""ஹலோ தலைவரே, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அவசர கதியில் அறிவிக்கப்பட்டிருக்கு''’’
""ஆமாம்பா, இடைத் தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் இருந்தும் ஒரே மாதத்தில், அதாவது பிப்ரவரி 17-ல் இடைத்தேர்தல்னு இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவிச் சிட்டாரே?''’’
""உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தில் தி.மு.க.வுக்கு எதிராக ஒரு வலிமையான சக்தியை உருவாக்க நினைக்கும் பா.ஜ.க., தனித்தனியாக ஆலாபனை செய்துக்கிட்டு இருக்கும் எடப்பாடி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட அ.தி.மு.க. குழுக்களை ஒருங்கிணைக்க ரொம்ப நாளாகப் போராடுது. ஓ.பி.எஸ். இறங்கி வந்தாலும், நிர்வாகிகள் மட்டத்தில் பலமில்லாத அவரை, இனி தலையெடுக்க விடக்கூடாதுன்னு நினைக்கிறார் எடப்பாடி. எனவே ஓ.பி.எஸ்.ஸோடு சேர்ந்து பயணிக்க முடியாதுன்னு அவர் முரண்டு பிடிக்கிறார். அதனால், அ.தி.மு.க.வின் பவர் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த நேரத்தில், இடைத்தேர்தல் தேதியை இப்படி அதிரடியாக அறிவித்தாலாவது அவர்கள் இருவரும் ஒன்றிணைய முனைகி றார்களா? என்று, இதன் மூலம் அவர்களுக்கு செக் வைக்கப்பட்டிருக்குன்னு பரவலாகவே டாக் எழுந்திருக்கு''’’
""சரிப்பா, இந்தமுறை ஈரோடு கிழக்கில், காங்கிரஸுக்கு பதில் தி.மு.க.வே நிற்கப் போகுதுன்னு பேச்சு அடிபடுதே?''’’
""ஆமாங்க தலைவரே, போனமுறையே இந்த ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க. களமிறங்கத் திட்டமிட்டிருந்தது. அந்த நேரத்தில், தன் மகன் திருமகனுக்காக தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்கும்படி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக் கொண்டதால், தி.மு.க.வுக்கு செல்வாக்கு அதிகமுள்ள அந்தத் தொகுதியை ஸ்டாலினும் விட்டுக் கொடுத்துவிட்டார். அதனால் இந்தமுறை, தி.மு.க.வே இடைத்தேர்தலில் களமிறங்க ஆயத்தமாகுது. ஆனால் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ளத் துடிக்கும் காங் கிரஸ், அந்தத் தொகுதியில் ஈ.வி. கே.எஸ். இளங்கோவனே நிற்க விரும்புகிறார். மகன் விட்டுச் சென்ற பணியை, அப்பா தொடர ஆசைப்படு கிறார். எனவே, இந்த முறையும் காங்கிரஸிடமே தொகுதியை ஒப்ப டையுங்கள்னு அறிவாலயத்தை சென்ட்டிமெண்ட்டாக ’டச் ’செய்ய காங்கிரஸ் திட்டமிட்டிருக்குதாம்.''’’
""ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரிப்பதாக எடப்பாடி தரப்பு தெரிவிச்சிருக்கே?''’’
""நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் வகையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தைக் கொண்டு வர ஒன்றிய அரசு ஆசைப்படுது. இதை 2024-ல் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலின்போதே அமல்படுத்தவும் ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிடுது. இதனால் காலவிரயமும் பண விரயமும் குறையும்னு ஒரு சப்பைக் காரணத்தையும் டெல்லி கற்பிக்கப் பார்க்குது. எனவே, இந்தத் திட்டம் குறித்த அரசியல் கட்சிகளின் கருத்தை ஒன்றிய அரசின் சட்ட ஆணையம் கேட்டிருக்கிறது. இதற்கு தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து விட்ட நிலை யில், 2024-லேயே தமிழக சட்ட மன்றத் தேர்தலும் வந்துவிடும் என்ற கனவில், ஒன்றிய அரசின் அந்தத் திட் டத்தை அ.தி.மு.க. சார்பில் ஆதரிப்பதாக எடப்பாடி தெரிவித்திருக்கிறார். கவர்னர் ரவியுடன் தி.மு.க. அரசுக்கு உள்ள உரசலைக் காரணம் காட்டி, தி.மு.க. அரசை ஒன்றிய அரசு கலைக்கப் போகிறது என்று லோக்கல் பா.ஜ.க.வினர் சிலர் சொன்னதை நம்பிய எடப்பாடி, இதைச் சொல்லியே தங்கள் கட்சியினரை உற்சாகப் படுத்தவும் நினைக்கிறாராம்.''’’
""முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா குறித்து அரசுத் தரப்பில் சலசலப்பு எழுந்திருக்கே?''’’
""ஆமாங்க தலைவரே, முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆரின் 106ஆவது பிறந்தநாள் கடந்த 17ஆம் தேதி அ.தி. மு.க.வினரால் தமிழகம் முழுதும் கொண்டாடப் பட்டது. தமிழக அரசு சார்பில், சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு காலை 9.30-க்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர்கள் உள்ளிட்ட எவரும் அங்கே தலை காட்டவில்லை. சென்னை மேயர் பிரியா மட்டும் சரியான நேரத்துக்குச் சென்று எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். அமைச்சர்கள் உள்பட அரசுத் தரப்பில் இருந்து எவரும் வரவில்லை என்பதை அறிந்த அவர், என்னவோ ஏதோவென்று அங்கிருந்து குபீர் என்று எஸ்கேப் ஆகிவிட்டார். இதையறிந்த எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும், எம்.ஜி.ஆரை தி.மு.க. அரசு அவமதிப்பதாக, தனித்தனியாகக் கண்டன அறிக்கைகளை வெளியிட்டார்கள்.''’’
""அமைச்சர்களான தா.மோ.அன்பரசனும், ஆவடி நாசரும் மரியாதை செலுத்தினாங்களேப்பா?''’’
""ஆமாங்க தலைவரே, இந்த கண்டன அறிக்கைகளைப் பார்த்த முதல்வர் ஸ்டாலின், என்ன ஆச்சுன்னு விசாரித்த போதுதான், அது சம்பந்தமா அமைச்சர்களுக்கு, உரிய அதிகாரிகள் நினைவூட்ட வில்லைங்கிற செய்தி தெரியவந்திருக்கு.''
""இதன்பிறகு அமைச்சர்களான அன்பரசனுக்கும், ஆவடி நாசருக்கும் முதல்வரிடமிருந்து உத்தரவு பறந்தது. அதைத் தொடர்ந்தே அவர்கள் இருவரும் அவசரம் அவசரமாக கிண்டிக்கு விரைந்து சென்று எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அரசுக்கு கெட்டபெயர் உருவாக்கும் நோக்கத்துடனேயே செயல்படும் இப்படிப்பட்ட அதிகாரிகளிடம், முதல்வர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கோட்டைத் தரப்பே சொல்கிறது.''’’
""டான்சி நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்குதே?''
""தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரிகளுக்கு, புதிதாக 13,000 எண்ணிக்கையில் மேஜைகள் + பெஞ்ச்சுகள் தேவைப்பட்டன. இதற்கான செலவு பற்றி கணக்கெடுத்து, ஒரு செட் மேஜை, பெஞ்ச்சுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஆகும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 13 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்த மேஜை, பெஞ்ச்சில் 13,000 செட்கள் வேண்டும் என் தமிழக அரசின் சிறு தொழில் நிறுவனமான டான்சியிடம் ஆர்டர் கொடுத்தது உயர்கல்வித்துறை. இதற்கான 13 கோடி ரூபாயும் டான்சியிடம் கொடுக்கப்பட்டது. உயர்கல்வித் துறையின் இந்த ஆர்டரைப் பெற்ற டான்சி நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநரான விஜயகுமார், இவற்றை கொள்முதல் செய்ய ஆன்-லைன் டெண்டரை அறிவித்தார்.''’’
""டெண்டரில்தான் முறைகேடா?''’’
""டெண்டர் மூலம் வாங்கப்பட்ட பர்னிச்சர் பொருட்களில் முறைகேடுங்க தலைவரே. அதாவது, தனக்கு நெருக்கமான காண்ட்ராக்டர் ஒருவருக்கு இந்த வேலைகள் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார் விஜயகுமார். டெண்டரை எடுத்த அந்த காண்ட்ராக்டரும் 13000 மேஜை-பெஞ்ச்களை தயாரித்துக் கொடுத்துவிட்டார். அவற்றை உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு சமீபத்தில் பிரித்து அனுப்பி வைத்தனர். இவை சென்ற வேகத்திலேயே, மேஜை பெஞ்ச்களுக்கு அடிக்கப்பட்ட பெயின்ட் உதிர்வதாகவும், இவற்றில் உள்ள மரப்பலகைகள் தரமற்று பெயர்வதாகவும், பல கல்லூரி களிடமிருந்து உயர்கல்வித் துறைக்கு புகார்கள் குவியத் தொடங்கிவிட்டன. இதனால் ஷாக்கான உயர் கல்வித்துறை, இதை டான்சி சேர் மன் விஜயகுமாரின் கவனத்துக்குக் கொண்டுசென்றது. விஜயகுமாரோ, அது சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டரை கேள்வி கேட்காமல், டான்சி நிறுவன ஊழியர்களை வைத்தே புது பர் னிச்சர்களின் ஓட்டை உடைசல்களை சரி செய்ய உத்தரவிட்டிருக்கிறாராம். அதற்கான செலவு களையும் டான்சியின் தலையிலேயே கட்டி, தரமற்ற பர்னிச்சர் பொருட்கள் சப்ளை செய்யப் பட்ட விவகாரத்தையே, அவர் மூடி மறைக்கப் பார்க்கிறார் என்கிறார்கள்.''’’
""தான் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக அரசின் மசோதாக்களில் ஒன்றை மட்டும், தற்போது கவர்னர் ஆர்.என்.ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறாரே?''’’
""தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாக்களில் 15-ஐ, பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் கவர்னர். அதனால், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் தரவேண்டும் என்று, தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அப்படி நிலுவையில் உள்ள 15 மசோதாக்களில், தனியார் கல்லூரிகள் மீது வரும் குற்றச்சாட்டுகள் ஏதேனும் நிரூபிக்கப்பட்டால், அந்தக் கல்லூரியை அரசுடைமையாக்கலாம் என்ற மசோதாவும் அடங்கும். இப் போது இதை மட் டும், கவர்னர் குடி யரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறார். காரணம், கல்வி என்பது மத்திய அர சின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் ஒன்றிய அரசே இது குறித்து முடிவெடுக்கட்டும் என்றுதான் இதை அனுப்பியிருக்கிறாராம் கவர்னர். கிடப்பில் வைத்திருக்கும் மிச்சமுள்ள 14 மசோதாக்களுக்கும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கவர்னர் தாலாட்டு பாடப்போகிறாரோ என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.''’
""ராமஜெயம் வழக்கு விறுவிறு கட்டத்தை எட்டியிருக்குதே?''’
""ஆமாங்க தலைவரே, அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் 2012 மார்ச்சில் படு கொடூரமாகக் கொல்லப் பட்டார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு, சமீபகாலமாகத்தான் இது தொடர்பான துப்புகள் துலங்க ஆரம்பித்திருக்கிறது. எஸ்.பி. ஜெயகுமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வுப் பிரிவு, இதை விசாரித்துவரும் நிலையில், சந்தேகத் துக்குரிய தமிழக ரவுடிகள் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த, திருச்சி ஜே.எம்-6 நீதிமன்ற நீதிபதி சிவகுமார் அனுமதி கொடுத்தார். அதன்பேரில் சாமிரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர், நாராயணன், சிவா, கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில் ஆகிய 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த, ஸ்பெஷல் அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அங்கிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்ததால், முதற்கட்டமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் அவர்களில் நால்வருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.'' ’’
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட டேஞ்சரஸ் குற்றவாளிகள் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்கள். அவர்களில் ஒருவனான சபரி, உடல்வெறியால் தன்னுடன் சிறையில் இருக்கும் மற்றவர்களிடம் ஓரினச் சேர்க்கையில் பலவந்தமாக ஈடுபட, இந்த விவகாரத்தால், மற்றவர்களை 7ஆம் பிளாக்கில் பிரித்துப் போட்டிருக்கிறார்கள் சிறைக் காவலர்கள். இதன் பிறகும் அடங்காத சபரி, புதிதாக சிறைக்கு வரும் கைதிகளுக்கும் சில்மிஷ டார்ச்சர் கொடுக்கத் தொடங்கியிருக் கிறான். இதைப் பார்த்த மற்ற கைதிகள், சபரியை கொத்தாகத் தூக்கிச் சென்று மரண அடி கொடுத்திருக்கிறார்களாம். இது சிறைக்குள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.''