டந்த அக்டோபர் 30, ஞாயிற்றுக்கிழமை, குஜராத் மக்களுக்கு பெருத்த சோகமான நாளாக அமைந்துவிட்டது. ஞாயிறன்று மாலையில், குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில், மச்சூ ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் இதுவரை 140 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகிய சோகம் நாட்டையே உலுக்கியுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நூறாண்டு பழமை வாய்ந்த இந்த பாலத்தில், கடந்த ஆறு மாத காலமாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிவடைந்து, குஜராத்தின் புத்தாண்டு தினமான அக்டோபர் 26ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. பாலம் திறக்கப்பட்டு நான்கு நாட்களேயான நிலையில், கடந்த ஞாயிறன்று அந்த பாலத்தைக் காண்பதற்காக குழந்தைகள், பெண்கள், ஆண்களென 400 முதல் 500 பேர்வரை ஒரேநேரத்தில் பாலத்தில் குவிந்தனர்.

ff

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக, பாரம் தாங்காமல் கேபிள் பாலம் அறுந்துவிழுந்ததில், பாலத்தின் மேலிருந்த மக்கள் சுதாரிக்கும் முன் பாக, கொத்துக்கொத்தாக கீழிருக்கும் ஆற்றினுள் விழுந்து மூழ்கினர். ஆற்றில் இடுப்பளவுக்கு தண் ணீர் ஓடிக்கொண்டிருந்த நிலையில் மொத்தமாக ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில், 140க்கும் மேற் பட்டோர் மூழ்கி மூச்சுத்திணறி பலியானார்கள். ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புப்படையினரின் ஐந்து குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள். அவர்களோடு இந்திய ராணுவ வீரர்கள், கப்பற்படை, விமானப்படை வீரர்களும் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல், தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு, ஞாயிறு இரவே விபத்து நடந்த பகுதிக்குச் சென்று மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்தியதோடு, மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்டுவரும் சிகிச்சையையும் பார்வை யிட்டு, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மறு சீரமைப்புக்குப்பின் பாலத்தைத் திறக்குமுன்பாக முறையாக பாதுகாப்புச் சான்றிதழ் பெறப்பட வில்லை என்று உள்ளூர் நகராட்சி தலைவர் சந்தீப்சிங் ஜாலா குற்றம்சாட்டியுள்ளார்.

கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். "என் வாழ்க்கையில் அரிதாக அனுபவிக்கும் வலியை தற்போது உணர் கிறேன். ஒருபுறம் வலி நிறைந்த இதயமும், மறுபுறம், கடமைக்கான பாதையும் உள்ளது'' என்று கூறியுள்ளார்.

இந்த விபத்து குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில், "மோர்பி பாலம் அறுந்து விழுந்ததில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து இருப்பது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாயும், காய மடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படு மென்று குஜராத் அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படுமென்று அறிவித்துள்ளார்.

-ஆதவன்