மோடி தலைமையிலான அரசு, 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜி.எஸ்.டி.யை அறிமுகப்படுத்தியபோது, ஜி.எஸ்.டி.யால் பொதுமக்கள் பல முனைகளில் வரி செலுத்துவது தடுக்கப்பட்டு, வரிச்சுமை பெரிதும் குறையும், வரி ஏய்ப்பும் குறையும் என்றெல்லாம் பல்வேறு உறுதி மொழிகளை அளித்தது. அதே போல், ஜி.எஸ்.டி. வரி வசூலுக் கான அடுக்குகள், மற்ற நாடு களைவிடக் குறைவாக இருக்கு மென்றும் சொன்னது. ஆனால், அனைத்து உறுதிமொழிகளையும் காற்றில் பறக்கவிட்டு, ஜி.எஸ்.டி. வரியமைப்பைத் தொடர்ச்சியாகக் கடுமையாக்கி வருகிறது. ஜி.எஸ்.டி வரி அமைப்பில் மாற்றங்கள் செய்வது குறித்து கலந்தாலோசிக் கக் கூடும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கும்போதெல்லாம், இம்முறை எதற்கெல்லாம் வரியை உயர்த்தப் போகிறார்களோ என்று வணிகர்களும், சாமானிய பொதுமக்களும் பதட்டத்தில் இருப்பதே வாடிக்கையாகி விட்டது.

ggst

ஜி.எஸ்.டி. வரி வசூலைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாதமும் 1 லட்சம் கோடி ரூபாய் வசூலாக வேண்டுமென்று இலக்கு வைத்து ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் இலக்கைவிட அதிகமாகவே தற்போது ஜி.எஸ்.டி. வசூல் சாதனை படைத்துவருகிறது. குறிப்பாக, கடந்த மே மாதத்தில் ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி. வசூல், ரூ.1,40,885 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல், ரூ.97,821 கோடியாக இருந்தது. தற்போது, கடந்த ஆண்டு மே மாதத்தைவிட 44 சதவீதம் அதிகமாக வசூலாகியுள்ளது. இத்தகவலைப் பெருமையுடன் பகிர்ந்துகொள்ளும் ஒன்றிய அரசு, ஜி.எஸ்.டி. வரி விகிதங்களில் தளர்வினை அறிவித்து, பொதுமக்களின் வரிச்சுமையைக் குறைக்குமென்று எதிர்பார்க்கையில், மேலும் மேலும் வரிச்சுமையை அதிகரித்துக் கொண்டே செல்வது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 28, 29-ஆம் தேதிகளில் சண்டிகரில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 47-வது கூட்டம், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், அனைத்து மாநில பிரதிநிதிகளின் பங்கெடுப்போடு நடைபெற்றது. இக்கூட்டத்தில், அத்தியாவசியப் பொருட்கள், சேவைகள் பலவற்றின் வரி மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குடிசைத்தொழில் போல், வணிக முத்திரையிடப் படாத (மய்க்ஷழ்ஹய்க்ங்க்) பேக்கிங் உணவுப்பொருட்களைத் தயாரிக்கும் சிறு வணிகர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டுவந்த வரிச்சலுகையை ரத்து செய்துவிட்டு, இறைச்சி, மீன், உலர் காய்கறிகள், கோதுமை மாவு, பொரி அரிசி, தயிர், லஸ்ஸி, மோர், பால், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை பேக்கிங் செய்து விற்பனை செய்வதற்கு 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது, சிறு வணிகர்களின் வாழ்வா தாரத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடும்.

Advertisment

gst

அதேபோல், நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய்க்கு குறைவான ஹோட்டல் அறை வாடகை உள்ளிட்ட சில சேவைகளுக்கான வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 12 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. வங்கிக் காசோலைகளுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. பிரின்டிங் மை, டிராயிங் மை, தண்ணீர் இறைக்கும் மோட்டார் பம்புகளுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிரின்டிங் பேப்பர்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், மையின் விலையும் உயர்ந்து, புத்தகங்கள், நோட்டுக்களின் விலை கணிசமாக உயரக்கூடும். வீட்டுப் பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தண்ணீர் இறைக்கும் மோட்டார் பம்ப்புகளுக்கு ஜி.எஸ்.டி. யை அதிகரித்திருப்பது மேலும் கவலையளிப்பதாக உள்ளது.

Advertisment

ஒரு நாளைக்கு 5,000 ரூபாய்க்கும் அதிகமான மருத்துவமனை அறை வாடகைக்கு 5% வரி விதிக்கப் பட்டுள்ளது. அதேபோல், அஞ்சல் அட்டை, உள்நாட்டுக் கடிதம், புக் போஸ்ட் ஆகியவை தவிர, அனைத்து அஞ்சலக சேவை களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப் படவுள்ளது.

சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 18 சத விகிதமாக உயர்த்தப்பட் டுள்ளது. இதன் காரண மாக, டோல் கட்டணங்கள் மேலும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இவ்வளவு பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி.யை ஏற்றிய ஒன்றிய அரசு, ஆன்மீகம் சார்ந்த பூணூல், விபூதி, பஞ்சகவ் யம், துளசி காந்த மாலை, பஞ்சாமிருதம், ருத்திராட்சம் போன்ற பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. யை ரத்து செய்து ஆன்மீக வாதிகளை மட்டும் மனம்குளிர வைத்துள்ளது.

தற்போது, ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி பலரையும் கவர்ந்திழுத்து, பணத்தை இழக்கச் செய்வதோடு தற்கொலைக்கும் தூண்டக்கூடிய ஆன்லைன் ரம்மி, சூதாட்டம், லாட்டரி போன்ற வற்றை தடை செய்யாவிட்டாலும், அதிகபட்சமாக 28% ஜி.எஸ்.டி. யாவது விதிக்கலாமென்று பலரும் பல முறை கேட்டும், தற்போதுவரை அதுகுறித்து எந்த முடிவையும் ஜி.எஸ்.டி. கவுன்சில் எடுக்கவில்லை. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந் துரைகள், வரும் ஜூலை 18-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரைகள், மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது. ஜி.எஸ்.டி விவகாரங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத் துக்கு மட்டுமல்லாமல், அனைத்து சட்டமன்றங்களுக்கும் சம உரிமை உள்ளது. எனவே ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரைகளை மாநில அரசு ஏற்க மறுக்கலாம் என்று கூறப்பட்டாலும், மத்திய அரசு ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரை களை ஏற்கும்பட்சத்தில் மாநில அரசு மட்டும் ஏற்க மறுப்பது சாத்தியப்படுமா என்பது கேள்விக் குறியே. ஜி.எஸ்.டி. வருவாயில் ஒன்றிய அரசும் பங்கெடுப்பதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீட்டைச் சரிசெய்ய, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டை வழங்குவதற்கான கால அளவு முடிவடைந்துள்ள சூழலில், இந்த காலக்கெடுவை மேலும் சில ஆண்டுகள் நீட்டிக்கவேண்டுமென்று பல மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. ஆனால் அதுகுறித்து கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதில் அடுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப் படலாம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ss

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் உயர்த்தப்பட்ட வரிகள் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜாவிடம் கேட்டபோது, "பிராண்டட் என்பதற்கு மாற்றாக, உறைகளில் பேக்கிங் செய்யப்பட்டு சீலிடப்பட்ட, அரிசி, கோதுமை, மைதா, தயிர் போன்ற உணவுப் பொருட்களுக்கும் 5% ஜி.எஸ்.டி. விதித் திருப்பது, நியாயத்துக்குப் புறம்பான, மனிதநேயமற்ற அறிவிப்பு. பொதுமக்களை பெரிதும் பாதிக்கக்கூடியது. அதேபோல், 1000 ரூபாய்க்கும் குறைவான தங்கும் விடுதி அறைகளின் வாடகைக்கு 12% ஜி.எஸ்.டி. விதித்திருப்பதும், அஞ்சலக சேவைகளுக்கு 5% வரி விதித்திருப்பதும் நடுத்தர வர்க்க மக்களின்மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக்கருதி கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். ஜி.எஸ்.டி. வரி வருவாய் பெருகிவரும் சூழலில், மக்கள்மீதான வரிச்சுமையைக் குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராயாமல் இப்படி கடுமையாக வரி ஏற்ற நடவடிக்கையை எடுப்பது பொருளாதாரத்தின்மீதான தாக்குதலாகும். எனவே மேலே குறிப்பிட்ட வற்றுக்கான ஜி.எஸ்.டி. வரிகளைத் திரும்பப்பெற வேண்டுமென்றும், ஜி.எஸ்.டி. சட்டத்திலிருக்கும் முரண்பாடுகளைக் களைந்து எளிமைப்படுத்த வேண்டு மென்றும் வணிகர்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்." என்றார்.

gf

ஜி.எஸ்.டி. வரிகளை அதிகரிப்பதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் உயர வாய்ப்புள்ளதா? தொடர்ந்து ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரையை ஏற்காமல் மாநில அரசு மறுப்பது சாத்தியமா? என்ற கேள்விகளை பொருளா தார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் முன்வைத்தோம். "ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவுகளை மத்திய அரசு அமல்படுத்தும்போது மாநில அரசு மட்டும் ஏற்காமலிருப்பது சாத்தியமில்லை. ஜி.எஸ்.டி. வரிகளை உயர்த்துவதற்கும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் தொடர்பில்லை. தற்போது மத்திய அரசுக்கு வரிப்பற்றாக்குறை இருக்கிறது. ஏனென்றால், கார்ப்பரேட்டு களுக்கான வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. அதனால் ஏற்படும் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காகத்தான் சாமானிய மக்கள் வாங்கக்கூடிய பொருட் களுக்கான வரியை உயர்த்தியிருக்கிறார்கள். ஏற்கெனவே இதற்காக பெட்ரோல், டீசலுக்கான வரிகளை உயர்த்தினார்கள். அதற்கு முன்னர் ரிசர்வ் வங்கியிடமிருந்த நிதியை எடுத்தார்கள். தற்போது சாமானிய மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கான பால், மோர், தயிருக்குக்கூட வரியை விதித்து வதைக்கத் தொடங்கி யிருக்கிறார்கள்." என்றார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமென்றாலே ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்க மாட்டேன் என்று வீர வசனம் பேசியதுதான் நம் அனைவருக்கும் நினைவில் வரும். இப்போதெல்லாம் அந்த வசனத்தைப் பேசினாலே தேசத்துரோகம் என்று சொல்லுமளவுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் உச்சத்தை அனுபவித்து வருகிறோம். இனியாவது வரிச்சுமை யைக் குறைப்பது குறித்து யோசிப்பார்களா என்பதே சாமானியர்களின் எதிர் பார்ப்பு!