஹெரன் பால் ஆகியோருக்கும், பொள்ளாச்சி வி.ஐ.பி.யின் மகனுக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சரான வேலுமணிக்கும் எல்லாவிதத்திலும் நெருக்க மானவர்கள்.

சி.பி.ஐயில் சிக்கிய அருளானந்தம் அப்படியே நடந்தவற்றையும், இவர்களுக்கும் பொள்ளாச்சி சம்பவத்தில் உள்ள தொடர்பு பற்றியும் தெளிவாக சாட்சியம் அளித்துள்ளார். உன்னை அப்ரூவர் ஆக்குகிறோம் உனக்கு விடுதலை கிடைக்கும் என சி.பி.ஐ அருளானந்தத்திடம் வாக்குமூலம் வாங்கியது.

Advertisment

அருளானந்தத்தின் வாக்குமூலமும், பொள்ளாச்சி விஐபியின் மகன் மற்றும் கிருஷ்ணகுமார், வீராசாமி, ஜேம்ஸ்ராஜா ஆகியோரின் செயல்கள் பற்றி சி.பி.ஐ சேகரித்த விவரங்களோடு கோர்ட்டில் கொடுத்த அறிக்கைதான் ஒட்டுமொத்த அதிமுகவையே பொதுக்குழுவுக்கு முந்தைய தினம் பரபரப்புக்கு உள்ளாக்கியது என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகளும், விவரமறிந்த அதிமுகவினரும்.

பொள்ளாச்சி கைது நடக்கும்பொழுது சபரிமலையில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார் அமைச்சர் வேலுமணி. பொள்ளாச்சி விவகாரம் மிகவும் சீரியஸாவதை அறிந்த அமைச்சர் வேலுமணி, அவரச அவசரமாக கோவைக்கு வந்தார். விவகாரத்தில் தொடர்புடைய பொள்ளாச்சி வி.ஐ.பி மேல் கைது நடவடிக்கை பாயுமா எனக் காவல்துறை அதிகாரிகள் மூலம் சி.பி.ஐ வட்டாரங்களில் பேசினார்.

பொள்ளாச்சி வி.ஐ.பி., ""எனது மகனுக்கும் எனக்கும் இந்த விவகாரத்தில் எந்தத் தொடர்புமில்லை. இந்த விவகாரத்தில் என் குடும்பத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் மீது சி.பி.ஐ நடவடிக்கை எடுத்தால் நான் அரசியலை விட்டு விலகி குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன்'' என வேலுமணியிடமும், எடப்பாடியிடமும் கதறினார் அந்த வி.ஐ.பி. இதுபற்றி சி.பி.ஐ வட்டாரங்களிடம் கேட்டோம்.

""நாங்கள் எங்களது புலனாய்வை மிகச் சரியாகக் கொண்டுசென்றுள்ளோம். "அண்ணா அடிக்காதீங்க அண்ணா' என பொள்ளாச்சி வீடியோவில் கதறிய பெண்தான் எங்களது முதல் துருப்புச் சீட்டு. அந்த பெண் யாரென நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது. பியூட்டி பார்லரில் வேலைபார்த்து வந்த அந்தப் பெண்ணிற்கு வலிப்பு நோய் வரும். நக்கீரன் வெளியிட்ட அந்த பெண்ணின் விவரங்களை வைத்து அந்த பெண்ணைக் கண்டுபிடித்தோம். ரகசியமாக அவரிடம் விசாரித்ததில் நக்கீரனில் வெளிவந்த அந்த செய்தி உண்மை என ஒத்துக்கொண்டார். அவரும் அவரது காதலரான ஒரு முஸ்லீம் வாலிபரும் தைரியமாக நடந்த விவரங்களை எங்களுக்குச் சொன்னார்கள். அவருடன் அதே பொள்ளாச்சி வீடியோவில் இடம்பெற்ற ஆசிரியையும் எங்களிடம் தெளிவாக, பல விவரங்களைக் கூறினார்கள். காரில் அமர்ந்தபடி இந்த பொள்ளாச்சி குற்றவாளிகள் வீடியோ எடுப்பதை தட்டிக்கேட்கும் அந்த ஆசிரியை இந்த டீமின் காமக்கொடூரத்தால் பாதிக்கப்பட்டவர். வலிப்பு நோயால் பாதிக்கப் பட்ட அந்த இளம்பெண் கொடுத்த சாட்சியங்கள்தான் பொள்ளாச்சி வழக்கில் முதன்முதலில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த சாட்சியமாக அமைந்தது. அந்தப் பெண்ணை கண்டுபிடித்துக் கொடுத்த நக்கீரனுக்கு நன்றி'' என இந்த வழக்கில் பொள்ளாச்சி வி.ஐ.பி. உட்பட யாரும் தப்பிக்க முடியாது எனத் தெளிவாக விளக்கினார்கள்.

அ.தி.மு.க.வின் பொதுக் குழுவினால் சி.பி.ஐ.யின் நட வடிக்கைகள் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளன. ஆனால் சி.பி.ஐ இன்னொரு வழக்கிலும் வேகம்காட்டத் தொடங்கியுள்ளது என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். அந்த விவகாரம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான 'குட்கா' விவகாரம்.

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர் ஏற்கனவே சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார். அவரது இரண்டு பி.ஏக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அனைவரையும் சி.பி.ஐ விசாரித்துவிட்டது. குட்கா விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு அதில் குற்றவாளிகளான அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது பி.ஏக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தயார் செய்து அதை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சி.பி.ஐ அனுப்பிவைத்துள்ளது. அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தகவலை தெரிந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னைக்கு வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மூலம் தனக்கு எதிராக சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமானால் நான் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டி வரும் எனக் கெஞ்சியிருக்கிறார்.

பொள்ளாச்சி வி.ஐ.பியும், விஜயபாஸ்கரும் மட்டுமல்ல அமைச்சர் வேலுமணியும் பொள்ளாச்சி விவகாரம் மற்றும் ஊராட்சிகளுக்கு எல்.இ.டி பல்புகளை ஒரு ஊராட்சிக்கு 1.5 லட்சம் எனத் தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரம் ஊராட்சிகளுக்கு எல்.இ.டி பல்புகளை சப்ளை செய்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையில் சிக்குகிறார்.

இவையெல்லாம் எடப்பாடிக்குத் தெரியும். பொள்ளாச்சி வி.ஐ.பியும், விஜயபாஸ்கரும், வேலுமணியும் எடப்பாடியை மதிக்காதவர்கள். இவர்களை 'ஜெ' பாணியில் பதவியிலிருந்து நீக்க முடியவில்லை ஆளாளுக்கு எம்.எல்.ஏக் களை விலைக்கு வாங்கி எடப்பாடியை மிரட்டி வருபவர்கள் இவர்கள். மத்திய அரசு இந்த மூவரின் மீது எடுக்கும் நடவடிக்கை எடப்பாடியை சந்தோசப்பட வைத்திருக்கிறது. எனவே இவர்களை எடப்பாடி காப்பாற்ற மாட்டார் என்கிறார்கள் விஷயம் தெரிந்த அதிமுகவினர்.

-தாமோதரன் பிரகாஷ்