தமிழக அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தேவையான அனைத்து விதமான எலெக் ட்ரானிக்ஸ் ஐட்டங்களையும் கொள்முதல் செய்து கொடுத்து வருகிறது எல்காட் நிறுவனம். மேலும், தமிழக அரசின் இலவச கலர் டி.வி., இலவச லேப்டாப், இலவச மிக்சி, மின்விசிறி, கிரைண் டர் உள்ளிட்ட இலவச திட்டங் களும் எல்காட் நிறுவனம் மூல மாகவே நடைமுறைப்படுத்தப் பட்டன. மிக முக்கியமான இந்த நிறுவனத்துக்கு தற்போது மூடுவிழா நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திட்டமிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சென்னை நந்தனத்தை தலைமையிட மாகக் கொண்டு இயங்கிவரும் எல்காட் நிறுவனம், தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உமாசங்கர் ஐ.ஏ.எஸ். இருந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபம் அதிகரித்தது. உமாசங்கருக்கு பிறகு எல்காட் எம்.டி.யாக வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெரும் பாலும் ஊழல் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்களே தவிர, நிறுவனத்தின் வளர்ச்சிக்கோ, லாபத்தை அதிகரிக்கச் செய்யவோ முயற்சிக்கவே இல்லை.
இப்படிப்பட்ட சூழல்களில் தற்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எடுத்துள்ள முடிவு, நிறுவனத்தை கடனாளியாக்கி இறுதியில் இழுத்து மூடும் நிலைக்கு ஆளாக்கிடுமோ என்கிற அச்சம் எல்காட் பணியாளர்களிடம் பரவி வருகிறது. கோட்டையிலுள்ள தகவல் தொழில் நுட்பத் துறையிலும் இதே அச்சம் சூழ்ந்துள்ளது.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகப் பெரிய அளவிலான பங்களிப்பை செய்து வருகிறது எல்காட் நிறுவனம். நந்தனத்தில் இருக்கும் தலைமை அலுவலகம் எல்காட் நிறுவனத்துக்கு சொந்த மானது. இந்த இடத்தை காலி செய்து விட்டு எம்.ஆர்.சி. நகரிலுள்ள ஒரு வாடகை கட்டிடத்துக்கு மாறும் திட்டத்தை அமல்படுத்த வேகம் காட்டி வருகிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
அதாவது, ஐ.டி. செக்ரட்டரியாக குமர குருபரன் ஐ.ஏ.எஸ். இருந்தபோது, ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளான 20-க்கும் மேற்பட்ட தனது நண்பர்களை அவுட் சோர்சில் எல்காட்டில் பணியிலமர்த்தினார். இதற்கு எதிர்ப்பு எழுந்தது. வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி. மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தகுதியுள்ளவர்களை வேலைக்கு சேர்க்க வேண்டும் என்கிற குரல்கள் ஒலித்த நிலையில், அதைச் செய்திருந்தால் தி.மு.க. அரசுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும்.
ஆனால் அதைச் செய்யாமல் ஓய்வு பெற்றவர்களை நியமித்தார் குமரகுருபரன். சில மாதங்கள் கழிந்த நிலையில், அப்படி நியமிக்கப்பட்டவர் களுக்கு வசதியான இடம் இல்லை என நினைத்து, அவர்களுக்காகவே எல்காட் நிறுவனத்தை வேறு இடத்துக்கு மாற்ற குமரகுருபரன் திட்டமிட்டு, எம்.ஆர்.சி. நகரில் வாடகைக்கு ஒரு கட்டடத்தைப் பார்த்து முடிவு செய்துவிட்டார்.
இந்த நிலையில், ஐ.டி. செக்ரட்டரியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார் குமரகுருபரன். அவர் இருந்த செக்ரட்டரி பதவியில் தீரஜ்குமார் நியமிக்கப்பட்டார். இதனால் வாடகைக் கட்டிடத்துக்கு மாறும் திட்டம் ஒத்தி வைக்கப் பட்டது. ஆனால், குமரகுருபரனின் அழுத்தம் காரணமாக ஐ.டி. செக்ரட்டரி தீரஜ்குமார், எல்காட் எம்.டி. அனீஷ்சேகர் ஆகியோர் சொந்த கட்டிடத்தில் இயங்கும் எல்காட் நிறுவனத்தை வாடகைக் கட்டிடத்துக்கு மாற்றும் திட்டத்தில் வேகம் காட்டி வருகின்றனர்.
இதற்காக அந்த வாடகைக் கட்டிடத்தில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு புனரமைக்கும் பணிகளை செய்து வருகிறார்கள். மாத வாடகை சுமார் 5 லட்சம் ரூபாய். அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறையிலிருந்து எல்காட் நிறுவனத்தில் நிதிப்பிரிவின் பொதுமேலாளராக டெபுடேசனில் வந்துள்ள கிருபானந்தன் என்ற அதிகாரி, மார்ச் மாதம் எம்.ஆர்.சி. கட்டிடத்துக்கு மாறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். 3 வருட டெபுடேசன் பீரியட் முடிந்தும் இந்தத் திட்டத்தை கவனிப்பதற்காகவே கிருபானந்தனை வைத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே பல்வேறு நிதி நெருக்கடி யில் தத்தளிக்கும் தமிழக அரசு, விரயச் செலவுகளை குறைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக் கிறது. இதையெல்லாம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பொருட்படுத்துவதே இல்லை. நந்தனத்திலிருந்து மாறித்தான் ஆகவேண்டுமானால், எல்காட்டுக்கு சொந்தமான பெருங்குடியிலுள்ள கட்டிடம் விசாலமாக இருக்கிறது. அங்கு மாறலாம்.
அதையெல்லாம் விட்டுவிட்டு, வாடகைக் கட்டிடத்துக்குத்தான் மாறுவோம் என அடம்பிடித்து எல்காட் நிறுவனத்தின் பணத்தை விரயமாக்குகிறார்கள். ஏற்கனவே வருமானமின்றி எல்காட் தடுமாறும் சூழலில், அதனைக் கட னாளியாக்கி மூடுவிழாவுக்குப் பிள்ளையார்சுழி போடுகிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்''’என்று குற்றம்சாட்டுகின்றனர் தகவல் தொழில் நுட்பத்துறையினர்.
ஜெயலலிதா ஆட்சியின் போது கடந்த 2004-ல் இப்படித்தான் இதேபோல எல்காட் நிறுவனத்தை வாடகைக்கு கட்டிடத்துக்கு மாற்ற சம்பந்தப்பட்ட துறையின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்த விவேக்ஹரிநாராயணன் மற்றும் சுதீப் ஜெயின் ஆகியோர் துணிந்தனர். இதனை நக்கீரன் அன்றைக்கும் சுட்டிக்காட்டி எழுதியது.
நக்கீரனை வாசித்த ஜெயலலிதா, வாடகைக்கு மாறும் திட்டத்தை தடுத்த துடன், சம்பந்தப்பட்ட அந்த இரண்டு அதிகாரிகளையும் 24 மணி நேரத்தில் தூக்கியடித்து எல்காட்டை காப் பாற்றினார். அதன்பிறகு கடந்த 20 ஆண்டுகாலமாக எல்காட்டுக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை. இதோ, தற்போது மீண்டும் பிரச்சனை வந்திருக்கிறது. இந்த விவகாரத்தை அறிந்த நிதித் துறைச் செயலாளர் உதயசந்திரன் தடுத்து நிறுத்துவாரா?