பா.ஜ.க. அரசும் எடப்பாடி அரசும் தலைமைச் செயலாளர்களாக இருப்பவர்களை வைத்துக்கொண்டு அரசியல் விளையாடிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

IAS team

ஜெயலலிதா மறைந்தபோது தலைமைச் செயலாளராக இருந்தவர் கிரிஜா வைத்தியநாதன். இவர் ஓ..பி.எ.ஸ். முதல்வராக இருந்தபோதும், இ.பி.எஸ். முதல்வரானபோதும் தலைமைச் செயலாளராகத் தொடர்ந்தவர். இவர் தலைமைச் செயலாளராக இருந்த காலகட்டத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் மிக நெருக்கமாக இருந்தார். ஆடிட்டர் குருமூர்த்தியும் கவர்னரின் செயலாளராக இருந்த ராஜகோபாலும் சொன்னதை யெல்லாம் செய்தார். அதனால் இப்போது கிரிஜா வைத்தியநாதனை பசுமைத் தீர்ப்பாயத்தில் வல்லுநர் குழு உறுப்பினராக மத்திய அரசு நியமித்திருக்கிறது.

இந்தப் பதவிக்கு நியமிக்கப் படுபவர்கள் பதினைந்து வருடங் கள் நிர்வாகப் பதவிகளில் இருந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பசுமைத் தொடர்பான சட்டங்களை நிறை வேற்றும் அமைப்பில் 5 வருடங்கள் பணி புரிந் திருக்க வேண்டும். ஆனால் கிரிஜா, தமி ழகத்தின் தலைமைச் செயலாளராகவும் அதி காரியாகவும் இருந் துள்ளார். அவர் எந்த சுற்றுப்புறச் சூழல் தொடர் பான சட்டங்களை நிறை வேற்றும் அமைப்பிலும் பணி யாற்றியிருக்கவில்லை. இது தவறான நியமனம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

Advertisment

அதேபோல் கிரிஜாவுக்கு முன்பு தலைமைச் செயலாளராக பதவி வகித்த ராம்மோகன்ராவ். ஜெ.விடம் செல்வாக்கு கொண்டவரான இவர் பா.ஜ.க.வுக்கு அடிபணிந்து போகவில்லை என்பதற்காக அவரது வீட்டிலும் அவர் கோட்டையில் இருந்த அறையிலும் மத்திய அரசு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இப்படி தலைமைச் செயலாளர்களை ஆதரித்தும் எதிர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் மத்திய அரசின் பாணியிலேயே எடப்பாடி பழனிச்சாமி இப்போது தலைமைச் செயலாளராக இருக்கும் சண்முகத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதம் நீட்டிக்க முடிவுசெய்துள்ளார். இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கொரோனா காலம் என்பதால் சண் முகத்திற்கு 3 மாதம் பதவி நீட்டிப்பை எடப்பாடி அரசு வழங்கியது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது. இந்த மாதம் 31-ஆம் தேதியோடு அந்தப் பணி நீட்டிப்பு காலம் முடிவடைந்துவிடுகிறது. அவருக்கு மேலும் 6 மாத காலம் பணி நீட்டிப்பு தர எடப்பாடி அரசு பரிந்துரைத்து கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துவிடும் என்கிற எதிர்பார்ப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறது.

இதுபற்றி நம்மிடம் பேசிய அரசு அதிகாரிகள், ""இது தேர்தல் நேரம். தேர்தல் முடிந்தவுடன் பதவி நீட்டிப்பு கொடுத்தாலும் சண்முகத்தின் பதவிக்காலம் முடிந்துவிடும். அடுத்து அமையக்கூடிய ஆட்சி நினைத்தால்தான் அவர் பதவியில் நீடிக்க முடியும். தேர்தல் நேரத்தில் ஒரு புதிய தலைமைச் செயலாளரை நியமித்தால் அவர் அரசுக்கு ஒத்துழைக்க மாட்டார். சண்முகம் போன்ற பணி நீட்டிக்கப்பட்ட அதிகாரிகளைப் போட்டால்தான் தேர்தல் நேரத்தில் ஆளுந்தரப்பு நினைத்ததைச் செய்ய முடியும். புதிதாக ஒரு அதிகாரியை தலைமைச் செயலாளராக நியமித்தால் அவர் தேர்தல் முடிந்த பிறகும் அதே பதவியில் தொடர்வார். அதனால் தேர்தல் நேரத்தில் எடப்பாடி அரசு, போடும் உத்தரவுகள் தேர்தல் முடிந்தவுடன் ஒரு மாற்று அரசு அமையுமானால் அது தேர்தல் நேரத்து உத்தரவுகளைப் பற்றி கேள்வி எழுப்பும். அது சர்வீஸில் இருக்கக்கூடிய புதிய EPSஅதிகாரிக்கு அச்சுறுத்தலாக இருக்கும், எனவே அவர் எதைச் செய்தாலும் அடுத்து அமையக்கூடிய அரசுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதைப் பற்றி சிந்தித்துதான் செயல்படுவார் என்பதால் சண்முகம் தலைமைச் செயலாளராக நீடிப்பதையே எடப்பாடி அரசு விரும்புகிறது'' என்கிறார்கள்.

Advertisment

அதேநேரத்தில் சண்முகம், எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை ஒரு கோஷ்டியாக வைத்து செயல்படுகிறார் எடப்பாடி. தற்போது உள்துறை செயலாள ராக இருக்கும் எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ், விவசாயத்துறை செயலாளராக இருக்கும் ககன்தீப்சிங் பேடி, சந்திர மோகன், மின்சாரத்துறையின் செயலாளரான பங்கஜ் குமார் பன்சால், முதல்வரின் செயலாளராக இருக்கும் விஜயகுமார், கோபால் ஐ.ஏ.எஸ்., கார்த்திக், அபூர்வா என ஒரு பெரிய படையையே முதல்வர் எடப்பாடி சொல்லும் உத்தரவுகளை அப்படியே நிறைவேற்றும் அதிகாரிகளாக மாற்றி வைத்திருக்கிறார்.

அதேநேரத்தில் சகாயம், உதயச்சந்திரன், சந்தோஷ் பாபு, மகேஸ்வரி போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உரிய பதவி வழங்காமல் பழிவாங்குகிறார். அதில் சந்தோஷ்பாபு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து விட்டார். சகாயம், என்னை விடுவித்து விடுங்கள் என அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு, அரசின் முடிவிற்காகக் காத்திருக்கிறார். உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். மட்டும்தான் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு எதுவாக இருந்தாலும் செயல்படுகிறார்.

இதுதவிர கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள பல அதிகாரிகள் அடுத்து தலைமைச் செயலாளர் பதவி வரும் என காத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் இலவுகாத்த கிளிகளாக மாற்றிவிட்டு சண்முகத்திற்கு பதவி நீட்டிப்பு தர எடப்பாடி முயற்சி செய்கிறார். இதில் முக்கியமானவர்கள் ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ் மற்றும் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ். ஆகியோர். மத்திய அரசுப் பணியில் இருக்கும் ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ்சும், தமிழகப் பணியில் இருக்கும் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ்,சும் சண்முகத்தின் பதவி நீட்டிப்பால் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். இதனால் கொதித்துப்போயுள்ள ஐ.ஏ.எஸ். வட்டாரம், கிரிஜாவுக்கு எதிராக வழக்குப் போட்டதைப்போல சண்முகத்தின் பதவி நீட்டிப்பிற்கு எதிராகவும் வழக்குப் போட தயாராகி வருகிறது.

-தாமோதரன் பிரகாஷ்

படங்கள் : ஸ்டாலின்