அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் விக்டர். இவர் கடலூரிலுள்ள கம்மியம்பேட்டை அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிசெய்து வந்துள்ளார். இதற்காக இவர் திருப்பாப்புலியூர் பகுதியிலுள்ள தங்கராஜ் நகரில் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் வசித்துவந்துள்ளார். இவரும் இவருடைய மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவாழ்கின்றனர். விக்டர் மட்டும் தனியாக கடலூரில் தங்கி ஆசிரியர் பணி செய்துவந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்தமாதம் 18-ஆம் தேதி கடலூரிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியே சென்ற விக்டர் அன்று மாலை வீட்டுக்குத் திரும்பிவரவில்லை. அவரது நண்பர்கள், அவரது உறவினர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்து விக்டரை தீவிரமாகத் தேடியுள்ளனர். இதையடுத்து கடந்த மாதம் 27-ஆம் தேதி திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் விக்டர் உறவினர்கள் புகாரளித்தனர்.
இந்த நிலையில் நெய்வேலி அனல்மின் நிலையம் அருகேயுள்ள வில்லுடையான்பட்டு முருகன் கோவில் அருகே முள்புதரில் சாக்குமூட்டை ஒன்று கிடப்பதைக் கண்டு சந்தேகமடைந்த வழிப்போக்கர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று அந்த சாக்குமூட்டையைக் கைப்பற்றினர். அதைப் பிரித்துப் பார்த்தபோது உள்ளே அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. போலீசார் தீவிர விசாரணை செய்ததில் கடலூரில் காணாமல்போன ஆசிரியர் விக்டர் உடல்தான் சாக்குமூட்டையில் பிணமாக இருந்தது என்பதை உறுதிசெய்தனர். அந்த சடலத்தில் காயங்களும் இருந்ததால், ஆசிரியரை கொலைசெய்து இங்கு கொண்டுவந்து வீசிவிட்டுச் சென்றது உறுதிசெய்யப்பட்டது.
ஆசிரியரை கொலைசெய்து இங்கு கொண்டுவந்து வீசிவிட்டு சென்றவர்கள் யார்? எதற்காக கொலை? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். ஆசிரியரின் செல்போன் எண் மூலம் அவரை யார்? யார்? தொடர்புகொண்டு பேசினார்கள் என தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகள், 22 வயது ஜனனி ஆசிரியரின் செல்போனில் அவர் காணாமல்போன அன்று அடிக்கடி தொடர்புகொண்டு பேசியுள்ளார் என்பது தெரியவந்தது .
இதையடுத்து போலீசார் ஜனனியை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. மாணவியாக இருந்தபோது ஜனனியும் அவரது குடும்பத்தினரும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். அப்போது ஆசிரியர் விக்டருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் இருவருக்குமிடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. விக்டர் ஜனனியை தனியே பலமுறை அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்ததுடன் அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ஜனனி குடும்பத்தினர் குறிஞ்சிப்பாடிக்கு குடிபெயர்ந்து வந்துவிட்டனர். விக்டரும் கடலூரில் ஆசிரியர் வேலைபார்க்க வந்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் ஜனனி வடலூரிலுள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து, பட்டப்படிப்பு முடித்துள்ளார். கடலூரில் வசித்துவந்த விக்டரது மனைவியும் அவரை விட்டுப் பிரிந்துபோன நிலையில் ஜனனியை செல்போனில் தொடர்புகொண்டு தன்னுடைய ஆசைக்கு இணங்கவேண்டும் இல்லையேல் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் ஜனனி வேறுவழியின்றி ஆசிரியரின் ஆசைக்கு இணங்கிவந்துள்ளார்.
ஒருகட்டத்தில் வெறுப்படைந்த ஜனனி ஆசிரியர் விக்டருடனான பழக்கத்தை நிறுத்த முடிவுசெய்து அவரிடம் பேசியுள்ளார். விக்டரோ, அதற்கு உடன்படாது வீடியோவை பரப்பிவிடுவேன் என மிரட்டியே தனது உடல் ஆசையை ஜனனியிடம் தீர்த்துக்கொண்டுள்ளார். .
இதையடுத்து அயன் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த தனது உறவினரான தங்கராசு மகன் தட்சிணாமூர்த்தி என்ற இளைஞரிடம் இதுகுறித்துப் பேசியுள்ளார். இருவரும் திட்டமிட்டு, சம்பவத்தன்று விக்டரை குறிஞ்சிப்பாடிக்கு வரவழைக்க முடிவுசெய்தனர். அதன்படி ஜனனி அன்று ஆசிரியர் விக்டரிடம் செல்போனில் வலிய அன்பாகப் பேசி அவரை குறிஞ்சிப்பாடியிலுள்ள தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
குறிஞ்சிப்பாடி வந்த விக்டரை, ஜனனி வீட்டில் அமர வைத்து தட்சிணாமூர்த்தியைப் பேசவிட்டுள்ளார். நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனிமேல் இது தொடரவேண்டாம் என்று இருவரும் எடுத்துக்கூறியுள்ளனர். ஆனால் விக்டரோ இதற்கு சம்மதிக்கவில்லை. தான் அழைக்கும்போதெல்லாம் ஜனனி இணங்கியாகவேண்டுமென விக்டர் மிரட்டியிருக்கிறார். இதில் கோபமடைந்த தட்சிணாமூர்த்தி வீட்டுக்குள்ளிருந்த இரும்புக் கம்பியை எடுத்து விக்டர் எதிர்பார்க்காத நேரத்தில் அவரது தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் விக்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஒரு சாக்குமூட்டையில் விக்டர் உடலை வைத்துக் கட்டி அக்கம்பக்கத்தினர் யாருக்கும் தெரியாமல் மோட்டார் சைக்கிளின் உதவியுடன் நெய்வேலி அருகேயுள்ள வில்லுடையான்பட்டு முருகன் கோவில் பகுதியிலுள்ள முள்புதரில் வீசிவிட்டு யாருக்கும் தெரியாமல் திரும்பி வந்துவிட்டார் தட்சிணாமூர்த்தி.
ஒரு நபர் மட்டும் மோட்டார்சைக்கிளில் விக்டர் உடலை எடுத்துச்சென்று வீசி விட்டுவந்திருக்க முடியுமா? அல்லது வேறு யாரேனும் விக்டர் கொலையில் துணையாக இருந்தார்களா என்பது குறித்து போலீசார் தட்சிணாமூர்த்தியை கைதுசெய்து விசாரணை செய்தனர்.
போலீசாரிடம் தான் ஒருவன் மட்டுமே விக்டரை தலையில் அடித்து கொலைசெய்ததாக கூறியுள்ளார். தட்சிணாமூர்த்தி சென்ற பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்த போலீசார், அந்த கேமராக்களில் சாக்குமூட்டையுடன் தட்சிணாமூர்த்தி மட்டுமே இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
ஜனனி, தட்சிணாமூர்த்தி இருவரையும் கைதுசெய்த போலீசார் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.